சனி, 22 செப்டம்பர், 2012

காந்தியின் திமிர்

காந்தியின் திமிர்:
நண்பர்களே,
என்னுடைய நண்பர் வெங்கடரமணன் கனடாவில் ஒரு லேஸர் விஞ்ஞானியாக இருக்கிறார். தமிழில் சில அற்புதமான அறிவியல் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். பதினைந்தாண்டுகளுக்கு முன்பு அவர் கணிப்பொறிசார்ந்த ஒரு சொல்லாட்சியை உருவாக்கினார் – கொந்தர். ‘Hacker’ என்ற சொல்லின் தமிழாக்கம் அது. கணிப்பொறி நிரல்களைக் கள்ளத்தனமாக ஊடுருவி உடைப்பவர்கள் இவர்கள். நிரல்களை அழிக்கும் நச்சுநிரலிகளை [வைரஸ்] உருவாக்கிப் பரப்புபவர்கள். உலகம் முழுக்க ஒவ்வொரு வருடமும் இவர்கள் பலலட்சம்கோடி ரூபாய் மதிப்புள்ள கணிப்பொறி நிரல்களைப் பயனற்றுப் போகச்செய்கிறார்கள்.
சாதாரணமாக இவர்களை நாம் ஓர் அழிவுச்சக்தியாகத்தான் பார்ப்போம். கணிப்பொறி நிரல் எழுதுவதை ஒரு தொழிலாகக் கண்டால் இவர்கள் அழிவுச்சக்திகள்தான், சந்தேகமே இல்லை. ஆனால், அதை ஓர் அறிவுச்செயல்பாடாகக் கண்டால் கொந்தர்கள் மிகமிக ஆக்கபூர்வமான பங்களிப்பாளர்கள் என்றார் வெங்கடரமணன்.
ஏனென்றால் அறிவுச்செயல்பாடென்பது ஒரு முரணியக்கம் மூலமே முன்னகர முடியும். ஒரு நேர்நிலை இயக்கத்துக்கு அதேயளவு வீச்சுள்ள எதிர்நிலை இயக்கம் தேவை. அந்த எதிர்ச்சக்திதான் இதை செயலூக்கம் கொண்டதாக ஆக்குகிறது. இது தன் குறைகளைக் களைந்து தன்னை முன்னகர்த்திக்கொள்ளச் செய்கிறது. தன்னைத் தானே தாண்டி அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கான சவால்களை உருவாக்குகிறது.
உங்கள் வகுப்பில் உங்களுக்கு சரியான போட்டியாளர் என ஒருவர் இருந்தால் உங்கள் திறமை எத்தனைமடங்கு தீவிரமடைகிறது! மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் போட்டியே இல்லை என்ற அளவுக்கு வளர்ந்து முதலிடத்துக்கு வந்தபிறகு, தாங்களே பணம் செலவிட்டு ஒரு போட்டியாளரை உருவாக்கிக் கொண்டு, அந்தப் போட்டியாளரை எதிர்த்துச் செயல்படுவது ஒரு நிர்வாகவியல் தந்திரம். 1992-இல் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ரோஸ் பெரட் [Ross Perot] என்பவரைப்பற்றி வாசித்தபோதுதான் இந்த விஷயத்தை நான் கேள்விப்பட்டேன். அன்று எனக்குப் பலதளங்களில் ஒரு பெரிய திறப்பாக இருந்தது அந்தச்சேதி.
கொந்தர்கள் என்றால் கொத்திவிடுபவர்கள். பெரிய அணை ஒன்றில் உடைப்பை உருவாக்குபவர்கள். பெரிய சாலை ஒன்றில் பள்ளத்தைத் தோண்டி வைப்பவர்கள். அவர்கள் இதன்மூலம் ஒரு பெரிய அமைப்பை நிலைகுலையச் செய்கிறார்கள். அந்த அமைப்பின் குறைகளை அவர்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் உள்ள ஓட்டைகளையும் விரிசல்களையும் கண்டுபிடித்து உள்ளே சென்று கொத்திவிடுகிறார்கள்.
விளைவாக அந்த அமைப்பு தன்னைத் திருத்திக் கொள்ளவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறது. தன் ஒட்டுமொத்த அமைப்பையே அது மறுபரிசீலனை செய்கிறது. தன் வழிமுறைகளை ஆராய்கிறது. தன்னுடைய சிந்தனைப்போக்கை வேறு பல தடங்களில் செலுத்தி புதியபுதிய விஷயங்களைக் கண்டுபிடிக்கிறது. தன்னைப் புத்தம் புதியதாக மீட்டு எடுத்துக்கொண்டே இருக்கிறது.
கொந்தர்கள் இல்லாவிட்டால் இன்று நாம் வங்கித்தொழிலுக்கு இணையத்தைப் பயன்படுத்தியிருக்க முடியாது. இருபதாண்டுகளாக கொந்தர்கள் இணையத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை உடைத்து உடைத்து சவாலை விட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதற்கு எதிரான செயலாகவே இணையத்தின் எல்லாப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் உருவாகி வந்தன. இப்போதும் கொந்தர்கள் அவ்வப்போது கைவைக்கிறார்கள். உடனே பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் மேம்படுகின்றன.
இன்றுள்ள எல்லா நிரலித்தொழில் வளர்ச்சியிலும் கொந்தர்களின் பங்களிப்புண்டு என்கிறார் வெங்கடரமணன். இன்று பெரிய நிறுவனங்கள் கொந்தர்களை அவர்களே சம்பளம்கொடுத்து உருவாக்குகிறார்கள். தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொள்ள, வளர்ந்து முன்செல்ல.
அசல்சிந்தனையாளர்கள் எல்லாருமே ஒருவகை கொந்தர்கள் என்பதை சுட்டிக்காட்டத்தான் இதைச் சொல்லவந்தேன். மானுடசிந்தனை என்ற மிகப்பெரிய அமைப்பு பல்லாயிரம் வருடங்களாக இருந்துகொண்டிருக்கிறது. அது ஒரு பெரிய நதி போலத் தன் பாதையை உருவாக்கிக்கொண்டு சுழித்துப்பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. அசல்சிந்தனையாளர்கள் என்னும் கொந்தர்கள் அந்த மானுடசிந்தனை என்ற நதியின் கரையை அவ்வப்போது கொந்தி விடுகிறார்கள். விளைவாக நதி நிலைகுலைகிறது. அந்த உடைப்புவழியாகப் பீறிட்டுப் புதிய திசையில் ஓட ஆரம்பிக்கிறது.
அசல்சிந்தனையாளர்கள் நம்மை எப்போதுமே உடைத்துக் கலைக்கிறார்கள். நம்மைக் குழப்பமும் கலக்கமும் அடையச்செய்கிறார்கள். பெரும்பாலான நேரங்களில் எரிச்சலடையச் செய்கிறார்கள். நாம் நம்பி இருப்பவற்றை அவர்கள் உலுக்குவதனால் உருவாகும் மனக்குலைவு அது.
இங்கே ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். நம் இளமைப்பருவத்தில் அதிரடியான கருத்துக்கள் மூலம் நம்மைக் கலங்கடிக்கும் பேச்சாளர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் பலர் உண்டு. அவர்கள் அசல்சிந்தனையாளர்கள் அல்ல. காரணம் அவர்கள் அதுவரையிலான மானுட சிந்தனையை எதிர்கொள்ளவில்லை. நமக்கு மானுடசிந்தனையுடன் பெரிய அறிமுகம் இல்லாத காரணத்தால் சில கருத்துக்கள் மூலம் நம்மை அவர்கள் பாதிக்கிறார்கள், அவ்வளவுதான்.
அந்தக்கருத்துக்களை அவர்கள் ஏற்கனவே இருந்த மானுட சிந்தனையின் பெருக்கில் இருந்து எடுத்துக்கொண்டிருப்பார்கள். நமக்கு அது தெரிந்திருக்காது, அவ்வளவுதான். அது மனித சிந்தனையின் ஒரு துளி, விவாதத்தில் ஒருபக்கம். அதை மிகைப்படுத்தி ஆணியறைந்து சொன்னால் இளமையில் நாம் நிலைகுலைவோம். நான் சொல்வது அதை அல்ல.
உதாரணமாக, நமக்குச் சின்ன வயதில் கடவுள் பக்தி இருக்கும்போது ஒரு நாத்திகர் கடவுள் மறுப்பு பேசி நம்மைக் குலைக்கலாம். அது ஒருவேளை நமக்கு முக்கியமானதாகவும் இருக்கலாம். ஆனால் அது அசல்சிந்தனையே அல்ல. ஏனென்றால் நாத்திகம் என்றும் இருந்துகொண்டிருக்கும் சிந்தனை. புதியதல்ல.
ஆனால் அசல்சிந்தனையாளன் புத்தம்புதியதாக ஒன்றைச் சொல்கிறான். அதுவரை மனிதசிந்தனையில் இல்லாத ஒன்றாக அது இருக்கலாம். அல்லது அதுவரை இருந்த ஒரு விதை முளைத்து வந்ததாக இருக்கலாம். அல்லது இருந்த ஒன்றின் புத்தம்புதிய வடிவமாக இருக்கலாம். ஆனால் அவன் ஒரு புதிய கொந்தலைச் செய்கிறான். நம் சிந்தனையில் அல்ல, மனித சிந்தனையில்.
அப்படிப்பட்ட அசல் சிந்தனையாளர்களில் ஒருவர் காந்தி. இருபதாம் நூற்றாண்டின் மகத்தான முதற்சிந்தனையாளராகவே எப்போதும் அவர் கருதப்படுகிறார். உலகம் முழுக்க. அவர் வாழ்ந்த போதும் சரி, மறைந்தபின் இந்த முக்கால் நூற்றாண்டுக்காலத்திலும் சரி, ஒவ்வொருநாளும் பல கோணங்களில் விவாதிக்கப்படும் மாபெரும் முதற்சிந்தனையாளர் காந்தி. காந்தியின் சிந்தனைகளின் ஒவ்வொரு துளியும் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த உலக சிந்தனையாளர்களால் மிகத்தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.
காந்தியைப்பற்றி எவ்வளவோ வாசித்து, பேசியிருக்கிறேன். இன்றைய காந்தி என்றபேரில் ஒரு நூல் வெளிவந்திருக்கிறது. இன்னும் ஒரு நூல் அளவுக்குத் தொகுக்கப்படாத கட்டுரைகள் இருக்கின்றன. ஆனாலும் அனேகமாக தினமும் காந்தியை எங்கோ ஒரு இடத்தில் புத்தம்புதிதாகக் கண்டுகொண்டிருக்கிறேன். சில சமயம் விசித்திரமாக, சிலசமயம் விபரீதமான கோணத்தில் எல்லாம் காந்தி நம் சிந்தனைக்குத் தோற்றமளிப்பார்.
இது அசல் சிந்தனையின் ஒரு இயல்பு. அது நம்முடைய மூளை என்னும் வைக்கோல்போருக்குள் ஒரு சிறு தீப்பொறியைப் போட்டுவிடுகிறது. நம் மூளை என்னும் பாலையில் விதைகளை வீசி விடுகிறது. எங்கோ எப்போதோ சிறு காற்று கிடைத்தால் கொஞ்சம் நீர் கிடைத்தால் அது முளைக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் அசல்சிந்தனையாளர்கள் என நான் நினைக்கும் பலர் எனக்கு இப்படித்தான் அனுபவமாகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பவே முடிவதில்லை.
எனக்கு தல்ஸ்தோய் அப்படிப்பட்டவர். நான் இருபதாண்டுகளாக அவரிடமிருந்து தப்ப முயன்றுகொண்டிருப்பவன். ஹென்றி தோரோ அப்படிப்பட்டவர். அதற்கு முன் நீட்சேயும் ஹெகலும் அப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் எனக்கு தங்கள் சிந்தனைகளைத் தரவில்லை. நானே சிந்திப்பதற்கான கட்டாயங்களைத் தந்தார்கள். சிந்திக்காமல், என்னை நானே மீட்டுக் கட்டிக்கொள்ளாமல், முன்னகர முடியாது என்ற நிலையை உருவாக்கினார்கள். அந்தக் கட்டாயம் பலசமயம் எரிச்சலூட்டுவது. பலசமயம் பொறுமை இழக்கச்செய்வது.
அசல்சிந்தனையாளர்களின் இயல்பை நான் இப்படிச்சொல்கிறேன். அவர்களின் சிந்தனையில் ஒருபகுதி நம்மை மனக்கிளர்ச்சி அடையச்செய்யும். பெரும் கனவுகளையும் இலட்சியங்களையும் நம்முள் நிறைக்கும். இன்னொருபகுதி நம்முள் இருக்கும் சிந்தனைகளை உடைத்துச் சிதறடித்து நம்மை வெறுமையில் கொண்டு சென்று விடும். அந்தத் துண்டுகளைப் பொறுக்கி நாமே நம் அகத்தைத் திரும்பக் கட்டி எழுப்பவேண்டும்.
அசல்சிந்தனையாளர்களின் சிந்தனைகளில் ஒரு பகுதி நமக்கு கேனத்தனமாகத் தோன்றும். பொருத்தமற்றதாகவும் முட்டாள்தனமாகவும் வெற்றுப்பிடிவாதமாகவும் தோன்றும். இன்னொரு பகுதி நமக்குக் கொஞ்சம் கூடப் புரியாததாக இருக்கும். வெறும் உளறலா என்றுகூடத் தோன்றும். இதற்கு விதிவிலக்கான அசல்சிந்தனையாளர்களே இல்லை.
இந்த அம்சம்தான் அந்தச் சிந்தனையாளரை நாம் எளிதில் தாண்டிவிட முடியாதபடி செய்கிறது. ‘இதென்னடா இது’ என்று நாமே அதைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறோம். பல கோணங்களில் அதைப் பரிசீலிக்கிறோம். அதாவது நமக்குள் அவர்களின் சிந்தனைகளில் ஒருபகுதி செரிக்காமல் இருந்துகொண்டே இருக்கிறது. நம் மனம் அந்தச் சிந்தனைகளை செரிக்கப் போராடிக்கொண்டே இருக்கிறது.
காந்தியிடம் இந்த இயல்பு உண்டு. காந்தியைப்பற்றிப் பேசும்போது என்னிடம் காந்தியவாதியும் மாபெரும் கட்டிடக்கலைஞருமான லாரி பேகர் சொன்னார் ‘அவருக்கு எரிச்சலூட்டுவதில் பெரிய ஆனந்தம் உண்டு. நாம் எரிச்சல் கொண்டால் அவர் முகத்தில் ஒரு புன்னகை வரும்.’
பின்பொருமுறை காந்திகிராம நிறுவனரான ராமச்சந்திரன் சொன்னார் ‘அனேகமாக காந்தியின் எல்லா சீடர்களும் காந்திமீது ஒருபோதாவது கடும் கோபம் அடைந்திருப்பார்கள். அவர் முன் கணக்குகளை வீசி எறிந்துவிட்டு இனிமேல் உங்கள் முகத்தில் விழிக்க மாட்டேன் என்று சொல்லிக் கிளம்பிச்சென்றவர்கள் பலரை எனக்குத் தெரியும். அவர்களெல்லாம் திரும்பியும் வந்திருக்கிறார்கள். நானும் ஒருமுறை அவரை நிராகரித்துவிட்டு சபர்மதியில் இருந்து கிளம்பி வந்தேன்.’
காந்தியிடம் இருந்த அந்த அம்சம் என்ன? அவரை அணுகிய எவருமே நிம்மதியாக இருந்ததில்லை. அவர்களை காந்தி கலைத்துக்கொண்டே இருந்தார். அவர் வாழ்ந்தபோது அவரது சமூகத்துக்கும் அவரது சூழலுக்கும் மிகப்பெரிய தொந்தரவாக இருந்தார். ஒருகட்டத்தில் அடிப்படைவாதிகள் அவரைக் கொல்வதற்கும் அவர் அளித்த எரிச்சல்தான் காரணம்.
அகமதாபாத் அருகே சபர்மதி ஆசிரமத்தை காந்தி அமைத்தார். அன்றைய குஜராத் சாதிவெறியில் ஊறிய பழைமைவாத நகரம். அங்கே தன் ஆசிரமத்தில் தாழ்த்தப்பட்டவர்களை சேர்த்துக்கொண்டார், அவர்கள் உள்ளிட்ட அனைவரும் அனைவர் உணவையும் சமைக்கவும் அனைத்துக் கழிப்பறைகளையும் சுத்தம்செய்யவும் சொன்னார். சரி, அது அவரது கொள்கை. ஆனால் ஆசார இந்துக்கள் ஆசிரமத்துக்கு நன்கொடை தரவேண்டும் என்றும் அவர் எதிர்பார்த்தார்.
காந்தி எழுதுகிறார், இந்த ஆசிரமம் இந்துக்களை சீர்திருத்தும் நோக்கம் கொண்டது. ஆகவே இந்துக்கள்தான் இதற்குப் பணம்தரவேண்டும். அது அவர்களின் கடமை. அவர்கள் தராவிட்டால்? பட்டினிகிடந்து சாகவேண்டும், அவ்வளவுதான். என்னதான் எரிச்சலூட்டினாலும் கண்ணெதிரே ஒரு சாத்வீக கும்பல் பட்டினி கிடப்பதை சகிக்க முடியாமல் வேறுவழியில்லாமல் அதே குஜராத் ஆசாரவாத இந்து சமூகம் அவருக்கு நிதி கொடுத்தது. அதை மகிழ்ச்சியுடன் தன் சுயசரிதையில் காந்தி பதிவுசெய்கிறார்.
இதுதான் திமிர்! நான் இதை அறத்திமிர் என்பேன். ஞானத்திமிர் என்பேன். இந்தத் திமிர்தான் அவரது உயிரைப் பறித்தது. நண்பர்களே, புனிதமான திமிர் இது. சிந்தனையாளன் ஒருவன் தன் ஆன்மாவை நெருப்பாக எரித்துப் பேணிக்கொள்ளவேண்டிய திமிர் இது. இன்று காந்தியிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது இதுதான்.
நீங்கள் பெரும்பாலும் காந்தியை ஒரு சிந்தனையாளராக அறிந்திருக்க மாட்டீர்கள். அவரது அரசியல் போராட்டம் பற்றிய ஒரு பள்ளிக்கூட பாடப்புத்தகம் சார்ந்த அறிமுகம் மட்டும்தான் உங்களிடம் இருக்கும். அதை வைத்தே அவர்மீதான எல்லா விமர்சனங்களையும் உருவாக்கியிருப்பீர்கள். காந்தி கிட்டத்தட்ட எழுபதாயிரம் பக்கங்கள் எழுதியவர். உலக சிந்தனையாளர்களில் மிக அதிகமாக எழுதியவர்களில் ஒருவர்.
காந்தியின் சிந்தனைகள் அரசியல் மதம் சமூகம் போன்ற தளங்களில் மட்டுமல்லாமல் இலக்கியம், கட்டிடக்கலை, மருத்துவம் என பலதளங்களில் பரவிக்கிடக்கின்றன. இன்றைய நூற்றாண்டின் மையச்சிந்தனையோட்டமாக உள்ள சூழியல், தாக்குப்பிடிக்கும் பொருளியல், இயற்கைவேளாண்மை ஆகியவற்றுக்கான அடிப்படைகளை அமைத்த முன்னோடி அவர். இத்தனைக்கும் அப்பால் அவரை நாம் மீண்டும் மீண்டும் புதிய தளங்களில் கண்டுபிடித்தபடியே இருக்கலாம்.
காந்தியின் சிந்தனைகளை சுருக்கமாக உங்களுக்குச் சொல்வது என்னுடைய நோக்கம் அல்ல. ஏனென்றால் அது எப்போதுமே அவரைத் தவறாகப் புரிந்துகொள்ளவே வழிவகுக்கும். எந்தச் சிந்தனையாளரையும் அவரது சிந்தனைகளை நேரடியாக வாசித்துப் பொருள்கொள்வதே சரியானதாகும்.
நான் சொல்ல வருவது, காந்தி நம்முடைய காலகட்டத்தின் சிந்தனையின் ஒட்டுமொத்த அமைப்பில் உருவாக்கும் ‘கொந்தல்’களைப்பற்றி. அந்தக்கொந்தல்களை அவர் செய்யக் காரணமானது என்ன? நான் சிந்திக்கிறேன், என்னுடைய சிந்தனையில் இதுவே சரி என்ற ஆன்மீகமான திமிர்தான் இல்லையா?
ஒட்டுமொத்த மானுடச்சிந்தனைக்கும் மறுபக்கமாக, ஒட்டுமொத்த சமகாலச் சிந்தனைக்கும் எதிர்விசையாக தன்னை நிறுத்திக்கொள்ளத் தூண்டுவது இந்தத் திமிர்தான். இந்தத் திமிர் இருந்தமையால்தான் காந்தி அடக்கத்தின் உருவாக இருந்தார். நாம் எதில் எல்லாம் அகங்காரம் கொள்கிறோமோ அனைத்தையும் அவர் துறந்தார். எங்கும் எவர் முன்னும் தணியவும் பணியவும் தயாராக இருந்தார். ஆனால் மானுட வரலாற்றின் முன்னால் மட்டும் நிமிர்ந்து நின்றார்.
காந்தியின் அந்தப் புனிதமான திமிரை அவரது ஒவ்வொரு செயலிலும் நாம் காணலாம். ஒருமுறை வைஸ்ராயுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லும் நேரத்தில் காந்தி தலைக்குக் களிமண் பத்து போட்டிருந்தார். அவரே அவருக்குச் செய்துகொண்ட சிகிழ்ச்சைமுறைகள் அவை. அந்தக் களிமண் பத்துடன் கிளம்பி வைஸ்ராய் மாளிகைக்குச் சென்று பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார்.
விசித்திரமாகத் தோன்றலாம். அதிலும் ஒரு சரியான டை கட்டாவிட்டால் வெள்ளைக்காரன் நம்மைப்பற்றி என்ன நினைப்பான் என்றே எண்ணிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கையில் இது கிறுக்குத்தனமாகவே தோன்றலாம். ஆனால் நாம் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். வேறு எந்த இந்தியத்தலைவரை விடவும் வெள்ளையர்களின் சம்பிரதாயங்களை அறிந்தவர் காந்தி. அவரது அந்தச்செய்கைக்குப்பின்னால் உள்ளது அபாரமான ஒரு சுய உணர்வு.
‘நான் காந்தி. இந்த நாட்டின் கோடானுகோடி மக்களின் பிரதிநிதி. நான் நீ நினைக்கும்படி வரமுடியாது. நான் நினைக்கும்படித்தான் இருப்பேன்’ என்ற பிரக்ஞை அளித்த தன்னம்பிக்கை அது. ‘என்னுடைய சிந்தனைகளும் என் வழிமுறைகளும் உன்னுடைய அங்கீகாரத்தால் நிலை நிற்பவை அல்ல. அவற்றுக்குச் சொந்தமாக வரலாறுண்டு’ என்னும் சவால் அது.
ஆச்சரியம் என்னவென்றால் பிரிட்டிஷ்காரர்களின் எல்லா ஆசாரமரியாதைகளையும் பயபக்தியுடன் கடைப்பிடித்த இந்தியத்தலைவர்களை பிரிட்டிஷார் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அவர்கள் காந்தியை மட்டுமே மதித்தார்கள். இன்று அன்றைய பிரிட்டிஷ் வைஸ்ராய்கள் மற்றும் ராஜதந்திரிகளின் அந்தரங்கக் குறிப்புகள் பிரசுரமாகின்றன. அவையெல்லாம் அவர்கள் காந்தி மீது கொண்டிருந்த மதிப்பையே காட்டுகின்றன.
அந்தத் திமிரை சிந்தனையின் தற்சார்பு என்று நான் வரையறை செய்வேன். காந்தியை காந்தியாக்கியது அதுவே. காந்தியின் எல்லா சிந்தனைகளையும் புரிந்துகொள்வதற்கான முதல் தொடக்கமாக இருக்கவேண்டியது அவரது இந்தத் தற்சார்பைப்பற்றிய நம் புரிதலே.
இன்றைய உலகச்சூழலில் நீங்கள் உங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்றால் கற்றுக்கொள்ளவேண்டிய முதல் பாடமே இதுதான். நீங்கள் வழிநடத்துபவரா பின்பற்றுபவரா என்ற கேள்விதான் முதன்மையானது. பின்பற்றுபவர் என்றால் விட்டுவிடுங்கள். உங்களை நோக்கி நான் பேசவில்லை. வழிநடத்துபவர் என்றால் முதன்மையாக உங்களுக்கு வேண்டிய தகுதியே இதுதான்.
இன்று உலகிலுள்ள கோடானு கோடிபேர், இந்தியாவிலும் சீனாவிலும், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பலகோடி இளைஞர்கள் கிட்டத்தட்ட ஒரே கல்வியைக் கற்கிறார்கள். ஒரேவகையான உலகப்புரிதலை அந்தக் கல்வி அவர்களுக்கு அளிக்கிறது. அந்தப் பிரம்மாண்டமான தொழிற்சாலையில் இருந்து ஒரே வகையான உற்பத்திப் பொருட்களாக வெளியே வருகின்றனர். நீங்களும் அதில் ஒருவர். உங்களுக்கென எந்த சுயசிந்தனையும் இருப்பதில்லை. சுய அடையாளமும் இருப்பதில்லை.
உண்மையில் நீங்கள் சுயமாகச் சிந்திப்பதாக நினைப்பதெல்லாம் அதேபோல கிட்டத்தட்ட அதே சொற்களில் உலகம் முழுக்க மற்ற அத்தனை பேரும் நினைப்பதுதான். நேரமிருந்தால் இணையத்தில் தேடிப்பாருங்கள்: நீங்கள் நினைப்பதை எல்லாம் எல்லாருமே சொல்லிக்கொண்டிருப்பார்கள். கருத்துக்கள் மட்டும் அல்ல. உணர்ச்சிகள் கலாய்ப்புகள், நக்கல்கள் கூட உலகம் முழுக்க ஒரேமாதிரி இருக்கின்றன.
ஆனால் நீங்கள் அந்தப் பொதுமையை மீறி உங்களுக்கென எதையாவது உருவாக்கிக் கொண்டால் அதுதான் உங்கள் சுயம். அப்படி உருவாக்கிக்கொண்ட சுய அடையாளம் மூலமே நீங்கள் உங்களால் மட்டுமே இந்த சமூகத்துக்குக் கொடுக்கவேண்டிய பங்களிப்பைக் கொடுக்கமுடியும். அப்படிக் கொடுத்தால் மட்டுமே சமூகத்தில் உங்களுக்கான இடம் உருவாகும். நீங்கள் கணிப்பொறி நிபுணராக இருக்கலாம். தொழில்முனைவோராக இருக்கலாம். எழுத்தாளராக இருக்கலாம். யாராக இருந்தாலும் இதுதான் விதி.
காந்தி முறையான உயர்தரக் கல்வியைப் பெற்றவர். அவரது காலகட்டத்தில் கிடைக்கும் மிக உச்சகட்டக் கல்வி அது. அந்தக்கல்வியைக் கற்ற அனைவருமே செல்லக்கூடிய ஒரு பொதுவழி உண்டு. ஐரோப்பியச் சிந்தனை, ஐரோப்பிய நாகரீகம் ஆகியவற்றை மானுடத்தின் உச்சகட்ட சாதனையாக நினைப்பது. உலகமே பின்பற்றியாகவேண்டிய முன்னுதாரணமாக நினைப்பது. உலகத்தை முழுக்க அதனடிப்படையில் மாற்றியமைக்க முயல்வது.
அந்தப் பொதுப்போக்கில் காந்தி இணையவே இல்லை. காந்தியை காந்தியாக ஆக்கியது அந்தப் பிடிவாதமான தற்சார்புதான். அவரைப்போல ஐரோப்பியக் கல்வி கற்ற அத்தனைபேரும் நவீன ஐரோப்பியப் பண்பாட்டை அறிமுகம் செய்துகொண்டதுமே அவர்களின் அதுவரையிலான வளர்ப்பில் இருந்து பெற்றுக்கொண்ட எல்லாவற்றையும் தூக்கி வீசினார்கள். புதியதாகக் கல்லூரிக்கு வேட்டியுடன் படிக்க வரும் கிராமத்து மாணவன் அடுத்த வாரமே கிழிந்த ஜீன்ஸ் போட்டு ஒற்றைக்கம்மல் அணிந்துகொண்டு வருகிறானே அதைப்போல.
காந்தி அதைச் செய்யவில்லை. அவர் அவருக்கு அவருடைய இளமைப்பருவத்தில் இருந்தும் அவர் வாழ்ந்த சூழலில் இருந்தும் கிடைத்த பண்பாட்டையும் சிந்தனைகளையும் கைவிட மறுத்தார். கைவிடவேண்டும் என்றால் உரிய முறையில் என்னை நீங்கள் அவை பிழை என்று ஏற்கச்செய்யவேண்டும் என்றார். ‘நான் ஒரு கீழைநாட்டவன், ஓர் இந்தியன், ஓர் இந்து. எனக்கென்று பல்லாயிரம் வருடப் பழைமைகொண்ட ஒரு பண்பாட்டுமரபு இருக்கிறது. அதில் பிறந்து வளர்ந்த நான் இதுவரையிலான என் சொந்தவாழ்க்கையில் இருந்து கற்றுக்கொண்ட பல விஷயங்கள் உள்ளன. நான் அவற்றைக் கைவிடவேண்டுமென்றால் எனக்கு அவற்றின் குறைபாடுகளை நீங்கள் ஐயம்திரிபற விளக்கவேண்டும். அவற்றைவிட மேலான ஒன்றை அளிக்கவேண்டும்’ என்று அவர் அடம்பிடித்தார்.
காந்தியின் சுயசரிதை முழுக்க அவரிடம் இந்தப் பிடிவாதம் இருப்பதைக் காணலாம். சைவ உணவுப்பழக்கம், சாதிமுறை எல்லாவற்றைப்பற்றியும் அவர் இதேபோன்ற உறுதியான முடிவுடன் இருக்கிறார். அன்று லண்டனுக்கு வரும் ஒரு இந்தியர் பத்தே நாளில் சைவ உணவைக் கைவிடுவார். இந்தியச்சாதிமுறை, மதநம்பிக்கைகள் ஆகியவற்றை நிராகரித்துப் பேச ஆரம்பிப்பார். ஊர்திரும்பினாலும் அவர் லண்டன்வாசியாகவே பேசிக்கொண்டிருப்பார். ஆனால் சொந்தவாழ்க்கையில் அந்தப் பேச்சின் எந்தச் சாயலும் இருக்காது.
ஆனால் காந்தி அசைவ உணவு உண்டால்தான் நன்றாக வாழமுடியும் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை என்று அனைவரிடமும் வாதிட்டார். கிட்டத்தட்ட உயிரைப்பணயம் வைத்து சைவ உணவை உண்டார். அதேபோல இந்தியச் சாதியமைப்பு முழுக்க முழுக்க அநீதியின்மீது கட்டப்பட்டதாக இருக்க நியாயமில்லை, அப்படியென்றால் அது இத்தனைநாள் நீடித்திருக்காது, அதற்கு ஒரு பொருளாதாரப் பங்களிப்பு இருக்கும் என்று சொன்னார்.
தன்னுடைய சொந்த அனுபவத்துக்குள், தன்னுடைய மரபுக்குள் செல்லுபடியாகக்கூடிய சிந்தனைகள் மட்டுமே தனக்குத்தேவை என கறாராக இருந்தார் காந்தி. ஆனால் மூர்க்கமான பழைமைவாதியாக இருக்கவும் இல்லை. தன்னை ஒரு சிந்தனை ஏற்றுக்கொள்ளச் செய்தால் அதை முழுமூச்சுடன் ஏற்றுக்கொள்ளவும் அதை கடைசிவரை தீர்க்கமாகப் பின்பற்றவும் அவர் தயங்கவில்லை. உதாரணமாக, அவரால் கடைசிவரை அசைவ உணவுப்பழக்கத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஆனால் இந்தியச் சாதியமைப்பு முழுக்கமுழுக்க தீங்கானது, தேவையற்றது, ஒழிக்கப்படவேண்டியது என்ற முடிவுக்கு வந்தார். அதை சொந்தவாழ்க்கையில் ஒவ்வொரு தருணத்திலும் பின்பற்றினார்.
இதுதான் தற்சார்பு. காந்தியின் எல்லாச் சிந்தனைகளையும் இந்த அம்சம் தீர்மானிக்கிறது. உலகமே ஒன்றைச் சிந்தித்தாலும் காந்தி அதை ஏற்றுக்கொண்டாகவேண்டும் என்பதில்லை. ‘அனைவருமே இதைத்தான் சொல்கிறார்கள். என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. உலகம் என்ன சொன்னாலும் நான் என் அந்தராத்மா சொன்னபடித்தான் நடப்பேன்’ என்ற வரியை காந்தியின் எழுத்துக்களில் மீண்டும் மீண்டும் காணலாம்.
காந்தியின் காலகட்டத்தில் உலகம் முழுக்க ஓங்கியிருந்த இரண்டு நம்பிக்கைகள் என்றால் ஒன்று தொழில்நுட்பம் உலகத்தைக் காப்பாற்றும் என்ற எண்ணம்,இரண்டு, சமூக மாற்றத்துக்கு வன்முறை இன்றியமையாதது என்ற எண்ணம். இன்றும்கூட நம்மில் மேலோட்டமாக சிந்திப்பவர்களிடமிருப்பது இந்த நம்பிக்கைகள்தான்.
காந்தி இருபதாம் நூற்றாண்டின் தொழில்நுட்பம் அதன் அதிதீவிர வளர்ச்சியைக் கண்டுகொண்டிருந்த லண்டனில் வாழ்ந்தவர். அன்று லண்டனுக்குச் செல்பவர்கள் எல்லாருமே அந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டு பிரமித்து அது இன்னும் சில வருடங்களில் உலகுக்கே சோறும் சமாதானமும் கொண்டுவரும் என்று நம்பினார்கள். காந்தியின் முதல்சீடரான நேருவே அந்த நம்பிக்கைதான் கொண்டிருந்தார், கடைசிவரை.
ஆனால் காந்தி தொழில்நுட்பம் வெறும் கருவிதான் என்று நினைத்தார். அந்தக்கருவி யாரால் எதற்குப் பயன்படுத்தப்படுகிறதென்பதே முக்கியமானது. அந்த உயர்தொழில்நுட்பம் தொழிலாளர்களை மிருகங்களிலும் கீழான அடிமைவாழ்க்கை வாழ்வதற்கே கொண்டு செல்கிறது என்பதை அவர் கவனித்தார். நவீனத்தொழில்நுட்பம் உலகிலுள்ள ஆதிக்கசக்திகளுக்கு இன்னும் அதிகமான ஆயுதவலிமையை அளிக்கும் என்றும் உலகளாவிய சுரண்டலை இன்னும் அதிகரிக்கும் என்றும் அவர் கணித்தார்.
தொழில்நுட்பம் பெருந்தொழில்களை உருவாக்குகிறது. பெருந்தொழில் பெரும் லாபவெறியை உருவாக்குகிறது. லாபவெறி மிதமிஞ்சிய நுகர்வை கட்டி எழுப்புகிறது. மிதமிஞ்சிய நுகர்வு இயற்கையை அழித்து மனிதனை அழிவுக்குக் கொண்டு செல்கிறது என்று காந்தி வாதாடினார்.
1909-லேயே காந்தி தன்னுடைய ஹிந்து சுயராஜ்யம் என்ற நூலில் இந்தச் சிந்தனைகளை முன்வைத்திருந்தார். அன்று உலகில் எங்கும் சூழியல் என்ற சிந்தனை வரவில்லை. தாக்குப்பிடிக்கும் பொருளியலை எவரும் அறிந்திருக்கவில்லை. இயற்கைச்சமநிலை பற்றிய எண்ணமே இருக்கவில்லை.
மாறாக இயற்கையை ஒரு அடிமையாகவே அன்றைய சிந்தனையாளர்கள் நினைத்தார்கள். இயற்கையை ஒட்டச்சுரண்டி மனிதன் தன் வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். இயற்கை மனிதனுக்காகவே என்று வாதிட்டார்கள். நுகர்வே மனிதனின் இன்பம் என்றார்கள். அதிக நுகர்வே வளர்ச்சி என்று வகுத்தார்கள். மார்க்ஸிய சிந்தனையின் சாராம்சமே இந்த மனிதமைய வாதம்தான். உலகின் பெரும்பாலான இயற்கை வளத்தை அழித்தவை, அழித்துக்கொண்டிருப்பவை மார்க்ஸிய சிந்தனையின் அடிப்படையில் அமைந்த அரசுகளே.
நூறாண்டுகளுக்கு முன் ‘வளர்ச்சி’ என்றாலே தொழில்நுட்ப வளர்ச்சி என்றுதான் உலகமெங்கும் நம்பப்பட்டது. அதாவது இயற்கை என்ற சக்தியை மனிதன் வெல்வதே வளர்ச்சி. இயற்கைச்சக்திகளுடன் மனிதன் போர் செய்வதை அன்றைய இலக்கியமும் தத்துவமும் கொண்டாடின.
அச்சூழலில் காந்தி எப்படி அணுகப்பட்டிருப்பார். யோசித்துப்பாருங்கள். அவர் ஒரு பழைமைவாதியாக, நவீன உலகத்தைப் புரிந்துகொள்ளாத கிறுக்கராக எண்ணப்பட்டார். காந்தியைச் சுற்றி இருந்த ஐரோப்பியக்கல்வி பெற்ற அரசியலாளர்கள் காந்தியின் அபாரமான மக்கள்செல்வாக்கைக் கண்டுதான் அவருடன் இருந்தார்கள். உள்ளூர அவர்கள் அந்த அரைநிர்வாணக் கிழவருக்கு நவீன சிந்தனைகள் புரியவில்லை என்ற எண்ணம் கொண்டிருந்தார்கள்.
இரண்டாம் உலகப்போருக்குப்பின் உலகின் கண்கள் திறந்தன. நவீனத்தொழில்நுட்பத்தின் அழிவுத்தன்மையைப்பற்றிய எண்ணம் உலகமெங்கும் உருவாயிற்று. அது ஒரு ஆக்கசக்தி என்ற எண்ணம் மறைந்தது. அதன்பிறகுதான் உலகம் மெல்ல மெல்ல காந்தியை நோக்கி வர ஆரம்பித்தது. அப்போது காந்தி இல்லை, அவரது சிந்தனைகள் மட்டும்தான் இருந்தன.
காந்தி தொழில்நுட்பம் பற்றியும், இயற்கையின் சமநிலை பற்றியும், தாக்குப்பிடிக்கும் உற்பத்திமுறை பற்றியும் பேசிய விஷயங்களை நவீன ஐரோப்பியச் சிந்தனையின் மொழியைப் பயன்படுத்தி விரிவாக விளக்கியவர் என்று பிரிட்டிஷ் பொருளியலாளரான இ.எஃப்.ஷுமாக்கர் [E.F.Schumacher]-ஐச் சொல்லலாம். அவரது சிந்தனைகள் வழியாக ஐரோப்பா முழுக்க நவீனத் தொழில்நுட்பமும் லாபவெறியும் உலகை அழிவுக்குக் கொண்டுசெல்லும் என்ற விழிப்புணர்வு உருவாக ஆரம்பித்தது.
அதன்பின் பல சிந்தனையாளர்களைச் சொல்லமுடியும். நான் முக்கியமாக அமெரிக்கச் சிந்தனையாளரான இவான் இலியிச்சைச் சுட்டிக்காட்டுவேன். ஷுமாக்கரும் இவான் இலியிச்சும் இந்தியாவுக்கு வந்து, ஏன் தமிழ்நாட்டுக்கு வந்து, மதுரையில் காந்திகிராமத்திலும் டி.கல்லுப்பட்டியில் ஜெ.சி.குமரப்பாவுடனும் தங்கி காந்தியைப்பற்றி ஆராய்ந்தவர்கள். இங்கிருந்து சென்று உலகை நோக்கிப் பேசியவர்கள். நாம் அப்போது காந்தியைப் பழைய கிழவர் என்று ஒதுக்கிவிட்டு ஐரோப்பிய நவீனத் தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்வதில் தீவிரமாக இருந்தோம்.
இன்று உலகம் முழுக்க உள்ள பசுமை இயக்கங்களின் பிதா காந்திதான். அவரே விதை. இன்றைய உலகின் சிந்தனை என்று எதையாவது சொல்லமுடிந்தால் அது சூழியல்தான். டேவிட் அட்டன்பரோவின் இயற்கைபற்றிய ஆவணப்படங்களைப் பார்க்காதவர்கள் உங்களில் சிலரே. அவர் தன் ஆவணப்படங்கள் வழியாக முன்வைப்பவை ஐரோப்பிய பசுமைச்சிந்தனைகளைத்தான். அவை நம்மிடமிருந்து, காந்தியிடமிருந்து சென்றவை.
காந்தியின் சிந்தனைகள் 1972-இல் ஸ்டாக்ஹோம் சூழியல் மாநாட்டுக்குப் பின்னர்தான் உலகமெங்கும் சூழியலாளர்களால் இன்னும் தீவிரமாக விவாதிக்கப்பட்டுப் புரிந்துகொள்ளப்பட்டன. ஆம், காந்தி 1909-இல் சொன்னவை அரைநூற்றாண்டுக்குப் பின்னரே உலகத்தால் உணரப்பட்டன.
காந்தி நவீன காலகட்டத்தில் வன்முறைமூலம் சமூகமாற்றமோ ஆட்சிமாற்றமோ வரமுடியாதென்று நினைத்தார். வன்முறை அதற்குச் சமானமான எதிர்வன்முறையைத்தான் உருவாக்கும் என்று சொன்னார். வன்முறை எதற்காக யாரால் ஆரம்பிக்கப்பட்டாலும் ஒட்டுமொத்தமாக அழிவுதான் மிஞ்சும், அதுவும் எளிய மக்களுக்கு அழிவுதான் கிடைக்கும் என்பதே காந்திய தரிசனம்.
ஆகவேதான் காந்தி முன்வைத்த மக்கள்போராட்டம் என்பது அகிம்சை வழியிலானதாக இருந்தது. அகிம்சை [வன்முறையின்மை] என்பது காந்திய சிந்தனைகளின் அடிப்படை. காந்தியின் காலகட்டத்தில் உலகமே ஆயுதப்புரட்சியைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தது. ஐரோப்பாவின் பல நாடுகளில் புரட்சிகள் வெடித்தன. உலகின் மிகப்பெரும்பாலான நாடுகளில் ஆட்சிமாற்றத்துக்கான வன்முறைக் கிளர்ச்சிகள் நிகழ்ந்துகொண்டிருந்தன.
ஆனால் காந்தி பிடிவாதமாக சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு சமூகத்தில் உள்ள அதிகாரம் அதன் அரசாங்கத்திடம் இல்லை. அரசாங்கத்தை மாற்றினால் ஒன்றும் ஆகப்போவதில்லை. மாற்றவேண்டியது மக்களை. மக்கள் கருத்து மாறினால் இயல்பாகவே ஆட்சியும் அதிகாரமும் மாறும். அதுவே உண்மையான மாற்றம். அந்த மாற்றமே நீடிக்கும். பிற மாற்றங்கள் எல்லாமே அழிவைத்தான் உருவாக்கும்.
காரணம் அந்தமாற்றம் மக்களில் ஒரு சிறுபான்மையினர் அரசாங்கத்தை எதிர்த்துச் செய்யும் போராகவே இருக்கும். அவர்கள் வென்றால் அவர்கள் இன்னொரு அரசாங்கமாக ஆவார்கள். மக்கள் அப்போதும் அடிமைகளாகவே இருப்பார்கள்.
ஜனநாயக யுகத்தில் வன்முறைக்கு இடமில்லை என்றார் காந்தி. மக்கள் போராட்டம் என்பது மக்களின் கருத்தைத் திரட்டி அதை ஒருமுகப்படுத்துவதற்கான செயல்பாடு மட்டும்தான். ஒருகுறிப்பிட்ட கருத்தை ஒரு சமூகத்தின் பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொண்டால் அதன்பின்னர் அந்தச் சமூகம் மாறியே ஆகவேண்டும்.
காந்தி பிரிட்டிஷாருக்கு எதிராக நடத்திய போராட்டங்கள் எல்லாமே இந்திய மக்களை பிரிட்டிஷாருக்கு எதிராக ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகள்தான். இந்திய மக்கள் பிரிட்டிஷாரை நம்பி ஆட்சியாளர்களாக ஏற்றிருந்தார்கள். ஆகவேதான் சிறுபான்மையினரான பிரிட்டிஷார் இந்தியாவை ஆளமுடிந்தது. மக்களுக்கு பிரிட்டிஷார் இந்தியாவில் செய்த பெரும் சுரண்டலைப் புரிந்துகொள்ளும் சக்தி இருக்கவில்லை. அந்தச்சுரண்டலால் உலகிலேயே மிகப்பெரும் பஞ்சங்கள் இந்தியாவில் நிகழ்ந்தன. இந்தியாவின் மக்கள்தொகையில் கால்வாசிப்பேர் இறந்தனர். அதுவும் மக்களுக்குத் தெரியவில்லை.
காந்தி நடத்திய எல்லாப் போராட்டங்களும் இந்தச் சுரண்டலை மக்கள் மத்தியில் திறந்து வைப்பதற்கான போராட்டங்கள்தான். அன்னியத்துணி துறப்பு, உப்பு சத்யாக்கிரகம் எல்லாமே இந்த நோக்கம் கொண்டவை. மெல்ல மெல்ல மக்கள் பிரிட்டிஷாரைப் புரிந்துகொண்டபோது வேறு வழியே இல்லாமல் அவர்கள் வெளியேற நேர்ந்தது. இப்படித்தான் மக்கள் போராட்டம் நிகழமுடியும்.
அன்றும் பிறகும் வன்முறைப் போராட்டத்தை ஆதரித்தவர்கள் காந்தியை எள்ளி நகையாடினார்கள். அவரை துரோகி என்றும் மக்கள் போராட்டம் நிகழாமல் காட்டிக்கொடுப்பவர் என்றும் வசைபாடினார்கள். அனால் 1950 வாக்கில் ருஷ்யாவில் ஸ்டாலின் நடத்திய வெறியாட்டங்கள் குருஷேவ் வழியாக அதிகாரபூர்வமாக வெளிவர ஆரம்பித்தபோது கொஞ்சம் கொஞ்சமாக வன்முறைப்போராட்டம் பற்றிய நம்பிக்கைகள் உலக சிந்தனையாளர்களிடம் சரிய ஆரம்பித்தன. வன்முறைப்போராட்டம் வழியாக சர்வாதிகாரத்தை மட்டுமே கொண்டுவர முடியும் என்றும் நோயைவிட சிகிழ்ச்சை ஆபத்தானதாக ஆகலாம் என்றும் தெரிய ஆரம்பித்தது.
காந்தி அதன்பின்னரே உலக அளவில் கவனிக்கப்படலானார். வன்முறையற்ற ஜனநாயகப் போராட்டம் பற்றிய அவரது சிந்தனைகள் விவாதிக்கப்பட்டன. பின்னர் எழுபதுகளின் தொடக்கத்தில் இத்தாலிய மார்க்ஸிய சிந்தனையாளரான அண்டோனியோ கிராம்ஷியின் சிந்தனைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வந்து விரிவாக விவாதிக்கப்பட்டன. அவை ஒரு சமூகத்தின் உண்மையான அதிகாரம் அரசாங்கத்திடம் இல்லை என்று நிறுவின. அந்த அதிகாரம் அந்தச் சமூகத்தில் உள்ள பெரும்பான்மையான மக்களிடம் உள்ளது. அந்த மக்கள் எதை நம்புகிறார்களோ அந்தக் கருத்துதுதான் அதிகாரமாக ஆகிறது. அதை கிராம்ஷி கருத்தியல் மேலாதிக்கம். [Hegemony] என்கிறார்.
ஆகவே ஒருசமூகத்தில் உண்மையான மாற்றம் ஏற்படவேண்டுமென்றால் அந்த மக்களின் கருத்தியலில் மாற்றம் வரவேண்டும். அந்த மாற்றத்தைக் கொண்டுவருவதுதான் உண்மையான புரட்சி என்றார் கிராம்ஷி. அவ்வாறு கருத்தியல் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக நீண்ட கால அளவில் கொஞ்சம் கொஞ்சமாக நடத்தப்படும் போராட்டத்தை அவர் நிலை யுத்தம் [Static war] என்றார். தற்காலிக சமரசம் என்பது அந்த நிலையுத்தத்தின் ஒரு பகுதியே.
கிராம்ஷிக்குப் பின்னர்தான் காந்தியை மேலைநாட்டுச் சிந்தனையாளர்கள் சரியாகப் புரிந்துகொண்டார்கள். இன்று காந்தியம் பற்றி மேலைநாட்டுச் சிந்தனையாளர் எழுதும் கட்டுரைகளில் கிராம்ஷியின் கலைச்சொற்களை நிறையவே காணலாம்.
சென்ற அரைநூற்றாண்டில் உலக அரசியலில் நிகழ்ந்த மாபெரும் மாற்றங்கள் எல்லாமே காந்தியை ஆதர்சமாகக் கொண்டவர்களால் காந்திய முறையில் அடையப்பட்டவைதான். வன்முறைமூலம் அடையப்பட்ட எல்லா மாற்றங்களும் சீரழிந்து இன்னும் மோசமான விளைவுகளையே உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. காந்திய வழியின் வெற்றிக்கு மிகச்சிறந்த உதாரணம் நெல்சன் மண்டேலா தென்னாப்ரிக்காவில் பெற்ற வெற்றி. மிகச்சிறந்த உதாரணமாக வரப்போவது ஆங் சன் சூசி பர்மாவில் பெறப்போகும் வெற்றி.
நண்பர்களே, நான் சொல்ல விழைவது இதுதான். காந்தி அவரது காலகட்டத்துக்கு வெகுவாக முன்னால் நடந்தவர். அவரது காலகட்டத்தில் புரிந்துகொள்ளப்படாதவர். கிண்டலுக்கும் வசைகளுக்கும் உள்ளானார். அவரது காலகட்டத்தில் எல்லாராலும் நம்பப்பட்டதைத் துணிவுடன் நிராகரித்தவர். எது தனக்கு உண்மையாகப்படுகிறதோ அதைத் தயங்காமல் முன்வைத்தவர். அந்தத் தற்சார்பினால்தான் அவர் உலகசிந்தனைக்குப் பெரும் பங்களிப்பை அளித்தார். இன்று அதுதான் அவரது அடையாளம்.
அந்தத் தற்சார்பைத்தான் காந்தியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த ஞானத்திமிரைத்தான் நாம் அடையவேண்டியிருக்கிறது. வரலாற்றின் முன்னால் நிமிர்ந்து நிற்பது எப்படி என்பதுதான் நமக்குத்தெரியவில்லை. இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இந்தியர்களாகிய நாம் சந்திக்கும் மிகப்பெரிய சிக்கல் இதுதான். நாம் ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் வழிபடுகிறோம். அவர்களின் பண்பாட்டை நகல் செய்கிறோம்.
நம்முடைய பாடநூல்கள் எல்லாமே வெறும் மொழியாக்கங்கள். நம் சிந்தனைகள் எல்லாமே கடன் வாங்கியவை. நம்முடைய அரசியல் கொள்கைகள் எல்லாமே போலியானவை. நாம் இன்று உள்ளீடற்ற ஒரு சமூகம்.
ஆகவேதான் உலகின் மிகப்பிரம்மாண்டமான நாடாகிய நமக்கு இன்று எங்கும் எந்த மதிப்பும் இல்லை. எந்தத் துறையிலும் நம்முடையது மட்டுமான எந்தப் பங்களிப்பும் இல்லை. நாம் அதிகபட்சம் செய்வதெல்லாமே தகவல்தொழில்நுட்ப குமாஸ்தா வேலைதான். யாரோ உருவாக்கிய வரைபடத்தை செங்கல் போட்டு நிரப்பும் வேலை மட்டுமே நம்மால் முடிந்தது.
ஆகவேதான் நம் இளையதலைமுறைக்கு காந்தி முக்கியம். வெள்ளையனை நகல் செய்த சிந்தனையாளர்களும் தலைவர்களுமல்ல, தன் ஆன்மீகத் திமிருடன் அரைநிர்வாணக்கோலத்தில் உலகை நோக்கி நின்ற காந்தி, உலகசிந்தனையைக் கொந்தி உடைத்த காந்திதான் நமக்கான ஆதர்சம்.
மீறிச்செல்லுங்கள். தனித்து நில்லுங்கள். கடைசிவரை உங்கள் ஆழ்மனம் ஏற்றுக்கொள்ளாததைப் பிறருக்காக ஏற்றுக்கொள்ளாதீர்கள். கடைசிவரை நீங்கள் நம்புவதை முன்வைக்க அஞ்சாதீர்கள்.
காந்தியின் கையில் இருந்த கோடரி அந்தத் தற்சார்புதான். அந்தக் கோடரியால் அவர் நம்முள் உள்ள மரபான சிந்தனையைக் கொந்துகிறார். அவரிடமிருந்து உங்கள் கோடரிகளைத் தயார் செய்துகொள்ளுங்கள். உங்களால் முடிந்த உடைவுகளை நீங்கள் நிகழ்த்துங்கள்.
அசல்சிந்தனை என்பது நெருப்பு. அது முடிந்த இடங்களில் எல்லாம் பற்றிக்கொள்ளக்கூடியது. காந்தி ஒரு நெருப்பு. உங்களிலும் அவர் படரட்டும்.
நன்றி.
[9-4-2012 அன்று புதுச்சேரி பொறியியல் கல்லூரி மின்னியல் மற்றும் தொடர்பியலுக்கான பொறியியல் துறையில் ஆற்றிய உரை]

தொடர்புடைய பதிவுகள்

கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 10 [இறுதிப் பகுதி]

கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 10 [இறுதிப் பகுதி]: கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அதிகப்படி அதிகாரங்களை அளிக்க வேண்டும் என்ற கருத்துடன் நான் முழுமையாக ஒத்துப்போகிறேன்... குற்றம் இழைப்பவர்களுக்கும் சரியான தண்டனைகள் அளிப்பதில் நவீன சமூகம் சிக்கல்களை சந்திக்கிறது. கருணை என்னும் குணாதிசயம்தான் இதற்கெல்லாம் காரணம்... எவ்வளவு நாள்தான் எந்த வேலைத்தரத்தையும் காண்பிக்காத டம்மி பீஸ்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் என்று அனைத்து வசதிகளையும் அளிக்க முடியும்? யூனியன் மாஃபியா கும்பலை "நேருக்கு நேராக" எதிர்க்கும் நேர்மைத்துணிவு, எனக்குத் தெரிந்து திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு மட்டுமே உள்ளது... உலகம் முழுவதும் இந்த வினவு குழுக்களின் கிளைகள் என்றுமே இருந்து வந்துள்ளன...

கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 9

கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 9: சந்தோஷம் என்பது பணத்தால் வருவதில்லை. மன அமைதியினால் மட்டுமே பெறக்கூடியது. இது அடிப்படையிலேயே மற்ற நாகரீகங்களிடமிருந்து வித்தியாசப்படும். சந்தோஷம் என்பதை புலன் வழியான சந்தோஷமாகவே பார்க்க பழகின மேற்கத்திய சமூகங்களுக்கு இது புரிய வாய்ப்பில்லை. நம் முன்னோர்கள் கூறிய சந்தோஷம், Contentment (சம்ஸ்கிருதத்தில் சமாதானம்) என்பதை சுட்டும். இந்த மன நிலையை அடைய பணம் அவசியமே இல்லை. மேற்கூறியவையெல்லாம் எனக்குப் புரிந்தவரை அற்புதமான உளவியல் சாதனங்கள். பச்சையாக கூறினால், ஏழைகளை கட்டுக்குள் வைத்திருக்க உபயோகப்பட்ட உளவியல் சாதனங்கள் என்றே நான் புரிந்து கொள்கிறேன். பொதுவுடைமையை முழுமையாக சமூகத்தில் நடைமுறை படுத்த முடியாது என்பதை தெளிவாக உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ஆனாலும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை உடைய ஒரு சமூகத்தை நிர்வகிக்க சட்டங்கள் மட்டும் போதாது என்பதையும் தெளிவாகவே உணர்ந்திருந்தார்கள். மேலே கூறப்பட்ட பல உளவியல் சாதனங்களை பயன்படுத்தி ஏழ்மையிலும் சந்தோஷமாக வாழ முடியும் என்பதை மக்களுக்கு உணர்த்தினார்கள்.

கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 8

கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 8: பொதுநலனைக் கொண்ட சமூகம் இயற்கையிலேயே உறுதி அற்றது. சுயநல உறுப்பினர்களால் துஷ்பிரயோகம் செய்யப்படும் வாய்ப்பு அதில் உள்ளது.... தன் தேவைக்கேற்ற பூக்களை தானாகவே உற்பத்தி செய்து கொண்டிருந்த மரங்கள், இன்று இலைகள் இல்லாத கிளைகளைக் கொண்டதால், பூமழை பெய்யுமா என்று வானை நோக்கி பிச்சை கேட்கின்றன... "நான் அப்படி ஆசைப்பட வில்லை. நான் எதிர்பார்க்கும் இந்தியாவில், இளவரசர்களுக்கும், ஜமீன்தார்களுக்கும் இடங்கள் இருக்கவே செய்கின்றன" என்றார் காந்திஜி... ஏழைகளுக்கு உதவாமல் போனாலும் கூட, அறிவியல் ஆராய்ச்சியில் பின் தங்கமுடியாது என்பதை அழுத்தம் திருத்தமாக கூற நம்மில் தலைவர்கள் இல்லை....

கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 7

கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 7: ஹிந்து பத்திரிகை மட்டுமல்ல, இடதுசாரி நிபுணர்கள் மட்டுமல்ல, பொதுவாகவே கருணைக் காவலர்களாக தங்களை முன்னிறுத்த விழையும் பல அதிகாரிகளும் நிபுணர்களும் பொருளாதார ஏற்றதாழ்வு என்பது ஒரு இயற்கை நியதி என்ற பச்சையான உண்மையை ஏற்க மறுக்கின்றனர். இருப்பவர்களிடமிருந்து அதிக வரிவசூல் செய்வதன் மூலம், இல்லாதவர்களுக்கு வசதிகளை அளித்துவிட முடியும் என்று துடிக்கின்றனர்... பட்ஜெட் பற்றாக்குறைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை ஆராய, பா.ஜ.க அரசு திரு.விஜய் கெல்கார் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது...5 இலட்சம் கோடிகளை பற்றாக்குறையாக மாற்றி விட்டது ஓட்டுவங்கி அரசியல் நடத்தும் தற்பொழுதைய அரசு... இந்தியாவில் அமலில் உள்ள இரண்டு பிரம்மாண்டமான மானிய திட்டங்களான 100 நாள் வேலைத் திட்டத்தையும், உணவுக்கான மானியங்களையும் ஒருசேர நோக்குவதே சரியான வழியாக இருக்கும்...

கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 6

கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 6: உண்மையான ஏழை மக்களுக்கு, அவர்களை ஏழ்மையிலேயே வைத்திருக்கப் பயன்படும் அனைத்து மானியங்களும் பிரயோஜனமில்லாத மானியங்களே!... எந்த அளவிற்கு பொதுநலன் இருக்க வேண்டும் என்பதில் உயிரியலாளர்களிடையே விவாதம் நடக்கிறது. குடும்ப அளவிலா, நாட்டின் அளவிலா, இன அளவிலா, மொத்த மனித அளவிலா அல்லது அனைத்து உயிர்களின் அளவிலா?.... எங்கள் மாவட்டத்தில் மொத்தமாக 10,15 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அனைவர்க்கும் இழப்பீடு வழங்கப்பட்டது.... ஒரு உதாரணத்திற்காக, திருபாய் அம்பானியின் விதவை மனைவியையும், என் தாயாரையும், என் வீட்டில் வேலை செய்யும் மூதாட்டியையும் அவதானிக்கலாம்....

கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 5

கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 5: ..பெட்ரோலின் விலை மாதத்திற்கு ஒருமுறையாவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதை சரி என்று சொல்லும் ஒரு அரசியல்வாதியும் இங்கு இல்லை. காங்கிரஸ் அரசில் உள்ளவர்களும் இது கடுமையானது ஆனால் தேவையான ஒன்றே என்றே சப்பைக் கட்டு கட்டுவார்கள்...இன்றும் பெட்ரோலின் விலை ஏற்றத்தை ஆதரிக்கவே செய்கிறேன். காரணம் மிகவும் எளிமையானது. வாஜ்பாய் தலைமையில் விலை ஏற்றத்துக்கான காரணங்களாக எவை முன்வைக்கப் பட்டதோ அதே காரணங்கள் இன்றைய சூழலுக்கும் பொருந்தும்....

கம்யூனிசமும் சோஷலிசமும் களேபரங்களும் – 4

கம்யூனிசமும் சோஷலிசமும் களேபரங்களும் – 4: .. "புதிய ஓய்வூதிய திட்டத்தின்" மூலம் ஓய்வூதியம் பெற்றிருந்தால், அவருக்கு பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும் போது 25000 ரூபாயாக கிடைத்திருக்கும். ஆனாலும் பொருளாதாரம் தேக்கநிலையில் இருக்கும்போது அது 10000ஆக குறையவும் வாய்ப்பு உண்டு. இதில் என்ன தவறு காண முடியும்? பொருளாதாரம் தேக்க நிலையில் இருக்கும்போது, இந்தியாவில் கோடிக்கணக்கான பொதுமக்கள் வேலைகளை இழந்தும், பற்றாக்குறையாலும் பாதிக்கப்படுவார்கள். ஆனால் ஒரு தொகுதியினர் மட்டும் சொகுசாக வாழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு நேர்மையற்ற, துணிவற்ற, வாதம்?..

கம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 3

கம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 3: கம்யூனிஸத்தை எதிர்க்கும் இந்தியாவின் ஒரு வலது சாரிக் காரரையும், அமேரிக்காவின் ஒரு இடது சாரிக் காரரையும் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இருவருமே நகைச்சுவையை வைத்துதான் அரசியல் விமர்சனத்தை முன்வைப்பவர்கள்.... பெரு நோய்கள் ஏற்படுகையில், ஏழைகளால் தனியார் மருத்துவத்தின் செலவுகளை ஏற்க முடியாது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் கிடைக்காது. தற்பொழுதைய நிலையில் அவர்கள் அந்த நோய்களுடனேயே வாழ்ந்து மடிகிறார்கள்... அரசு வருவாயில், ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியமே 24 சதவிகிதமாக மாறியுள்ளது...

கம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 2

கம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 2: "The Great Leap Forward" என்பதைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். அதில் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி மக்கள் இறந்து போனதாக, கம்யூனிஸ்டுகளால் நியமித்த குழுவே அரசுக்கு அறிவித்தது. இந்த அறிக்கை சில வருடங்களுக்கு முன் பொதுவில் கசிந்ததில், அந்த நிகழ்வில் பலரால் கவனிக்கப்படாத ஒரு கொடூரமும் நடந்தது தெரியவந்தது. நிலங்களை கட்டாயமாக அரசாங்கம் கையகப்படுத்தும் முனைப்பில் மாவோவின் அல்லக்கைகள் இருக்கையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நில சொந்தக்காரர்கள் 7 இலட்சம் பேர் வரை கொடூரமாக கொல்லப்பட்டு அவர்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அதே வெட்கம் கெட்ட சீன கம்யூனிஸ்ட் அரசு, 1979க்கு பின், சீனர்கள் நிலங்களை வாங்கி சொந்தமாக்கிக் கொள்ளவும்,தொழில்களை தொடங்கவும் அனுமதி அளித்தது. இன்று சீனா அடைந்துள்ள பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு பின்னால் இந்த ஒரே ஒரு விஷயமே முக்கியம் என்பது என் தீர்மானமான கருத்து. நாட்டிற்காக மட்டுமே உழைக்க வேண்டும் என்பதெல்லாம் மனித இயற்கைக்கு முரணானது. தனக்காகவும், தன் சந்ததிக்காகவும் உழைத்து, சேர்ப்பதில்தான் ஒரு மனிதனுக்கு ஊக்கம் ஏற்படும். அதனாலேயே, நாட்டின் பொருளாதாரம் முன்னேறும் என்பதே சரியான வழியே தவிர,பணக்காரர்களை கொன்று போடுவதால், நாடு முன்னேற வாய்ப்பே இல்லை. இன்றைய சீன முன்னேற்றத்தில்,பெரும் பணக்காரர்கள் உருவாகி உள்ளார்கள். அவர்களின் சாமர்த்தியமான வர்த்தகங்களினால்தான் சீன அரசிற்குவரி வருமானம் பெருகியுள்ளது. அதைக் கொண்டே, மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த முடிகிறது.

கம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 1

கம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 1: இந்த கட்டுரையில் கம்யூனிஸத்தை முழுமையாக எதிர்த்து எழுதப் போகிறேன். ஆனால் பொதுவுடைமையின் சில கூறுகளாவது மனித சமூகம் உள்ளவரை எல்லா நாடுகளிலும் கடைபிடிக்கப்படும் என்ற எதார்த்தத்தை உணர்கிறேன்... 1990க்கு பிறகு, வாலை சுருட்டிக் கொண்டிருந்த கம்யூனிஸ்டு அரக்கன், நன்றாகவே நாக்கை நீட்டிக் கொண்டு,வேட்டைக்கு வெளிக் கிளம்பி விட்டான்... இடதுசாரி பொருளாதார கொள்கையை அனுசரித்தவர்களே, சந்தை பொருளாதாரத்தின் பயன்களைக் கண்டவுடன், தங்கள் சிந்தனைகளை மாற்றிக்கொள்கிறார்கள்...

மரபணுவில் புகுந்த வைரஸ்

மரபணுவில் புகுந்த வைரஸ்:
மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 9
இந்தியாவுக்கு 1947 ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி நள்ளிரவில் சுதந்தரம் என்ற ஒன்று கிடைத்ததாகப் பொதுவாக நம்பப்படுகிறது. இந்த 65 ஆண்டுகளில் பெரும்பாலான காலத்தை ஒற்றை ராஜ குடும்பமே ஆட்சி செய்து வந்திருக்கிறது (வருகிறது) என்றாலும் இந்தியாவில் மக்களாட்சி என்ற ஒன்று நடப்பதாகத்தான் நம்பப்படுகிறது. இல்லாத விஷயங்கள் இருப்பதுபோல் நம்பப்படும் தேசத்தில் இருந்த விஷயங்கள் இல்லாததாகத்தானே நம்பப்பட முடியும். அப்படி நம்பப்படுவதால்தான் இப்படியான நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதுதானே வேதனையான உண்மை.
மேற்குலகம்தான் தொழில்நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் உயர்ந்தது என்பது ஏற்றுக்கொள்ளவைக்கப்பட்ட சித்தாந்தமாக இன்று இருக்கிறது. இந்திய தாகத்துக்கு இளநீரையும் மோரையும்விட சாக்கடைத் தண்ணீர் நிறத்திலான பெப்ஸியும் கொக்ககோலாவும்தான் உகந்தது என்று ஆக்கப்பட்டிருக்கிறது. ஆண்டில் 300 நாட்கள் சூரியன் சுட்டெரிக்கும் தேசத்துக்கு மேற்குலகம் ஒதுக்கித் தள்ளிய அபாயகரமான அணு மின்சாரம்தான் சிறந்தது என்று பெரும்பாலான இந்திய அறிவுஜீவி மற்றும் விஞ்ஞானி வர்க்கம் கிளிப்பிள்ளைபோல் கத்திக்கொண்டுவருகிறது. முன்னோர்களைப் பழிக்கும் சமூகம் வாரிசுகளைக் காவு கொடுப்பதில்தான் போய்முடியும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக நம் தேசம் ஆகிக் கொண்டிருக்கிறது.
கடந்த காலத்தில் நாம் யாராக இருந்தோம் என்பது நமக்குத் தெரியாமல் போனதால் வந்த விளைவுதான் இது. காலனிய ஆதிக்கம் என்பது வெறும் பவுதிக தளத்தில் மட்டுமே நடந்த ஒன்றல்ல. அது மக்களின் மனங்களையும் சேர்த்தேதான் அடிமைப்படுத்துகிறது. ஆதிக்கவாதிகள் போன பிறகும் அவர்களுடைய ஆட்சி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இறகுகள் வெட்டப்பட்ட கிளியானது கூண்டைத் திறந்துவிட்டாலும் பறந்து செல்லாமல், சீட்டை எடுத்துக்கொடுத்துவிட்டு தன் பழைய இடத்துக்குத் திரும்புவதுபோல் நாமும் சுதந்தரம் கிடைத்த பிறகும் எஜமான விசுவாசத்துடனே இன்றும் சிந்தித்து செயலாற்றி வருகிறோம். நேற்று காலனிய சக்திகள் நம்மை அடிமைப்படுத்தின. இன்று உலகமயமாக்கல் சக்திகள் நம்மை ஆட்சி செய்துவருகின்றன. இத்தகைய ஆட்சிகளின் வலிமை என்பது நம் கைகளைக் கொண்டே நம் கண்களைக் குத்த வைப்பதிலும் அப்படி கண்களை இழந்து அவர்கள் தரும் கண்ணாடிகளை அணிந்து கொள்வதுதான் உலகைப் பார்ப்பதற்கான சிறந்த வழி என நம்பவைப்பதிலும்தான் இருக்கிறது.
கடந்த காலத்தைப் பழிப்பது என்பது கடந்த காலத்தை முழுமையாகப் புரிந்துகொண்டு செய்யப்படும் ஒன்றாக இல்லாமல், அதுதான் முற்போக்கு என்ற பேதைமையில் முன்னெடுக்கப்படுகிறது. இன்று இந்தியாவின் மிக உயர்ந்த கல்வியைப் பெறும் வர்க்கமானது ஒன்று மேற்குலகைத் தேடி ஓடும் ஒன்றாக இருக்கிறது. அல்லது மேற்குலகின் நலனை இங்கிருந்தபடியே நிறைவேற்றித் தரும் ஒன்றாக இருந்துவருகிறது. படைப்பூக்கம் என்பதோ நமது தேவைகள் சார்ந்து சிந்திக்க வேண்டும் என்பதோ அறவே இல்லாமல், மேற்கின் மதிப்பீடுகளை அப்படியே ஏற்றுக்கொண்டு நடப்பதில் பெரு மகிழ்ச்சி அடைவதாக இருந்துவருகிறது. மேற்கின் ஆராதகர்களாக இருக்கும் அந்த இந்தியக் குழுவானது, அவர்களிடமிருந்து தேச பக்தியைக் கற்றுக்கொண்டு சொந்த தேசத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக இந்திய முகத்தை மறைத்து, மேற்கத்திய முகமூடியை அணிந்துகொண்டு பரிதாபத்துக்குரிய கோமாளியாக உலக அரங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது.

உலகமயமாக்கல் என்பது ஒவ்வொரு தேசமும் பரஸ்பர நலன் பெறும் வகையிலான பரிமாற்றத்தில் ஈடுபடுவதற்குப் பதிலாக ‘வளர்ந்த’ நாடுகள் வளரும் நாடுகளைக் கபளீகரம் செய்யும் ஒன்றாக ஆகிவருகிறது. அனைவருக்கும் நல்ல கல்வி, மருத்துவம், நீர் தேங்காத சாலைகள், பேரிடர் மேலாண்மை, கழிவுப் பொருள் மேலாண்மை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு என இன்று இந்தியாவுக்கு அந்நிய முதலீடும் தலையீடும் தேவைப்படும் எத்தனையோ துறைகள் இருக்க நமக்கு சற்றும் தேவைப்படாத துறைகளில் அந்நிய நிதி அபரிமிதமாகக் கொட்டப்படுகிறது.
எங்கோ கடலில் பெட்ரோல் ஆலை வெடித்து நூற்றுக்கணக்கில் பறவைகளும் மீன்களும் இறந்து போனதற்கு கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு கேட்கும் சாமர்த்தியசாலிகள், ஆயிரக்கணக்கில் மனித உயிர்கள் மடிந்து போன சம்பவத்தில் நிறுவனத்தை வேறு பெயரில் மாற்றிக் கொண்டு சட்டத்தின் இடுக்குகளினூடாக உடலைக் குறுக்கிக்கொண்டு செல்வதை வர்த்தக நிபுணத்துவமாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதைவிடக் கொடுமை, விபத்து ஏற்பட்டால் எங்களுக்கு பொறுப்பு இல்லை என்று எடுத்த எடுப்பிலேயே எழுதி வாங்கிக் கொள்ளும் ஒரு நிறுவனத்துக்கு வக்காலத்து வாங்கத்தான் எவ்வளவு பெரிய அறிவிஜீவிக் குழு. மரபணுவிலேயே வைரஸ் புகுந்துவிட்டதென்றால் நோயை எப்படி ஒழிக்க முடியும்?

சுயமாகச் சிந்தித்து வந்த காலத்தில் தொழில் நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் இந்தியா சிறந்து விளங்கியிருக்கிறது என்ற உண்மையானது இன்று யாரும் கேட்க விரும்பாத ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது. இந்திய தொழில்மயநீக்கமும் பிரிட்டனின் தொழில்மயமாக்கமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த ஒன்றுதான் என்று பண்டிட் மதன்மோகன் மாளவியா சொன்ன வார்த்தைகள் மிகவும் துல்லியமாக அந்த சரித்திர சோகத்தை சொல்லிவிட்டிருக்கிறது.
மேற்கத்திய விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியவற்றை இந்தியாவில் முடுக்கிவிடுவதற்காக 1916-18-ல் அமைக்கப்பட்ட இந்திய தொழில்துறை கமிஷனில் இந்திய தரப்பு அங்கத்தினராக இருந்த மாளவியா, கப்பல் கட்டுதல், இரும்பு உருக்குதல், நெசவு, விவசாயம் என பல்வேறு துறைகளில் கணிசமான சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் இந்தியாவின் தொழில் பாரம்பரியத்தை ஒரேயடியாக நிராகரிப்பதை எதிர்த்து தன் கண்டனத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். பி.என். பாஸு இந்தியாவின் தொழில்துறை பின்னடைவு பற்றிக் கருத்துக் கூறுகையில், இந்தியாவுக்கு நடைமுறை சார்ந்து சிந்திக்கும் மனிதர்கள் தேவைப்பட்ட போது ஆங்கிலோ சாக்ஸன் இலக்கணத்தை மனனம் செய்து ஒப்பிக்கும் பண்டிதர்களை பிரிட்டிஷார் இந்தியாவில் அறிமுகப்படுத்திய கல்வி உருவாக்கியது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
விஷ்வகர்மா மஹாஜன் குழுவின் செயலாளர் மேற்கத்திய பாணி தொழில்நுட்பத்தையும் விஞ்ஞானத்தையும் இந்தியாவில் கண்மூடித்தனமாகத் திணிப்பது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் கைவினைக் கலைஞர்களின் சமூகமானது இந்தக் கல்வியால் எந்தப் பயனும் பெறப்போவதில்லை. இந்திய பாரம்பரியத் தொழில் துறையில் இருந்து முற்றாக துண்டிக்கப்பட்டிருக்கும் இந்த அறிவிஜீவி வர்க்கமானது நம் சமூகத்துக்குப் பெரும் கேட்டையே விளைவித்து வருகிறது என்று வேதனையுடன் தெரிவித்திருக்கிறார். அந்த கமிஷனுக்கு முன்பாக சாட்சியம் அளித்த ஒரு ஆங்கிலேயர், இந்திய சாதி அமைப்பானது தொழில் மயமாக்கத்தில் ஆக்கபூர்வமான பங்களிப்பை ஆற்றியிருக்க முடியும். ஒவ்வொரு சாதியும் ஒரு தொழிற்சங்கம் போலச் செயல்பட்டிருந்தால் நல்ல பலன் கிடைத்திருக்கும். ஆனால், அந்த வாய்ப்பு நழுவிப்போய்விட்டது. ஒவ்வொரு சாதியும் கல்வி அமைப்பின் ஒரு அலகாகக் கருதப்பட்டிருந்தால் நடந்திருப்பதே வேறாக இருந்திருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் தொழில்நுட்ப மேன்மையானது இன்று ஏதோ இட்டுக் கட்டிச் சொல்லும் ஒன்றாக நம்மாலேயே பார்க்கப்படும் நிலை உருவாகிவிட்டிருக்கிறது. ஆனால், 16-18 நூற்றாண்டுகளில் இந்தியாவில் இருந்த ஐரோப்பிய விஞ்ஞான ஆய்வாளர்களுக்கு இந்தியா வேறொன்றாகத் தெரிந்திருக்கிறது. அவர்கள் இந்தியாவில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளும், காட்டிய அக்கறையும், கடனாகப் பெற்றுச் சென்றவையும் ஏராளம். நன்றியோடு அவர்கள் அப்போது பதிந்து வைத்திருக்கும் ஆவணங்கள், காதுள்ளவர்கள் கேட்கவும் கண்ணுள்ளவர்கள் பார்க்கவும் ஏற்ற வகையில் மூடப்பட்ட அறைகளில் இன்றும் காத்துக்கொண்டுதான் இருக்கின்றன.
இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட கலப்பை, ஐஸ் தயாரிக்கும் முறை, எஃகு தயாரிப்பு முறை, கட்டடங்கள் கட்டும் முறை, அதற்குப் பயன்படுத்திய பொருட்கள், தொழில்துறைகளில் பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருட்கள் இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவில் செய்யப்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரி என இந்தியா தொழில்நுட்பத்தின் முன்னோடியாக இருந்திருக்கிறது. பிரிட்டிஷாரின் ஆவணங்களில் உள்ள வார்த்தைகளின் வழியாக வரையப்படும் இந்தியாவின் சித்திரமானது பேரழகுடன் திகழ்கிறது. அதைப் படிக்கும்போது, சூரியனே ஆனாலும் அதைப் பார்த்தபடி நிற்பவருக்குத்தான் வெளிச்சம் கிடைக்கும். எதிர் திசையைப் பார்ப்பவருக்கு இருண்ட நிழல்தான் தெரியும் என்பது உறுதிப்படுகிறது.
0
Share/Bookmark

‘மனித மலத்தை மனிதனே அள்ளும் தேசம்!’

‘மனித மலத்தை மனிதனே அள்ளும் தேசம்!’:
மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 8
கடந்த காலத்தில் உலகின் பிற பகுதிகளில் இருந்ததைவிட மேலான நிலையில் இந்தியாவில் கல்வியும் தொழில்நுட்பமும் இருந்திருக்கிறது என்று சொல்லும்போது அதை மறுதலிப்பவர்கள் பொதுவாக முன்வைக்கும் குற்றச்சாட்டு என்னவென்றால், என்னதான் உயர்வாக இருந்திருந்தாலும் மனித மலத்தை மனிதரையே அள்ள வைத்த (வைக்கும்) தேசம்தானே என்பதுதான். பெரியாரியவாதியாக இருந்தால் பிராமணர்கள்தான் அதற்குக் காரணம் என்றும் அம்பேத்காரியவாதியாக இருந்தால் சாதி இந்துதான் அதற்குக் காரணம் என்றும் இருக்கும் இடத்துக்கு ஏற்பத் தங்கள் வாதத்தை முன்வைப்பார்கள்.
மலத்தை அள்ளியவர்கள் தங்கள் தொழிலில் இருந்த இழிவை அகற்ற என்ன முயற்சிகள் எடுத்தார்கள்? நாலைந்து பன்றிகளைக் கயிற்றில் கட்டி வந்து சுத்தம் செய்ய வைத்திருக்கலாமே? சிந்து – சரஸ்வதி நாகரிக காலத்திலேயே கழிப்பறையில் இருந்து கழிவு நீர் ஓடை வழியாகச் சென்று ஒரு கால்வாய்வழியாக ஊருக்கு ஒதுக்குப் புறத்துக்குக் கொண்டுசெல்லும் வசதி இருந்ததே… அது பின்னர் எப்படி மறைந்து, மறந்து போனது? இது போன்ற என்ற எளிய கேள்விகளை விட்டுவிட்டுப் பார்த்தாலும் எண்ணற்ற விடை தெரியாத கேள்விகள் எழத்தான் செய்கின்றன.
அத்தகைய இழிநிலையை முக்கிய காரணமாக முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட தலித் விடுதலைப் போராட்டத்தினால் மலம் அள்ளும் தொழிலில் என்ன மாற்றம் வந்துவிட்டிருக்கிறது? வலிமை வாய்ந்த தலித் தலைவர் இருக்கும் உத்தரப் பிரதேசத்திலும் மனித மலத்தை மனிதர்களே அள்ளும் கொடுமை இன்றும் நடக்கத்தானே செய்கிறது. இட ஒதுக்கீட்டில் எத்தனை தோட்டி வர்க்கத்தினர் பயன் பெற்று மேலே வந்திருக்கிறார்கள்? தலித் என்ற அடையாளத்துக்குள் அடைக்கப்பட்டிருக்கும் சாதியினர் அனைவருமே இதை ஒரு தலித் பிரச்னையாகப் பார்க்கிறார்களா? பல்வேறு வேலைகளுக்கான வாய்ப்புகள் இருக்கும் நிலையிலும் ஒருவர் அந்த வேலையைச் செய்வதன் காரணம் என்ன?
மனித மலத்தை மனிதர்களே அள்ளுவது பெருமளவுக்கு முடிவுக்கு வந்ததற்கு ஃபிளஷ் அவுட் டாய்லெட் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதுதானே காரணம். எதிர்ப்பு அரசியலை முன்வைத்துப் போராடியவர்கள் அதில் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லையே? மேலும் சாக்கடையை சுத்தம் செய்தல், குப்பை அள்ளுதல் என அந்த அவலத்துக்கு இணையானவை இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த விஷயத்தில் இந்தியாவின் எந்த மாநிலமும் சளைக்கவில்லை என்பது வேறு விஷயம். எந்தவித தொழில்நுட்ப கண்டுபிடிப்பும் அவர்களை விடுவித்திருக்கவில்லையே.
உண்மையில் ஆலய நுழைவுப் போராட்டத்தைவிட இந்த அவலத்தை நீக்குவதற்கான போராட்டம்தானே காந்தியாலும் பெரியாராலும் முதலில் முன்னெடுக்கப்பட்டிருக்கவேண்டும்? இன்றும் கூட போலியோ இல்லாத தேசம் என்பதற்குத் தருவதைவிட நூறு மடங்கு அதிக கவனத்தை இந்த விஷயத்துக்குத்தானே தரவேண்டும்? ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இதற்கான காரணம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நாம் மீண்டும் பிரிட்டிஷாரின் காலத்துக்குத்தான் போயாக வேண்டும்.
அதற்கு முன் இன்னொரு விஷயத்தையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். மனித மலத்தை மனிதரே அள்ளுவது என்பது இந்தியாவில் அதுவும் இந்து சமூகத்தில் மட்டுமே இருந்த அவலம் அல்ல. பிரிட்டனில் நைட் சாயில் என்ற பெயரில் அழைக்கப்பட்ட மலத்தை அங்கும் மனிதர்கள் வெறும் கைகளால்தான் சுத்தம் செய்திருக்கிறார்கள். மேட்டுக்குடியினர் அதிகமான குளிரில் வெளியில் செல்வதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வீடுகளில் கழிப்பறை கட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அதை எடுத்துச் செல்வதற்கு மக்களில் இருந்து ஒரு பிரிவினரைத்தான் நியமித்திருக்கிறார்கள். குலத்தொழிலாகவே அது தலைமுறைகளைக் கடந்து வந்திருக்கிறது. டிரம்களிலும் வாளிகளிலும் எடுத்துச் சென்ற மலத்தை வைத்து உரம் தயாரித்திருக்கிறார்கள்.
ஜப்பானில் மேட்டுக்குடியினரின் மலத்தில் புரதச் சத்து அதிகம் இருக்கும் என்பதால் அதில் இருந்து தயாரிக்கப்பட்ட உரத்துக்கு அதிக கிராக்கி இருந்திருக்கிறது. சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், ஐரோப்பா, அமெரிக்கா என எல்லா நாடுகளிலும் பழங்காலத்தில் மனிதர்கள்தான் அந்தப் பணியைச் செய்திருக்கிறார்கள். உலகின் வேறு எந்த நாட்டிலும் அந்தப்பணியில் ஈடுபட்டவர்கள், மன்னராகவோ, நிலப்பிரபுவாகவோ, பாதிரியாராகவோ, மவுல்வியாகவோ ஆனதாக பெரிதாக எந்த ஆவணமும் இல்லை. இந்தியாவில் மனித மலத்தை மனிதர்களே அள்ளுவது என்பது பிரிட்டிஷார் காலத்தில்தான் பொது கழிப்பறைகள் கட்டப்பட்டு அரசுத்தொழிலாக அங்கீகாரம் பெற்று நடக்க ஆரம்பித்திருக்கிறது. அதற்கு முன்புவரை திறந்த வெளிகளில் மலம் கழிப்பதுதான் பரவலாக இருந்துவந்திருக்கிறது.
ஆனால், உலகின் பெரும்பாலான நாடுகளில் இந்த அவலம் இன்று முற்றிலும் ஒழிந்துவிட்டிருக்கிறது. அல்லது இந்தியாவைவிட வெகுவாகக் குறைந்திருக்கிறது. இந்தியா இன்றும் ஒப்பீட்டளவில் இந்த அவலத்தைத் துடைப்பதில் பின் தங்கி இருப்பதற்கு என்ன காரணம் என்று நிதானமாக யோசித்துப் பார்த்தால், நவீன யுகத்துக்குள் நாம் காலடி எடுத்துவைத்த விதத்தில்தான் அதற்கான விடை இருக்கிறது. அந்த, முதல் கோணல் முற்றும் கோணலாகிவிட்டிருக்கிறது.
இந்தியாவில் பிரிட்டிஷார் அறிமுகப்படுத்திய நவீன கல்வியானது நமது கடந்த காலத்தை இருண்ட காலமாகவே சித்திரித்தது. அந்தக் கல்வியில் முதலும் முடிவுமாக நமக்குச் சொல்லித்தரப்பட்டது என்னவென்றால், நம் முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள், இழிவானவர்கள் என்பதுதான். அதனால் இந்திய அறிவுத் துறையானது அதன் பாரம்பரிய விஷயங்களில் இருந்து இயல்பாக அடுத்த கட்டத்துக்கு வளராமல் நம் கடந்த காலத்தை முற்றாக ஒதுக்கியது. தேவையற்ற அதீத குற்ற உணர்ச்சியில் ஆழ்ந்தது.
ஒரு வசதிக்காக இந்தியர்களை பிராமணர்கள், அ-பிராமணர்கள் என்று பிரித்துக்கொள்ளலாம். பிரிட்டிஷாரின் வருகையைத் தொடர்ந்து பிராமணர்களில் பெரும்பாலானோர் மிகுந்த பதற்றத்துடன் தமது வேர்களில் இருந்து தம்மை முற்றாகத் துண்டித்துக்கொண்டு ‘நவீனமயமானார்கள்’. கம்பனையும் காளிதாசனையும் படிக்காமல் ஷேக்ஸ்பியரையும் பைரனையும் கரைத்துக் குடித்தனர். சமஸ்கிருதத்தைக் கைவிட்டுவிட்டு ஆங்கிலத்துக்குத் தாவினர். இசை, கட்டடக்கலை, மருத்துவம், விவசாயம் என எந்தத் துறையை எடுத்தாலும் நமது கடந்த காலச் சாதனைகளை எல்லாம் புறக்கணித்துவிட்டு மேற்கத்திய நகல்களாக ஆனார்கள்.
அ-பிராமணர்களில் பெரும்பாலானவர்களோ இந்தியாவின் கடந்த காலத்தை பிராமண ஆதிக்கம் நிறைந்த ஒன்றாகப் பார்த்து அதை முற்றாக நிராகரித்தனர். சாதி, பெண்கள் நடத்தப்பட்டவிதம்  போன்றவற்றில் உலகம் என்ன நிலையில் இருந்தது… இந்தியா என்ன நிலையில் இருந்தது… இந்தியாவில் இருந்த நிலைக்கு உண்மையில் தனிப்பட்ட முறையில் ஏதாவது ஒரு சாதிதான் காரணமா என்ற எந்த கேள்விக்கும் நியாயமான பதிலைத் தேட முயற்சி செய்யாமல் வெறுப்பு அரசியலில் இறங்கினர். இந்தியாவின் சமூக, அரசியல் தளத்தை அந்த மனோபாவமே முழுவதும் ஆக்கிரமித்தது. அப்படியாக இரண்டு க்ரீமீ லேயரும் இந்தியாவின் கடந்த காலத்தைப் பழிப்பதையே தமது அறிவுசார் செயல்பாடாக எடுத்துக்கொண்டன. இதனால், இந்தியாவின் நிகழ்கால விஷயங்களில், இந்திய நலன் சார்ந்து சிந்திப்பதற்கு யாருமே இல்லாத நிலை உருவாகிவிட்டிருக்கிறது.
சுதந்தரம் கிடைத்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் மலம் அள்ளும் தொழிலையும் சாக்கடையைச் சுத்தம் செய்யும் தொழிலையும் நவீனப்படுத்த எந்தவொரு முயற்சியும் இந்த இரு தரப்பினரால் எடுக்கப்பட்டிருக்கவே இல்லை (Sulabh கழிப்பறைகள் போன்ற விதிவிலக்குகள் நீங்கலாக). ஆண்டுக்கு 300 நாள்கள் வெய்யில் பொரிந்து தள்ளுமொரு நாட்டில் அதில் இருந்து மின்சாரத்தை எடுக்கும் தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு பதிலாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளின் நலனுக்கு உகந்த திட்டங்களில் சொந்த மக்களைப் பணயம் வைக்கும் நிலைக்குப் போய்விட்டிருக்கிறது. நேற்று காலனி ஆதிக்கத்தின் இசைக்கு ஏற்ப ஆடினார்கள். இன்று உலகமயமாக்கலின் இசைக்கு ஏற்பக் கூத்தாடுகிறார்கள்.
உண்மையில் மேற்கத்திய கல்வியானது ஒருவகையில் நமது கடந்த கால பிழைகளை எல்லாம் களைந்து நம்மை மேம்படுத்த உதவியிருக்கவேண்டும். ஆனால், அப்படியும் நடக்கவில்லை. அதாவது, நமது கடந்த காலத்தின் நல்ல அம்சங்கள் மட்டுமல்ல, பிரிட்டிஷ் சமூகத்தின் நல்ல அம்சங்களும் நமக்கு வந்து சேர்ந்திருக்கவில்லை. இந்தப் பிறழ்வே நம் இன்றைய பிரச்னைகளுக்கு முக்கியகாரணமாக இருக்கிறது. உலகின் பிற பகுதிகளில் கடந்த காலமும் நிகழ்காலமும் இந்த அளவுக்கு ஒன்றுக்கொன்று முட்டிக் கொண்டிருப்பதாக இல்லை.
பிரிட்டனில் கடந்த காலத்தில் மலம் மனிதர்களால் அள்ளப்பட்டதை தவிர்க்க முடியாத ஒரு தொழில்நுட்பப் பின்னடைவாகவே பார்த்திருக்கிறார்கள். புதிய தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டதும் அதை நோக்கி எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் நகர்ந்துவிட்டார்கள். ஆனால், இந்தியாவில், அந்தச் செயலானது இந்தியாவுக்கு மட்டுமே உரிய அவமானமாக முத்திரை குத்தப்பட்டது. ஒட்டுமொத்த சமூகமும் அதை ஏற்றுக்கொண்டு சோர்ந்து முடங்கியது. உலர் கழிபறைக்கு மாற்றாக நீர்-கழிப்பறை 1596-ல் பிரிட்டனில் ஜான் ஹேரிங்டனால் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு ஆகும் செலவும் அதிகம் இல்லை. இருந்தும், அதன் பிறகு 182 ஆண்டுகள் வரை அது மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு பெறாமல்தான் இருந்திருக்கிறது. மனித இனம் செயல்படும் விதத்தைப் பார்க்கும்போது பல புரியாத விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. எல்லாமே “ஆதிக்க சக்தி’யின் சதியாகவே இருப்பதில்லை.
இன்று, பிராமண அறிவுவர்க்கம் உலகமயமாக்கல் பேருந்தின் படிக்கட்டில் தொற்றிக்கொள்ளவாவது இடம் கிடைத்துவிடாதா என்று விழுந்தடித்து ஓடிக்கொண்டிருக்கிறது. அ-பிராமண அறிவு வர்க்கம் மாய எதிரியை உருவாக்கி அட்டைக்கத்தியைச் சுழற்றிப் போராடி வருகிறது. நேற்று காலனி ஆதிக்க சக்திகளின் இடத்தை இன்றைய உலகமயமாக்கல் சக்திகள் பிடித்துவிட்டிருக்கின்றன. இரண்டிலும் பாதிக்கப்படுவதென்னவோ பாவப்பட்ட நாம்தான். என்று இந்தியாவின் கடந்த காலம் குறித்த பிழையான எண்ணங்களை மாற்றிக் கொண்டு உண்மையான எதிரியைப் புரிந்துகொண்டு பிராமண, அ-பிராமண வர்க்கங்கள் கை கோக்கிறதோ அன்றுதான் நமக்கு விடிவு பிறக்கும். இல்லையென்றால், யது வம்சத்துக்கு நேர்ந்ததே நமக்கும் நேர்ந்துவிடலாம்.
Share/Bookmark

தங்கத்தைப் பார்த்து இளிக்கும் பித்தளை

தங்கத்தைப் பார்த்து இளிக்கும் பித்தளை:
மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 7
இந்தியாவில் கல்வி இப்படி அனைத்து சாதியினரையும் உள்ளடக்கியதாக இருந்த காலகட்டத்தில் பிரிட்டனில் கல்வி எப்படி இருந்தது என்பதையும் பார்ப்பது அவசியம்.
ஃபிரான்சிஸ் பேகன், ஷேக்ஸ்பியர், மில்டன், நியூட்டன் என பல மேதைகள் உருவாகியிருந்தார்கள் என்றாலும் 18-ம் நூற்றாண்டு வரை கல்வியானது மேட்டுக்குடியினருக்கு மட்டுமானதாகவே இருந்தது (விதிவிலக்குகள் நீங்கலாக). இந்த நிலைமையானது புராட்டஸ்டண்ட் இயக்கம் வலுப்பெற ஆரம்பித்ததும் மேலும் இறுக்கமடைந்தது. 16-ம் நூற்றாண்டு நடுவில் இதற்காக ஒரு சட்டமே இயற்றப்பட்டது. ஆங்கில பைபிளானது தேவாலயங்களில் படிக்கப்படக்கூடாது. தனிப்பட்ட முறையிலான படிப்பு என்பது அரச பரம்பரை, பிரபுக் குடும்பங்கள், வர்த்தகர்கள் ஆகியோருக்கு மட்டுமே தரப்படவேண்டும். கைவினைக் கலைஞர்கள், விவசாயிகள் போன்ற சேவைப் பணியாளர்களுக்கு அது முற்றாகத் தவிர்க்கப்படவேண்டும் என்று சொல்லப்பட்டது. விவசாயியின் மகன் விவசாயத்தில் ஈடுபடவேண்டும். கைவினைக் கலைஞர்களின் மகன் அந்தத் தொழிலில் ஈடுபடவேண்டும். மேட்டுக்குடியினரின் மகன் நிர்வாகம், சட்டம் போன்றவற்றைக் கற்றுக் கொள்ளவேண்டும். ஏனென்றால் பிற எல்லா தேசங்களையும் போலவே நமக்கும் விவசாயிகளின் தேவை இருக்கவே செய்கிறது. எனவே, சமூகத்தின் எல்லா பிரிவினரும் பள்ளிக்குச் செல்லத் தேவையில்லை என்று எட்டாம் ஹென்றி 1542-43-ல் வெளியிட்ட அரசாணை தெரிவிப்பதாக, ஏ.ஈ.டோப்ஸ் எழுதிய எஜுகேஷன் அண்ட் சோஷியல் மூவ்மெண்ட்ஸ் 1700-1850 எனும் நூல் தெரிவிக்கிறது.
17-ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இருந்து சாதாரண மக்களுக்கான சாரிட்டி பள்ளிகள் (Charity School) மெதுவாக வர ஆரம்பித்தன. இந்தப் பள்ளிகளின் முக்கிய நோக்கம், உடலுழைப்புப் பணியாளர்களின் மதம் சம்பந்தமான அறிவைக் கொஞ்சம்போல மேம்படுத்த வேண்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் தேவாலயத்தில் நடக்கும் வேதாகம வாசிப்புக்கு உகந்தவர்களாக ஆக்கவேண்டும் என்பதுதான்.
ஆனால், இந்த சாரிட்டி பள்ளி இயக்கமானது ஆரம்பகட்ட உற்சாகத்துக்குப் பிறகு மெள்ள தேக்கமடைந்துவிட்டது. 1780 வாக்கில் சண்டே ஸ்கூல் மூவ்மெண்ட் (Sunday School movement) என்பது ஆரம்பித்தது. அனைவருக்கும் கல்வி என்பது இதன் நோக்கமாக இருந்தது. ஆனால், இந்தக் காலகட்டத்திலும் மிஷனரி நோக்கிலான கல்வியை மட்டுமே பிரதானமாகக் கொண்டிருந்தது. ஒவ்வொரு குழந்தையும் பைபிள் வாசிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதுதான் அதன் முத்திரை வாக்கியமே. ஞாயிற்றுக் கிழமைகளில் தேவாலயம் நிரம்பிவழிய வேண்டும் என்ற முக்கியமான லட்சியமானது இந்தவகைப் பள்ளிகளை நாடு முழுவதும் ஆரம்பிக்க வைத்தது. சில காலம் கழித்து, தினசரி (பகல் நேரப்) பள்ளிகள் (Day School) மீது கவனம் விழ ஆரம்பித்தது. அதன் பிறகு கல்வி முன்பைவிட வெகு வேகமாகப் பரவ ஆரம்பித்தது. இருந்தும் 1834-ல் நகரப் பள்ளிகளில் மத போதனை, எழுதப் படிக்க கற்றுக்கொள்ளுதல், அடிப்படை கணிதம் ஆகியவை மட்டுமே கற்றுத் தரப்பட்டிருந்தது. ஒரு சில கிராமப்புறப் பள்ளிகளில் தீய விளைவுகள் ஏற்பட்டுவிடும் என்ற பயத்தால் எழுதக் கற்றுக் கொடுக்கப்படவில்லை.
தினசரி பள்ளி இயக்கமானது 1802-ல் இயற்றப்பட்ட பீல் சட்டத்தின் மூலம் முடுக்கிவிடப்பட்டது. இதன்படி, சிறுவர்களை வேலைக்கு நியமிக்கும் எஜமானர்கள், அந்தச் சிறுவர்களுக்கு ஏழுவருட பணிக் காலத்தில் முதல் நான்கு வருடங்களுக்கு எழுத, படிக்கவும் கணிதமும் கற்றுத் தர ஏற்பாடு செய்ய வேண்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் தேவாலயத்தில் மத வகுப்பு நடக்கும்போது அந்தச் சிறுவர்கள் அதில் பங்குபெறவைக்கவேண்டும் என்று சட்டம் சொன்னது. ஆனால், இந்த சட்டம் அவ்வளவாக அமலாகவில்லை.
இந்தக் காலகட்டத்தில்தான் ஆசிரியர் ஒருவரின் முறையான கண்காணிப்பு மூலமான கல்வியானது (ஜோசஃப் லன்காஸ்டர், ஆண்ட்ரூ பெல் ஆகியோரால் முன்மொழியப்பட்டது. இது இந்திய கல்வி முறையில் இருந்து கடன் வாங்கப்பட்டிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது) நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. 1792-ல் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை 40,000 ஆக இருந்தது. 1818-ல் அது 6,74,883 ஆக அதிகரித்தது. 1851-ல் 21,44,377 ஆனது. 1801 இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை தனியார் மற்றும் பொது பள்ளிகள் 3363. படிப்படியாக அதிகரித்து 1851-ல் 46,114 ஆக உயர்ந்தது.
ஆரம்பத்தில் கல்வி போதனையானது மிகவும் சுமாராகவே இருந்திருக்கிறது. ஜோசஃப் லன்காஸ்டர் இது பற்றிச் சொல்லும்போது, ஆசிரியர்கள் அறியாமை நிறைந்தவர்களாக இருந்ததோடு பள்ளிக்கு குடித்துவிட்டு வருபவர்களாகவும் இருந்தனர் என்கிறார். எத்தனை வருடம் கல்வி கற்றனர் என்பது பற்றியும் டேப்ஸ் தன் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். மாணவர்கள் ஒழுங்காக பள்ளிக்கு வருவதில்லை என்பதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தாராள மனதுடன் பார்த்தால் மாணவர்கள் படிக்கும் வருடங்களின் எண்ணிக்கை 1835-ல் ஒரு வருடமாக இருந்தது 1851-ல் இரண்டு வருடமாக அதிகரித்திருக்கிறது!
18-ம் நூற்றாண்டில் பொதுப் பள்ளிகளின் நிலைமை மேலும் மோசமடைந்திருக்கிறது. உதாரணமாக 1797 ஜனவரியில் ஸ்க்ரூஸ்பரி (Shrewsbury) பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா? சுமார் 3 அல்லது நான்கு! சில பல கடுமையான முயற்சிகள் எடுக்கப்பட்ட பிறகு அந்த எண்ணிக்கை 20 ஆக பின்னர் உயர்ந்ததாம். ஈடன் பள்ளி (Eton) போன்ற இடங்களில் எழுத்துப் பயிற்சியும் கணிதமும் கற்றுத் தரப்பட்டிருக்கிறது. ஆங்கில, லத்தீன் புத்தகங்கள் கற்றுத் தரப்பட்டுள்ளன. ஐந்தாம் வகுப்பில் புராதன புவியியல், அல்ஜீப்ரா போன்றவை கற்றுத் தரப்பட்டிருக்கின்றன. அந்தப் பள்ளியில் தொடர்ந்து படித்தவர்கள் யூக்ளிட் ஜ்யோமிதி பற்றி ஓரளவுக்குப் படித்தனர். ஆனால், 1851 வரை கணிதம் பள்ளிப் பாடத்திட்டத்தின் முக்கிய அங்கமாக ஆகியிருக்கவில்லை. அப்போதும் கூட கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் அந்தப் பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் என்று சொல்ல முடியாத நிலையே இருந்திருக்கிறது.
ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்கள் எல்லாம் நாலந்தா, தட்சசீலத்தில் இருந்தவற்றைப்போல் முக்கியமானதாகவே இருந்திருக்கின்றன. இந்தியாவுக்கு குறிப்பாக 1773க்குப் பிறகு வந்த மேற்கத்திய பயணிகள், அறிஞர்கள், நீதிபதிகள் எல்லாம் இந்தப் பல்கலைக்கழகங்களில் படித்தவர்களாகவே இருந்தனர். ஆனால், 1800 வரையில் அடிப்படைக் கல்வி என்பதே பொது மக்கள் அளவில் வெகு குறைவாகவே இருந்திருக்கிறது. இந்தியாவில் அந்த நேரத்தில் தரப்பட்ட கல்வியும், அந்தக் கல்வியைப் பெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருந்திருக்கிறது. அனைத்து பிரிவினரும் கல்வி பெற முடிந்திருக்கிறது. கற்றுத் தரப்பட்ட பாடங்களும், கல்வி பெற்ற வருடங்களும் அதிகமாகவே இருந்திருக்கின்றன. கலை இலக்கியங்களில் படைக்கப்பட்ட மாபெரும் சாதனைகள் மட்டுமல்லாமல் அடிப்படைப் பொதுக் கல்வியிலும் சிறந்து விளங்கிய இந்தக் கல்வி முறையைத்தான் மிகவும் பின்தங்கியதாக பின்னால் வந்த பிரிட்டிஷார் சொன்னார்கள்.
தங்கத்தைப் பார்த்து பித்தளை கேலி செய்ததைப் போல். ஆனால், இந்த உண்மைகள் எல்லாம் மறைக்கப்பட்டுவிட்டதால், நம் மனங்களில் தங்கத்தின் மதிப்பு தெரியாமலேயே போய்விட்டிருக்கிறது. பித்தளையின் பின்னால் பித்துப் பிடித்தபடி இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறோம்.
(தொடரும்)
Share/Bookmark

பிராமணர்கள் மட்டும்தான் படித்தார்களா?

பிராமணர்கள் மட்டும்தான் படித்தார்களா?:
மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 6
தரம் பால் தொகுத்துத் தந்திருக்கும் புள்ளிவிவரங்களில் கற்றுக் கொடுக்கப்பட்ட பாடங்கள், பள்ளியில் சேர்க்கப்படும் வயது, எத்தனை வருடம் கல்வி கற்றனர், உயர் கல்வி பெற்றவர்களின் எண்ணிக்கை எனப் பல விஷயங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், தரம்பால் அந்தத் தகவல்களைச் சேகரித்திருக்கவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம்தான் அவற்றைச் சேகரித்திருந்தன.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, பாரசீகம் என அவரவர் தாய்மொழிகளில் பாடங்கள் கற்றுத் தரப்பட்டன. ஆங்கிலம்கூட சில பள்ளிகளில் கற்றுத் தரப்பட்டிருக்கின்றன. பள்ளியில் சேர்க்கும் வயதானது மாவட்டத்துக்கு மாவட்டம் சிறிய வேறுபாடுகளுடன் இருந்திருக்கிறது. ராஜமுந்திரி பகுதியைப் பொறுத்தவரையில் ஐந்து வயது, ஐந்தாம் மாதம், ஐந்தாம் நாள் என்பது பள்ளியில் சேர்ப்பதற்கு சுப தினமாகக் கருதப்பட்டிருக்கிறது. கடப்பாவைப் பொறுத்தவரை பிராமணச் சிறுவர்கள் ஐந்திலிருந்து ஆறு வயதுக்குள் பள்ளியில் சேர்ந்துவிட்டிருந்தனர். சூத்திரர் வகுப்பைச் சேர்ந்த சிறுவர்கள் ஆறிலிருந்து எட்டு வயதுக்குள் பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள். குறைந்தபட்சம் ஐந்து வருடங்களில் ஆரம்பித்து பதினைந்து வருடங்கள் வரை கல்வி ஆண்டு இருந்திருக்கிறது. மதராஸ் கவர்னர் இது தொடர்பாகச் சொல்கிறார்: மாணவர்கள் பதிமூன்று வயதை அடைவதற்கு முன்பாகவே பல்வெறு கல்வித்துறைகளில் கணிசமான விஷயங்களைக் கற்றுத் தேர்ந்துவிடுகிறார்கள்.
பள்ளியானது அதிகாலையில் ஆறுமணிக்கே ஆரம்பித்ததாகத் தெரியவருகிறது. இரண்டு இடைவேளைகள், மதிய உணவு இடைவேளை என இருந்திருக்கின்றன. சில இடங்களில் மாலை சூரியன் மறைவது வரைகூட வகுப்புகள் நடந்திருப்பதாகத் தெரியவருகிறது. எழுதவும் படிக்கவும் முக்கியமாக கற்றுத்தரப்பட்டிருக்கிறது. கணிதமும் முக்கியப் பாடமாக இருந்திருக்கிறது. பால ராமாயணத்தில் ஆரம்பித்து பாகவதம், கஜேந்திரமோட்சம், குசேல புராணம் என பெரிதும் புராணப் பாடங்களே மிகுதியாகக் கற்றுத் தரப்பட்டிருக்கின்றன. அதாவது, வேத வேதாந்த விசாரங்களின் சாராம்சமானது கதை வடிவில் ஆரம்ப நிலை மாணவர்களுக்கு அங்கு போதிக்கப்பட்டிருக்கின்றன. இவையே நாடகமாக, தெருக்கூத்துகளாக, பொம்மலாட்டமாக, தோல்பாவைக் கூத்தாக பல்வேறு வடிவங்களில் சமூகத்தின் அனைத்துப் பகுதியினருக்கும் சென்று சேரும் வகையில் தரப்பட்டிருக்கின்றன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.
உயர் கல்வியைப் பொறுத்தவரையில் வேதங்கள், வான சாஸ்திரம்,கணித சாஸ்திரம்,தர்க்க சாஸ்திரம், நீதி சாஸ்திரம், தத்துவ விசாரம், மருத்துவம் என பல துறைகள் இருந்திருக்கின்றன. வேதங்கள், தத்துவ விசாரங்கள், நீதி சாஸ்திரம் போன்றவற்றைப் பெரிதும் பிராமணர்கள் மட்டுமே கற்றிருக்கிறார்கள். வான சாஸ்திரம், மருத்துவம் போன்றவற்றை அனைத்து சாதியினரும் கற்றிருக்கிறார்கள். கேரளாவைப் பொறுத்தவரையில் வான சாஸ்திரம் படித்த மொத்தம் 808 பேரில் 78 பேர் மட்டுமே பிராமணர்கள். மருத்துவம் படித்த 194 பேரில் 31 பேர் மட்டுமே பிராமணர்கள். மதராஸைப் பொறுத்தவரையில் மருத்துவம், அறுவை சிகிச்சை போன்றவற்றை பல்வேறு சாதியினர் மேற்கொண்டிருந்திருக்கிறார்கள். பிரிட்டிஷ் மருத்துவர்களின் பார்வையில் மதராஸைச் சேர்ந்த சிகை அலங்காரத்தொழிலில் ஈடுபட்ட பிரிவினரே அறுவை சிகிச்சையில் நிபுணர்களாக இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
உலகம் யாரால், எப்படி உருவாக்கப்பட்டது, உயிரினங்களின் வாழ்க்கை நோக்கம் என்ன போன்ற கேள்விகளால் தூண்டப்பட்ட பிரிவினர் அது சார்ந்த பாடங்களைக் கற்றிருக்கிறார்கள். இந்த உலக வாழ்க்கையே மாயை என்று கூறும் அளவுக்கு அது தத்துவார்த்த அம்சங்களைக் கொண்டதாக இருந்திருக்கிறது. அதே நேரம் இந்த உலக வாழ்க்கையை கொண்டாட்டமாக, கேளிக்கையாக பார்க்கும் பார்வையும் இருந்திருக்கிறது. லவுகீகத் தேவைகளே பிரதானம் என்று நினைத்த பிரிவினர் அது சார்ந்த கல்வியைத் தேடிப் பெற்றிருக்கின்றனர். பர வித்யா, அபர வித்யா என கல்வியானது இரு பெரும் பிரிவாகப் பிரிக்கப்பட்டு கற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதாவது, அடிப்படைக் கல்வியானது அனைத்து சாதியினருக்கும் தரப்பட்டிருக்கிறது. உயர் கல்வியானது வாழ்க்கைப் பார்வை சார்ந்து பெறப்பட்டிருக்கிறது.
பிராமணச் சிறுவர்களின் கல்வியைப் பற்றி கூடுதலாக பிரிட்டிஷ் ஆவணங்களில் இன்னொரு தகவலும் தரப்பட்டிருக்கிறது. கடப்பா, குண்டூர் பகுதிகளில் ஏழை பிராமணச் சிறுவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து 10 முதல் 100 மைல் தொலைவில் இருக்கும் பள்ளிகளில் சேர்ந்து படித்திருக்கிறார்கள். வீடு திரும்ப பல வருடங்கள் ஆகும். சில நேரங்களில் கல்வி கற்ற கிராமத்திலேயே கூட தங்கிவிடுவதும் உண்டு. எந்த கிராமத்தில் தங்கி இருக்கிறார்களோ அந்த கிராமத்தினரே அந்தச் சிறுவர்களுக்கு தினமும் உணவுகொடுத்து பராமரித்து வந்திருக்கின்றனர். ஒவ்வொரு பிராமணர் வீட்டின் முன்னாலும் சென்று யாசகம் பெற்றே உணவுத்தேவையைப் பூர்த்தி செய்துள்ளனர்.
இது தவிர வீடுகளில் கல்வி பெற்றவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததாகவும் அந்த ஆவணங்கள் தெரிவிகின்றன. பெற்றோர், உறவினர்கள் அல்லது தனிப்பட்ட முறையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஆகியோரிடமிருந்தும் பலர் கல்வி கற்றிருக்கிறார்கள். கேரளத்தில் இது ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்திருக்கிறது. குறிப்பாக மருத்துவம் சார்ந்த உயர் கல்வி இப்படிப் பெறப்பட்டிருக்கிறது. இப்படியான மருத்துவர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் இருந்திருக்கிறார்கள். நீதி சாஸ்திரம், வான சாஸ்திரம், மெய்யியல், கவிதை, இலக்கியம் போன்றவையும் நிறுவனம் சாராமல் பரவலாகக் கற்றுத் தரப்பட்டிருக்கின்றன. மதராஸிலும் தனிப்பட்ட முறையில் கற்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகவே இருந்திருக்கிறது. சூத்திரர்களில் 28.7%, இன்று தலித் என்று அடையாளப்படுத்தப்படும் சாதியினரில் 13% அப்படியான கல்வி பெற்றிருக்கிறார்கள்.
பள்ளிகளில் கல்வி கற்றவர்களில் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்திருக்கிறது. ஆனால், மலபாரிலும் விசாகபட்டணத்தில் ஜெய்ப்பூர் ஜமீனிலும் மட்டும் பெண்கள் கணிசமான அளவில் பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள். ஒன்றுக்கொன்று மிகவும் தொலைவில் இருக்கும் இந்தப் பகுதிகளில் இந்த ஒற்றுமை இருந்தது எப்படி என்பது ஆய்வுக்குரியது.
பள்ளிகள் களி மண்ணால் கட்டப்பட்டு கூரை வேய்ந்ததாக இருந்திருக்கின்றன. ஓரிரு அறைகளில் ஆரம்பித்து 11 அறைகள் வரை கொண்டதாக இருந்திருக்கின்றன. வீடுகளில் திண்ணைகளில் அமர்ந்தும் கல்வி கற்றிருக்கிறார்கள்.
ஆரம்பக் கல்வியானது நான்கு கட்டமாகக் கற்றுத் தரப்பட்டிருக்கிறது. முதலில் அகர வரிசை எழுத்துகளை மணலில் சிறிய குச்சியால் எழுதிப் படித்திருக்கிறார்கள். இரண்டாவது கட்டமாக பனை ஓலையில் எழுதிப் படித்திருக்கிறார்கள். இந்தக் கட்டத்தில் எழுதவும் வாசிக்கவும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். கணிதத்தைப் பொறுத்தவரை 100 வரை எழுதிப் படித்திருக்கிறார்கள். நிலங்களின் அளவு தொடர்பான விஷயங்களும் கற்றுத் தரப்பட்டிருக்கின்றன. இதன் அடுத்த கட்டத்தில் வாழை இலையில் எழுதிப் படித்திருக்கிறார்கள். அதில் கூட்டல், கழித்தல் போன்றவை கற்றுத் தரப்பட்டிருக்கின்றன. நான்காவது கட்டத்தில் காகிதத்தில் எழுதிப் படித்திருக்கிறார்கள். இந்தக் கட்டத்தில் ராமாயணம் போன்ற காவியங்களை எழுதிப் படிக்கத் கற்றுக் கொள்வார்கள். கடிதங்கள், மனுக்கள் எழுதுதல், கணக்கு வழக்குகள் போன்றவை கற்றுத் தரப்பட்டிருக்கின்றன.
சமூகத்தின் அனைத்து பிரிவில் இருந்தும் ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள். இரு பிறப்பாளர்கள்தான் எண்ணிக்கையில் அதிகம் என்றாலும் பிற 30 வகை ஜாதியைச் சேர்ந்த ஆசிரியர்களும் இருந்திருக்கிறார்கள். சந்தால் வகுப்பைச் சேர்ந்த ஆறு ஆசிரியர்கள் கூட இருந்திருக்கிறார்கள். மாணவர்களின் எண்ணிக்கைப் பார்த்தால் பிஹார் பகுதியில் பிராமண, காய்ஸ்த சாதியைச் சார்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 15-16%கூடத் தாண்டவில்லை. பர்த்வான் மாவட்டத்தில் வைசியர்களின் எண்ணிக்கைக்கு கிட்டத்தட்ட இணையாக, சந்தால் எனும் தலித் மாணவர்களின் எண்ணிக்கை இருந்திருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த மாவட்டத்தில் 13 கிறிஸ்தவ மிஷனரி பள்ளிகளும் இருந்திருக்கின்றன. ஆனால், அங்கு படித்த தலித் சிறுவர்களின் எண்ணிக்கை வெறும் 86 தான். ஆனால், சுதேசிப் பள்ளிகளில் படித்த தலித் சிறுவர்களின் எண்ணிக்கையோ 674.
போக்குவரத்து வசதிகளும் அச்சு ஊடகமும் பெரிதாக இருந்திருக்காத ஒரு காலகட்டத்தில் இந்தியாவில் கல்வி இவ்வளவு விரிவாகவும் அனைத்து சாதியினரை உள்ளடக்கியதாகவும் இருந்தது மிகவும் ஆச்சரியமானதுதான். இந்தத் தரவுகளைச் சேகரித்த பிரிட்டிஷாருக்கு யதார்த்த நிலை இப்படி இருந்ததைப் பார்த்தபோது நம்பவே முடியவில்லை. கிறிஸ்தவ ரட்சிப்பும் ஐரோப்பிய அரசாட்சியும் இல்லாமலேயே உலகில் நல்ல விஷயங்கள் நடந்து வந்திருக்கின்றன என்பதை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவர்கள் அப்படி நினைத்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால், அந்த 19-ம் நூற்றாண்டின் தொடக்க காலகட்டத்தில் பிரிட்டனும் ஐரோப்பிய தேசங்களும் இந்தியாவை ஒப்பிடும்போது கல்வியிலும் பல மடங்கு பின் தங்கியதாகத்தான் இருந்திருக்கின்றன. அங்கு அதுவரை சமுகத்தின் அனைத்து பிரிவினருக்கும் இருந்த கல்வி என்பது ஞாயிற்றுக்கிழமைகளில் பைபிள் வகுப்புகளில் சொல்லித்தரப்பட்ட வேதாகமக் கல்வியாக மட்டுமே இருந்தது.

இன்று அவர்கள் வாழ்வின் பல தளங்களில் நாம் எட்ட முடியாத உயரத்துக்குப் போய்விட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால், அந்த முன்னேற்றம் என்பது நேர்மையான வழியில் பெறப்பட்டதல்ல. தன்னை விட வேகமாக ஓடிக் கொண்டிருந்த ஒருவருடைய காலை உடைத்துப் போட்டுவிட்டு ஓடிப் பெற்ற வெற்றி.
இன்று நாம் நொண்டியடித்துக் கொண்டிருப்பது உண்மைதான். ஆனால், நாம் முடமாகவே பிறந்தவர்கள் அல்ல. முடமாக்கப்பட்டவர்கள். அதையும் மீறி நாம் சாதிக்கத் தொடங்கியிருக்கிறோம் என்பது வேறு விஷயம். என்றாலும் காலத்தைத் திருப்பி வைக்கும் சக்தி மட்டும் நமக்குக் கிடைத்தால், இந்தியாவில் காலடி எடுத்து வைத்த முதல் ஐரோப்பியனை அப்படியே அவன் வந்த கப்பலிலேயே திருப்பி அனுப்புவதுதான் நாம் செய்ய வேண்டிய முதல் செயல்.
மிகவும் சிறிய செயல்தான். ஆனால், அதைச் செய்யாததால் நமக்கு ஏற்பட்டதோ பேரிழப்பு.
(தொடரும்)
Share/Bookmark

’2000 வருடங்களாக எங்களைக் கல்வி கற்க விடவில்லை!’

’2000 வருடங்களாக எங்களைக் கல்வி கற்க விடவில்லை!’:
மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 5
இந்திய வரலாற்றாய்வில் தரம்பால் ஈடுபாடு கொண்டது மிகவும் தற்செயலாக நடந்த ஒரு செயல் என்றுதான் சொல்லவேண்டும். 1942-ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர் என்றாலும் அடிப்படையில் லட்சிய கிராம (ஆஸ்ரம) வாழ்க்கை வாழ்வதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். 1948 வாக்கில் பாலஸ்தீனத்தில் யூதர்கள் Kibbutzim பாணியில் வாழ்வதைக் கேள்விப்பட்டு அங்கு போய்ப் பார்த்தார். ஆனால், அது இந்திய சூழலுக்கு ஒத்துவராது என்று அவர் மனதுக்குப் பட்டது. ரிஷிகேஷில் சில நண்பர்களை அழைத்துக் கொண்டு கூட்டுப் பண்ணை வாழ்க்கை வாழ ஆரம்பித்தார். அனைத்து குடும்பத்தினருக்கும் சம அளவிலான நிலம் என அது ஒரு பரீட்சார்த்த முயற்சியாக இருந்தது. ஆனால், அவர்களுக்கிடையே ஒருவித ஒத்திசைவு ஏற்பட்டிருக்கவில்லை.
அதன் பிறகு வேறு பல விஷயங்களில் ஈடுபட்டவர் 1960-ல் ஒரு ரயில் பயணம் மேற்கொண்டார். அது அவரது வாழ்க்கையை மாற்றி அமைத்தது என்று சொன்னால் மிகையில்லை. அதை அவருடைய வார்த்தையிலேயே பார்ப்போம்:
1960 வாக்கில் குவாலியரில் இருந்து டெல்லிக்கு ரயிலில் போய்க் கொண்டிருந்தேன். மூன்றாம் வகுப்புப் பெட்டியில் ஆறு-ஏழு மணி நேரப் பயணம். அந்தப் பயணத்தில் ஒரு சிலரைச் சந்தித்தேன். அந்தச் சந்திப்பு ஒருவகையில் எனக்கு இந்தியாவைப் பற்றிய அதாவது, உண்மையான இந்தியாவைப் பற்றிய ஒரு பக்கத்தைத் திறந்து காட்டியது.
ரயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இருந்தும் தங்களை ஒடுக்கிக் கொண்டு சிலர் எனக்கு உட்கார இடம் ஏற்படுத்தித் தந்தனர். அங்குதான் அவர்களைச் சந்தித்தேன். சுமார் 12 பேர் அந்தக்குழுவில் இருந்தனர். மூன்று நான்கு பெண்கள். ஏழெட்டு ஆண்கள்.
எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டேன்.
ராமேஸ்வரத்துக்கும் வேறு சில இடங்களுக்கும் புனித யாத்திரை முடித்துவிட்டு வருகிறோம் என்றார்கள்.
சுமார் மூன்று மாதமாக அந்தப் பயணத்தில் இருக்கிறார்கள். இப்போது ஹரித்துவார் போய்க்கொண்டிருந்தார்கள். லக்னோவுக்கு வடக்கே இருக்கும் கிராமங்களில் இருந்து வந்திருந்தார்கள். அவர்களிடம் நிறைய துணி மூட்டைகள் இருந்தன. சில மண் பானைகளும் கைவசம் வைத்திருந்தார்கள். அந்த பானையில் என்ன இருக்கின்றன என்று கேட்டேன்.
நெய், கோதுமை மாவு, சர்க்கரை என தேவையான உணவுப் பொருட்கள் அனைத்தையும் வீட்டில் இருந்தே எடுத்து வந்திருந்தார்கள். கூட்ட நெரிசல் பற்றி அந்தப் பெண்களுக்கு எந்த புகாரும் இல்லை. ஆனால், யாராவது உணவுப் பொதிகளைக் காலால் மிதித்துவிட்டால் மிகவும் வருந்தினார்கள்.
நீங்கள் எல்லாரும் ஒரே ஜாதியினர்தானே என்று கேட்டேன்.
இல்லை.
இல்லையா… நம்பவே முடியவில்லையே.
யாத்திரையில் ஜாதி கிடையாது. அதிலும் புனித யாத்திரையில் ஜாதி கிடையவே கிடையாது என்றனர்.
எனக்கு அது தெரியாது. அப்போது எனக்கு 38 வயதாகியிருந்தது. இந்தியாவில் இருக்கும் பிறரைப் போலவே எனக்கும் விவசாயிகள், கைவினை கலைஞர்கள், பிற கிராமத்துவாசிகள் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை.
நீங்கள் சென்னைக்குச் சென்றீர்களா?
ஆமாம்.
பம்பாய் சென்றீர்களா?
ஆமாம். அந்த இடங்களைக் கடந்துதான் வந்தோம்.
அங்கு என்னென்ன பார்த்தீர்கள்?
எதுவுமில்லை. எங்களுக்கு நேரமில்லை.
நவீன இந்தியாவின் பல இடங்களின் பெயரைச் சொல்லிக் கேட்டேன். எல்லா இடங்களையும் கடந்து வந்திருக்கிறார்கள். எதையும் இறங்கிப் பார்த்திருக்கவில்லை. அவர்களுடைய பயணத்தில் புனித ஷேத்திரங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன.
இப்போது டெல்லி போகிறீர்கள் அல்லவா?
ஆமாம்.
அங்கு இறங்கி சுற்றிப் பார்ப்பீர்களா?
மாட்டோம். டில்லியில் இறங்கி ரயில் மாற வேண்டியிருக்கிறது. நாங்கள் ஹரிதுவார் போகிறோம்.
சுதந்தர இந்தியாவின் தலைநகரம் டெல்லி. அதை இறங்கி பார்க்கமாட்டீர்களா?
மாட்டோம். எங்களுக்கு அதற்கு நேரமில்லை. ஹரித்துவார் போகவேண்டும். அதன் பிறகு வீடு திரும்ப வேண்டும்.
சுமார் ஐந்தாறு மணி நேரம் நாங்கள் பேசினோம். எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. நாம் எந்த இந்தியாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். நேருவும் இன்ன பிற தலைவர்களும் நவீன கோயில்கள், பல்கலைக்கழகங்கள், தொழிற்சாலைகள் என இந்த நவீன இந்தியாவை யாருக்காகக் கட்டிக் கொண்டிருக்கிறோம்? புனித யாத்திரைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த பாரம்பரிய மனிதர்களுக்கு இந்த நவீன இந்தியாவில் எந்த அக்கறையும் இல்லை. ஆனால், அவர்கள்தான் இந்த இந்தியாவின் உண்மையான பிரதிநிதிகள். நேருவை விட என்னையும் உங்களையும் விட அதிக பிரதிநிதித்துவம் கொண்டவர்கள்.
இந்தப் பயணம் தரம்பாலை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்தியாவின் புதிய தலைவர்களுக்கும் அதன் எளிய மக்களுக்கும் இடையிலான இடைவெளி அவரை ஆழ்ந்து யோசிக்க வைத்தது. இந்தியா என்றைக்குமே இப்படித்தான் இருந்ததா என்ற கேள்வி அவர் மனத்தில் எழுந்தது.
பீஸ் பிஸ்வ மற்றும் சாசனா என்ற கிராம சபைகள் நிர்வாகத்திலும் செயல் திறனிலும் துடிப்புடன் இருந்ததை அவர் பார்த்திருந்தார். இந்திய கலாசாரத்தை எது இப்படி ஜீவனுடன் இயங்க வைத்துவருகிறது என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது. இந்த கிராமப்புற சமுதாயங்கள் செயல்படும் விதத்தை நாம் புரிந்துகொண்டுவிட்டால் நவீன உலகில் நாம் எதிர்கொண்டுவரும் பல பிரச்னைகளை எளிதில் தீர்த்து நாம் மறுமலர்ச்சி அடைந்துவிட முடியும் என்று நம்பினார்.
அந்தத் தேடல்தான் பிரிட்டிஷாரின் வருகைக்கு முன்னால் இந்தியா எப்படி இருந்தது என்ற கேள்வியில் அவரை நிறுத்தியது. அந்தப் பணியை எப்படி ஆரம்பிப்பது என்று அவருக்கு முதலில் எதுவும் புரிந்திருக்கவில்லை. பிரிட்டிஷ் ஆவணங்களினூடான தன் மாபெரும் பயணத்தின் சிறு காலடியை எடுத்து வைத்தபோது அதன் முக்கியத்துவம் அவருக்குப் புரிந்திருக்கவே இல்லைதான். இந்தியா பற்றி அதுவரை அவர் படித்தும் கேட்டும் வந்தவையெல்லாம் அவ்வளவாக சொல்லிக்கொள்ளும்படியாக இருந்திருக்கவில்லை.
ஆனால், பொய்யின் சருகுகள் மலை போல் குவிந்திருந்தாலும் உண்மையின் சிறு தீப்பொறி போதுமே அதை எரித்துச் சாம்பலாக்கிவிட. தரம்பால் வசமோ சூரியனைப் போல் பிரகாசமான ஜோதி கிடைத்தது. அது இந்தியாவின் கடந்த காலத்தைப் பொன்னிற ஒளியில் காட்டியது.
1964 வாக்கில் தரம்பாலுக்கு பழங்கால ஆவணங்கள் பற்றியும் அறிக்கைகள் பற்றியும் சாதாரண மனிதருக்குத் தெரிந்த அளவுக்குத்தான் தெரிந்திருந்தது. முதன் முதலாக பிரிட்டிஷ் ஆவணங்களை அவர் பார்த்தது சென்னையில்தான். டச்சு, போர்ச்சுகீசியர்கள், ஃப்ரெஞ்சுக்காரர்கள், பிற ஐரோப்பிய கிறிஸ்தவ அமைப்புகள், வர்த்தக அமைப்புகள் என 16-ம் நூற்றாண்டில் இருந்து இந்தியா வந்த பலரும் தங்கள் ஆவணங்களைச் சேகரித்து வைத்திருந்தனர். ஆனால், அவை அளவில் குறைவுதான். பிரிட்டிஷாரின் ஆவணங்கள்தான் ஒப்பீட்டளவில் மிகவும் அதிகம்.
அவை மூன்று வகைப்பட்டவையாக இருந்தன. முதலாவதாக, இந்திய நிலப்பகுதி, இந்திய மக்களின் பழக்கவழக்கங்கள், சமூக வாழ்க்கை, திருவிழாக்கள், கலாசார வாழ்க்கை, கல்வி முதலான இங்கு இருக்கும் அமைப்புகள், விவசாய வழிமுறைகள், தொழில்கள், இந்திய விஞ்ஞானம், தொழில்நுட்பம் இவை பற்றிய குறிப்புகள்.
இரண்டாவதாக, 1748-ல் ஆற்காட்டைக் கைப்பற்றியதில் ஆரம்பித்து 1947 வரையான பிரிட்டிஷ் இந்திய போராட்டங்கள், பிரிட்டிஷார் உருவாக்கிய அமைப்புகள், செயல்பாடுகள் பற்றிய ஆவணங்கள்.
மூன்றாவதாக, இந்தியாவை ஆள்வது தொடர்பாக பிரிட்டனில் நடைபெற்று வந்த கூட்டங்கள், தீர்மானங்கள், திட்டங்கள் இவற்றின் ஆவணங்கள்.
இதில் இந்தியாவின் கல்வி பற்றிய ஆவணங்களைப் படித்த தரம்பால் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் உறைந்துபோனார். ஏனென்றால், கடந்த நூறாண்டுகளாக சொல்லப்பட்டு வந்த விஷயங்களுக்கு முற்றிலும் மாறான ஒரு சித்திரத்தை அவர் அங்கு கண்டார். இந்துக்களில் இரு பிறப்பாளர்களுக்கு மட்டுமே கல்வி தரப்பட்டது. இஸ்லாமியர்களில் மேல்தட்டுப் பிரிவினருக்கு மட்டுமே கல்வி கிடைத்தது என்பதுதான் பொதுவாகப் பரப்பட்டுள்ள பொய். உண்மையில் மதராஸ் பிரஸிடென்ஸியில் அதாவது தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஒரிஸ்ஸா போன்ற பகுதிகளை உள்ளடக்கிய பகுதியில் சூத்திரர்கள் என்றும் அவர்களுக்குக் கீழானவர்கள் என்றும் சொல்லப்படும் பிரிவினர்தான் அன்றைய பள்ளிகளில் பெரும்பான்மையாகக் கல்வி கற்றிருக்கிறார்கள். 1822-25-ல் பிரிட்டிஷாரால் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் இந்த உண்மையை ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றன.
1820-களில் பிரிட்டிஷ் வருவாய் ஆணையமானது கலெக்டர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் ஆய்வில் என்னென்ன தகவல்கள் வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தியிருந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் பள்ளிகள், கல்லூரிகள், அங்கு பயிலும் ஆண்-பெண் மாணவர்கள் எண்ணிக்கை இவற்றை தொகுத்துத் தரும்படி கேட்டிருந்தது. மாணவர்கள் பிரிவில் பிராமணர்கள், சத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், பிற சாதியினர் என தனித்தனியாகக் குறிப்பிடும்படிக் கேட்டுக்கொண்டிருந்தது. அதன்படி 21 மாவட்ட கலெக்டர்கள் தாங்கள் சேகரித்த புள்ளிவிவரங்களை அனுப்பிவைத்தனர்.
கல்வி கற்ற மாணவர்களில் பிராமணர்கள் தென் ஆற்காடு மாவட்டத்தில் 13%, சென்னையில் 23% இருந்திருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் தென் ஆற்காடு, செங்கல்பட்டு மாவட்டத்தில் 3%க்கும் குறைவுதான். சேலத்தில் 10% தான். ஆனால், பள்ளியில் பயின்ற சூத்திரர்கள் மற்றும் பிற சாதியினரின் சதவிகிதம் சேலத்தில் 70% ஆகவும் தென் ஆற்காடு, திருநெல்வேலியில் 84% அதிகமாகவும் இருந்திருக்கிறது.
கேரளாவில் பள்ளியில் பயின்ற பிராமண மாணவர்களின் எண்ணிக்கை 20%க்கும் குறைவுதான். இஸ்லாமிய மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 27%. சூத்திரர்களும் பிற சாதியினரும் சுமார் 53% இருந்திருக்கிறார்கள்.
கர்நாடகத்தின் பெல்லாரியில் பிராமண-வைசிய மாணவர்களின் எண்ணிக்கை 33%. சூத்திரர்கள் மற்றும் பிற சாதியினரின் எண்ணிக்கை 63% . ஒரிய மொழி பேசப்படும் பகுதியிலும் நிலைமைஇதுதான். பிராமண மாணவர்களின் எண்ணிக்கை 35.6%. பிற சாதியினரின் எண்ணிக்கை 63.5%.
தெலுங்கு பேசும் பகுதியில்தான் பிராமணர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்திருக்கிறது. கடப்பாவில் 24%. விசாகப்பட்டிணத்தில் 46%. வைசியர்களின் எண்ணிக்கை கடப்பாவில் 29%. விசாகப்பட்டிணத்தில் 10.5%. சூத்திரர்களும் பிற சாதியினரும் கடப்பா, விசாகப்பட்டிணத்தில் சுமார் 41 % இருந்திருக்கிறார்கள்.
2000 வருடங்களாக எங்களைக் கல்வி கற்க விடவில்லை என்ற அசட்டு வாதத்தில் ஆரம்பித்து இணையதளங்களில் எங்களை வசைபாடுபவர்கள் இப்போது கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்திருப்பதுகூட எங்களால்தான் சாத்தியமானது என அரைவேக்காட்டு முழக்கங்கள் வரை ஓங்கி ஒலிக்கும் நம் சூழலில் தரம்பாலை இந்துத்துவ முத்திரை குத்தி ஒதுக்குவது எளிதாகவே இருக்கும். ஆனால், அவர் சொல்லும் உண்மைகள் அப்படி எளிதில் புறந்தள்ள முடிந்தவை அல்ல. இயேசுவைத்தான் சிலுவையில் அறைந்து கொல்ல முடியும். அவருடைய வார்த்தைகளை அல்ல.
(தொடரும்)
Share/Bookmark

அழிக்கவில்லை, புறக்கணித்தார்கள்

அழிக்கவில்லை, புறக்கணித்தார்கள்:
மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 4
பஞ்சாபின் பாரம்பரியக் கல்வி மிகவும் சிறப்பாக இருந்ததற்கு முக்கியமான ஒரு காரணம் மகாராஜா ரஞ்சித் சிங் மேற்கொண்ட விசேஷ முயற்சிகள்தான். History of Indigenous Education in the Punjab என்ற புத்தகம் டாக்டர் லெயிட்னரால் (Gottlieb William Leitner) எழுதப்பட்டிருந்தது. லாகூரில் இருந்த ஓரியண்டல் கல்லூரி, அரசு கல்லூரி ஆகியவற்றின் பிரின்சிபாலாக இருந்தவர் இவர். டைரக்டர் ஆஃப் பப்ளிக் இன்ஸ்ட்ரக்ஷன் ஆகவும் சிறிது காலம் இருந்திருக்கிறார்.
அவர் தன்னுடைய நூலில் வேதனையுடன் ஒரு விஷயத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
‘பஞ்சாபின் உண்மையான பாரம்பரிய கல்வி கழுத்து நெரிக்கப்பட்டு, கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டது. அதை ஆரோக்கியமான முறையில் மறுமலர்ச்சி அடையச் செய்யவும் வளர்த்தெடுக்கவும் இருந்த வாய்ப்புகள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டன. அல்லது திரிக்கப்பட்டன. தனி நபர்களை இதற்குக் காரணமாகச் சொல்ல முடியாது. இது நம் (பிரிட்டிஷ் அரசின்) நிர்வாகத்தின் ஒட்டு மொத்த தோல்வியையே காட்டுகிறது.’
இந்த வாக்கியங்கள் பிரிட்டிஷ் அரசின் பிழையான செயல்பாடுகளுக்கு அழுத்தமான ஆதாரமாக விளங்குகின்றன. பிரிட்டிஷாரின் கைக்கு பஞ்சாப் வருவதற்கு முன்பாக அங்கு கல்வி எப்படி இருந்தது என்பது பற்றியும் அவர் விரிவாக எழுதியிருக்கிறார்.
‘பஞ்சாப் ஒரு அருமையான பிரதேசம். சட்லெஜ், யமுனை நதிகள் பாய்வதால் மட்டுமல்ல. இந்த ஒட்டுமொத்த பிராந்தியமுமே அற்புதமான நினைவுகளைக் கொண்டிருக்கிறது. அதன் கலாசார வரலாறு பல்வேறு விஷயங்களை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. திறமையான நிர்வாகம், தலைமைக்குக் கீழ்படியும் விசுவாசம் இவற்றுக்கெல்லாம் பஞ்சாபுக்கு இணையாக உலகில் வேறு எங்குமே கிடையாது. இவை எல்லாவற்றையும்விட கல்வி கற்பதற்கு இந்த பிராந்தியத்தில் இருக்கும் ஆர்வமும் மதிப்பும் அபாரமானது. அனைத்து பிரிவினருக்கும் கல்வி கிடைத்திருக்கிறது. ஒரு பூசாரி என்பவர் ஒரு பேராசிரியராகவும் கவிஞராகவும் இருந்திருக்கிறார். கல்வி என்பது சமூக, மத, தொழில் சார் கடமையாக இருந்திருக்கிறது.’
பஞ்சாப்தான் இந்தியாவிலே கடைசியாக பிரிட்டிஷாரால் கைப்பற்றப்பட்ட பகுதி. ஔரங்கசீபுக்குப் பின்னால் வந்தவர்கள் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் சீக்கியர்கள் வலுப்பெற்றிருந்தனர். முழுவதுமாக பிரிட்டிஷாரின் வசம் பஞ்சாப் வருவதற்கு முன்புவரை சீக்கீயர்களின் நிர்வாகத்தின் கீழே பஞ்சாப் இருந்தது. அவர்கள் தங்களுடைய பாரம்பரிய வழிமுறைகள் மீது பெரும் மதிப்பு கொண்டவர்கள். எனவே, கல்வியைப் பழைய முறைப்படியே தொடர்ந்து நிர்வகித்துவந்தனர்.
ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளி இருந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் கல்விக்கு என்று கணிசமான தொகை ஒதுக்கப்பட்டிருந்தது. வாத்தியார் காணி, காவல்காரன் காணி போன்றவை இல்லாத கிராமமே கிடையாது. கல்வி இலவசமாகவோ, மிக சொற்பமான கட்டணம் பெறப்பட்டோ தரப்பட்டது. இந்த ஆரம்ப நிலைப் பள்ளிகள் நீங்கலாக ஏராளமான கல்லூரிகளும் இருந்தன. மெய்யியல், வானவியல், கணிதம், இலக்கணம், தத்துவம் மற்றும் பல விஷயங்கள் கற்றுத்தரப்பட்டன.

Philip Hartog
சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் கல்வி தரப்பட்டது. தொழில்நுட்பக் கல்வியும் தரப்பட்டது. ஒவ்வொரு மாணவரின் திறமைக்கு ஏற்பவும் அவர் என்ன தொழிலை உத்தேசித்துப் படிக்கிறார் என்பதற்கு ஏற்பவும் ஆசிரியர்கள் கல்வி அளித்தனர்.

இந்த விஷயங்களை பிலிப் ஹெர்டாகுக்கு தேசாய் அனுப்பி வைத்தார். ஆனால், ஹெர்டாகுக்கு இவை திருப்தியைத் தரவில்லை. இதில் அவர் விரும்பும் வகையிலான புள்ளி விவரங்கள் எதுவும் இல்லை. எனவே காந்தியை 1931 டிசம்பர் 2 அன்று சந்தித்தபோது தன் தரப்பு வாதங்களை மேலும் வலுவாக முன்வைத்தார். இந்த பஞ்சாப் பற்றிய அறிக்கையை வைத்துத்தானா அந்த அதிரடி முடிவுகளை அறிவித்தீர்கள் என்று காந்தியை மடக்கினார்.
டாக்டர் லெயிட்னர் பஞ்சாப் பற்றி எழுதிய அறிக்கை1882-ல் எடுக்கப்பட்டது. அப்போது மக்கள் தொகை சுமார் 21 கோடி. அது 1931 வாக்கில் 27 கோடியாக உயர்ந்திருக்கிறது. சுமார் 30 சதவிகித உயர்வு. அதே காலகட்டத்தில் பிரிட்டிஷ் இந்தியாவில் கல்விகற்றவர்களின் எண்ணிக்கை சுமார் 25 லட்சத்தில் இருந்து ஒரு கோடியாக உயர்ந்திருக்கிறது. அதாவது நான்கு மடங்கு உயர்ந்திருக்கிறது. எனவே, பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் கல்வி குறைந்தது என்று சொல்லவே முடியாது என்று வாதிட்டார்.
இந்தியப் பாரம்பரியக் கல்வியை பிரிட்டிஷார் நேரடியாக அழிக்கவில்லை. அதை அவர்கள் புறக்கணித்தார்கள். அதனால் அது அழிய நேர்ந்துவிட்டது என்று காந்தி தன் வாக்கியத்தைச் சிறிது மாற்றிக்கொண்டார். அந்தக் கல்வி முறையில் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் நல்லதாக எதுவும் இருந்திருக்கவில்லை. எனவே, பிரிட்டிஷார் அதை இயற்கை மரணத்தைத் தழுவும்படி விட்டுவிட்டார்கள் என்று ஹெர்டாக் சொன்னார். இஸ்லாமிய மத நிறுவனங்கள் மூலம் கிடைத்து வந்த கல்வியானது இஸ்லாமியர்களுக்கு பெரும் பின்னடைவைத்தான் தந்துள்ளது. நாட்டின் பிற பல பகுதிகளில் நடந்துவந்த பள்ளிகளின் நிலைமையும்இதுவேதான் என்று சொன்னார்.
தேவனின் மகிமையையோ விஞ்ஞானத்தின் பெருமையையோ போதிக்காத கல்வி இயற்கையான மரணத்தைத் தழுவ வேண்டிய ஒன்றாக பிரிட்டிஷாருக்குத் தோன்றியதில் வியப்பேதும் இல்லையே.
ஒருவகையில் ஹெர்டாக் சொன்னது சரிதான். பிரிட்டிஷார் இந்தியப் பாரம்பரிய மரத்தை கோடாலியால் வெட்டிப் பிளக்கவில்லை. ஆனால், அந்த மரத்துக்கு நீர் வரும் கால்வாயை அடைத்துவிட்டார்கள். அந்த மரம் வாடிவிட்டது. அதற்கு மாற்றாக ஆங்கிலக் கல்வி தரும் வேறு ஏராளமான முட்செடிகளை நட்டு வளர்த்தார்கள்.
இந்திய இலக்கியங்கள் எதையுமே படிக்காமலேயே அவை அனைத்தும் குப்பை என்ற தீர்மானத்துக்கு வந்த மெக்காலேயிடம்தான் நம் கல்வியின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
தாஜ்மகாலை வெறும் பளிங்குக் கற்களை பிரமாண்டமாக அடுக்கிவைக்கப்பட்ட குவியல் என்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை காட்டுமிராண்டித்தனமான கட்டுமானம் என்றும் சொன்ன லுட்யென்ஸ் (Edwin Lutvens) வசம்தான் நம் தலைநகரை வடிவமைக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
இந்தியா கேட் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் சிலையை ஒரு வழியாக எடுத்த பின்னரும் 5000 ஆண்டுகளுக்கும் அதிகமான கலாசார பாரம்பரியமுள்ள சுதந்தர இந்தியாவால், அந்த இடத்தில் வேறொரு சிலையை வைக்கமுடியவில்லை. தேசத் தந்தை மகாத்மா காந்தி சிலையையோ, நவீன இந்தியாவை உருவாக்கிய முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு சிலையையோ வைத்திருக்கலாம். பன்மைத்தன்மை மிகுந்த தேசத்துக்குப் பொதுவானதொரு சட்டத்தை உருவாக்கித் தந்த அம்பேத்கரின் சிலையை அங்கே வைத்திருக்கலாம். அல்லது சாரநாத்தில் உள்ள அசோகர் தூண் போன்ற ஒரு சின்னத்தையாவது அங்கே வைத்திருக்கலாம். ஆனால், அந்த மண்டபம் இன்றும் காலியாகத்தான் இருக்கிறது. இந்தியப் பாரம்பரியக் கல்வியின் கண்ணி அறுபடாமல் இருந்திருந்தால் நிச்சயம் இப்படியான அவலம் நமக்கு நேர்ந்திருக்காது.
ஹெர்டாக் காந்தியுடன் வேறு பல விஷயங்களும் பேசினார். ஆரம்பக் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் தரவேண்டும்; இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் அடிப்படைக் கல்வி கிடைக்க வழி செய்யவேண்டும் என்று சொன்னார். சாட்லர் கமிஷனின் உறுப்பினராக இருந்தபோது அவர்கள் பல்கலைக்கழக உயர் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என்று சொன்னபோது ஹெர்டாக் அதை மறுத்துத் தன் கருத்தைத் தெரிவித்திருந்தார்.
அனைவருக்கும் அடிப்படைக் கல்வி தர எவ்வளவு செலவாகும். அதன் மூலம் எத்தனை பேருக்கு கல்வி கிடைக்கும்… எத்தனை வருடங்களில் அதை செய்து முடிக்க முடியும் என்ற புள்ளிவிவரங்களை விரிவாகப் பட்டியலிட்டார். அது மட்டும் போதுமா… அடிப்படைக் கல்விக்குப் பிறகு நடுநிலைக் கல்வி தருவது தொடர்பாக என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்று காந்தி கேட்டபோது அதைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்பதே ஹெர்டாகின் பதிலாக இருந்தது. ஆயிரக்கணக்கான மரங்களை நட்டுக்கொண்டே செல்வதைவிட நூறு மரங்கள் நட்டாலும் தொடர்ந்து பராமரித்து அதைப் பெரிய மரமாக வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது காந்தியின் சிந்தனையாக இருந்தது.
பெண்களுக்கான கல்வியின் வீச்சு அதிகரிக்க வேண்டும் என்று ஹெர்டாக் சொன்னபோது, நிச்சயமாக அதைச் செய்யத்தான் வேண்டும். அதே நேரம் பெண்களை நல்ல தாயாக ஆக்குவதற்கும் அந்தக் கல்வி பயிற்றுவிப்பதாக இருக்கவேண்டும் என்று சொன்னார். சுருக்கமாகச் சொல்வதானால், காந்தியின் கல்வித் திட்டம் என்பது நல்ல மதிப்பீடுகள் சார்ந்ததாக இருந்தது. தனி நபர் முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கவில்லை. அகல உழுவதைக் காட்டிலும் ஆழ உழுவதே சிறந்தது என்பதாக இருந்தது.
ஹெர்டாக் கடைசியாக ஒரு முக்கியமான விஷயத்தையும் சொன்னார். கல்வி தொடர்பான ஒரு பிரச்னைக்கு இந்தியா இன்னும் தீர்வு காணவில்லை. ஒரு விவசாயியை கிளார்க்காக ஆக்குவதற்குப் பதிலாக மேலும் சிறந்த விவசாயியாக ஆக்கும் வகையிலான கல்வி முறையை அது கண்டடையவில்லை.

தேர்ந்தெடுப்பதில் ஒரு நியாயம் இருக்க வேண்டுமென்றால் எல்லாரும் ஒரே தேர்வைத்தான் எழுத வேண்டும். இந்த மரத்தில் ஏறுங்கள் பார்க்கலாம்.
அவர் சொன்னவையே இன்றும் நம் பிரச்னைகளுக்கெல்லாம் ஆதார காரணமாக இருந்துவருவதை ஒருவர் பார்க்க முடியும். நினைத்துப் பாருங்கள்… செருப்பு தைக்கும் பணியில் ஈடுபட்ட ஒருவரை பாட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக ஆக்கியிருக்கலாம். மாடு மேய்த்தவரை அமுல் இந்தியாவின் தலைவராக ஆக்கியிருக்கலாம். சேற்றில் இறங்கி உழுத விவசாயியை விவசாயப் பல்கலையின் பேராசிரியராக, பிரின்சிபாலாக உயரச் செய்திருக்கலாம். அது மிகவும் இயல்பான, எளிய, சண்டை சச்சரவுகள் இல்லாத வளர்ச்சியாக இருந்திருக்கும். அந்ததந்தப் பிரிவினர் பொருளாதார நிலையிலும் சமூக அந்தஸ்திலும் உயர்ந்திருப்பார்கள். ஆனால், துரதிஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. அனைவருமே அரசுப் பணிகளின் குறுகலான வாசல் வழி நுழைவதில்தான் முட்டி மோதினார்கள். அல்லது மோதவைக்கப்பட்டார்கள். அதன் விலையை நாம் கொடுத்துவருகிறோம். இனியும் கொடுப்போம்.
காந்தி – ஹெர்டாக் இடையிலான கருத்துப் பரிமாற்றத்தில் இருந்து ஒரு விஷயம் தெளிவாகப் புரிய வருகிறது. காந்தியிடம் தன் கூற்றை பலப்படுத்துவதற்கான புள்ளிவிவரங்கள் போதுமான அளவுக்கு இருந்திருக்கவில்லை. ஆனால், விஷயம் என்னவென்றால் அது புள்ளிவிவரத்தால் அளவிட முடிந்த ஒன்றும் அல்ல.
மேலும் காந்தியிடம் அப்போது அந்தப் புள்ளி விவரங்கள் இருந்திருக்கவில்லையே தவிர அவை இல்லாமலேயே போயிருக்கவில்லை. இந்தியாவில் கல்வி அனைவருக்கும் அளிக்கப்பட்டிருந்தது. இந்தியப் பாரம்பரியக் கல்வி ஒரு அழகிய மரமாகத்தான் இருந்தது என்ற கூற்றுக்கு ஆதாரமாக லண்டன் நூலகத்தின் மூடப்பட்ட அறைகளில் தெளிவான, விரிவான புள்ளிவிவரங்கள் மண்ணில் புதைந்த விதை போல் தூங்கிக் கொண்டிருந்தன. ஒரு மழைத்துளி போல் தரம்பால் வந்து தொட்டு எழுப்பும்வரை.
(தொடரும்)
Share/Bookmark

பிரிட்டன் வருகைக்கு முந்தைய கல்வி நிலை

பிரிட்டன் வருகைக்கு முந்தைய கல்வி நிலை:
மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் – 3
லண்டனில் 1931-ல் ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டர்நேஷனல் அஃபயர்ஸ், சாட்டம் ஹவுஸில் இந்தியாவின் எதிர்காலம் என்ற தலைப்பில் காந்தியடிகள் உரையாற்றினார். அதில், இந்து, முஸ்லிம், சீக்கியப் பிரச்னை பற்றிப் பேசினார். தீண்டாமை பற்றிப் பேசினார். மோசமாகிக் கொண்டே போகும் இந்தியாவின் ஏழைமை பற்றிப் பேசினார். இந்திய மக்கள் தொகையில் 85% பேர் வசிக்கும் கிராமங்களின் நிலை பற்றிப் பேசினார். பிரச்னைகளைப் பட்டியலிட்டதோடு அதற்கான தீர்வுகளையும் முன்வைத்தார். ‘ஆக்கபூர்வமாக நாம் செயல்படவேண்டியிருப்பதோடு சிலவற்றை அழிக்கவும் வேண்டியிருக்கிறது. அதில் மிகவும் முக்கியமானது ராணுவ, அரசு நிர்வாகச் செலவுகள். என்னிடம் நாடு ஒப்படைக்கப்பட்டால் இந்த செலவுகளை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்துவிடுவேன்’ என்று கூறினார். அரசு நிர்வாகச் செலவு என்று எதைச் சொன்னார் தெரியுமா… பிரிட்டனில் பிரதமருக்கு அப்போது தரப்பட்ட சம்பளம் சராசரி மனிதருக்குக் கிடைத்ததைவிட ஐம்பது மடங்கு அதிகமாக இருந்தது. இந்தியாவிலோ வைஸ்ராயின் சம்பளம் இந்திய சராசரிக் குடிமகனைவிட ஐந்தாயிரம் மடங்கு அதிகமாக இருந்தது!
அந்த உரையில்தான் இந்தியாவின் கல்வி தொடர்பான தன் மனப்பதிவையும் காந்தியடிகள் தெரிவித்தார். காந்தியடிகளிடம் புள்ளிவிவரங்கள் இருந்திருக்கவில்லை. ஆனால், இந்தியாவின் பாரம்பரியக் கல்வி பற்றியும் அது பிரிட்டிஷாரின் வருகைக்குப் பின் அழிக்கப்பட்டது பற்றியும் இந்தியா முழுவதும் அவர் மேற்கொண்ட பயணங்கள் மூலம் அவருக்குத் தெரியவந்திருந்தது.
பிரிட்டிஷாரின் தரப்பில் இருந்து காந்தியடிகள் சொன்ன கூற்றுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. டாக்கா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் Auxiliary Committee of the Indian Statutory Commission-ன் சார்மன் பிலிப் ஹார்டாக் (Philip Hartog) அவர்களில் மிக முக்கியமானவர். 1918-ல் இருந்து 1930 வரையில் பிரிட்டிஷ் அரசு நியமித்த பல்வேறு கல்விக் குழுக்களில் உறுப்பினராகவும் பிலிப் இருந்திருக்கிறார். அந்த மாநாட்டிலேயே காந்தியடிகளைக் கேள்வி கேட்ட அவர் காந்தியுடன் மிகவும் விரிவாக கடிதப் போக்குவரத்தும் மேற்கொண்டார். காந்தியிடம் தன் கூற்றை நியாயப்படுத்தும்படியான ஆதாரங்களைக் கேட்டார்.
காந்தி சுதந்தரப் போராட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாலும் அடுத்த பல ஆண்டுகளை சிறையில் கழிக்க நேர்ந்ததாலும் அந்த ஆவணங்களைச் சேகரிப்பது சிரமமானதாக இருந்ததாலும் காந்தியால் கடைசிவரை தன் கூற்றை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியவில்லை.
இந்த இடத்தில் நாம் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். காந்தியடிகள் கல்வி தொடர்பாகச் சொன்ன விஷயங்கள் இரண்டு. இந்தியாவில் பாரம்பரியக் கல்வி சிறப்பாக இருந்தது என்பது முதலாவது விஷயம். அதை பிலிப் கேள்விகேட்கவில்லை. ஏனென்றால், அதற்கான ஆதாரங்கள் அவரிடம் இருந்தன. பிரிட்டிஷாரின் வருகைக்குப் பிறகு இந்திய பாரம்பரியக் கல்வி எனும் அழகிய மரம் அழிந்துவிட்டது என்ற காந்தியின் இரண்டாவது வாக்கியத்தைத்தான் பிலிப் மறுத்தார். அதற்கான ஆதாரங்களைத்தான் அவர் கேட்டார்.

யங் இந்தியா-வில் பஞ்சாபின் கல்வி நிலை பற்றிய பஞ்சாப் அரசாங்க அறிக்கைகளில் இருந்து இந்த உண்மையைத் தெரிந்துகொள்ள முடியும் என்று காந்தி பதில் சொன்னார். பஞ்சாபின் நிலையை மட்டும் வைத்து ஒட்டு மொத்த இந்தியாவின் நிலையையும் சொல்லிவிடமுடியுமா? காஷ்மிரிலும் ஹைதராபாத்திலும் பிரிட்டிஷ் இந்தியாவின் பிற பகுதிகளைவிட கல்வி குறைவாக இருப்பதன் காரணம் என்ன என்று ஹார்டாக் கேட்டார்.

காஷ்மிரில் கல்வி வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு அங்கு இஸ்லாமியர்கள் அதிகமாக இருப்பது ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று காந்தி யூகமாக ஒரு பதில் சொன்னார். அப்படியானால், ஹைதராபாத்தில் இந்துக்கள்தானே அதிகம். அங்கு ஏன் கல்வி விகிதம் குறைவாக இருக்கிறது என்று மடக்கினார் ஹார்டாக்.
தான் சொன்ன பதில் ஒரு யூகம் தானே தவிர இது பற்றி தெளிவான விரிவான பதிலை உங்களுக்கு நிச்சயம் சொல்கிறேன். பிரிட்டிஷாரால் இந்திய பாரம்பரியக்கல்வி சீரழிந்தது என்ற என் கூற்று ஒருவேளை தவறாக இருக்குமானால், அந்தச் செய்திக்கு எவ்வளவு முக்கியத்துவம் கிடைத்ததோ அதைவிடப் பெரியதொரு சபையில் என் மன்னிப்பைக் கேட்கிறேன் என்று காந்தி உறுதி அளித்தார். அதேநேரம் என் கருத்தை மறுக்கும்வகையில் உங்களிடம் ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால் அதை எனக்கு அறியத் தாருங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.
அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க, ஹார்டாக் புள்ளிவிவரத்தை அளித்தார். 1929-ல் பிலிப் ஹார்டாக் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் சேர்மனாக இருந்தபோது சமர்ப்பித்த ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த தகவல்களை காந்திக்கு அனுப்பிவைத்தார்.
இந்தியாவில் கல்வி பெற்றவர்களின் சதவிகிதம் 1911-ல் 12%. 1881-ல் அது 8%தான். 12 % என்பது பெரிய அளவு இல்லைதான். என்றாலும் எட்டு சதவிகிதத்தைவிட அதிகம்தானே. பிரிட்டிஷாரின் ஆட்சியில் இந்தியாவில் கல்வி குறையவில்லை. அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது என்று ஹார்டாக் சொன்னார்.
உண்மையில் இந்தியப் பாரம்பரியக் கல்வியை அழித்துவிட்டுத்தான் ஆங்கிலக் கல்வி புகுத்தப்பட்டது என்ற வகையில் இது உண்மையில் வளர்ச்சியே அல்ல என்பது வேறு விஷயம். ஆனால், காந்தி தனது நெருக்கடி மிகுந்த அரசியல் பணிகளாலும் சிறையில் அடைக்கப்பட்டதாலும் ஹார்டாகுக்கு பதில் அளிக்க முடியவில்லை. தனது சீடர் மகாதேவ் தேசாயிடம் யங் இந்தியா- இதழில் வெளியான பஞ்சாப் கல்வி அறிக்கை பற்றி ஹார்டாகுக்கு அனுப்பித்தரும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி அவரும் தவுலத் ராம் குப்தா எழுதிய தி டிக்ளைன் ஆஃப் மாஸ் எஜுகேஷன் இன் இந்தியா என்ற கட்டுரையை ஹார்டாகுக்கு அனுப்பிவைத்தார்.
அந்தக் கட்டுரையில் அவர் தெரிவித்திருக்கும் விஷயங்கள்:பிரிட்டிஷாரின் வருகைக்குப் பிறகுதான் நமது கல்வியின் தரம், பள்ளிகளின் எண்ணிக்கை, அறிஞர்களின் என்ணிக்கை அதிகரித்ததாகப் பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால், அது உண்மையல்ல. உண்மையில் பிரிட்டிஷாரின் வருகைக்குப் பிறகு கல்வியின் வீச்சு குறுகியது என்பதுதான் உண்மை.
இந்தியாவில் இருந்துவந்த கல்வி மிகவும் பாரம்பரியமானது, மதம் சம்பந்தப்பட்டது என்பது பிரிட்டிஷாருக்குத் தெரிந்திருந்தது. இந்தியாவில் இருந்த மசூதிகள், கோயில்களில் எதிலும்  பள்ளி இணைக்கப்படாமல் இருந்திருக்கவில்லை. கல்வி அளிப்பதும் பெறுவதும் மதம் சார்ந்த ஒரு கட்டாயமான கடமையாகவே இருந்தது. உயர் சாதியினர் மிகுதியாக இருந்த பகுதிகளில் சமஸ்கிருதத்தில் இலக்கணம், தர்க்கம், தத்துவம், சட்டம் போன்றவை கற்றுத்தரப்பட்டன. கீழ் சாதியினர் இருந்த பகுதிகளில் கல்வியானது சிறு வணிகர்கள், நில உடமையாளர்கள், விவசாயிகள் என சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் கல்வி தரப்பட்டது. ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு பூசாரி இருந்தார். அந்தப் பகுதி மக்களுக்குக் கல்வி தரும் பொறுப்பு அவருடையதாக இருந்தது.
இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை கல்வியானது மசூதிகள் மூலமாகவும் அறிஞர்கள் மூலமாகவும் தரப்பட்டன. இஸ்லாமிய பள்ளிகளில் இலக்கணம், தர்க்கம், இலக்கியம், நீதி, விஞ்ஞானம் ஆகியவை கற்றுத்தரப்பட்டன. கோயில்களுக்கும் மசூதிகளுக்கும் அரசுகள் நிதி உதவி செய்தன. அல்லது செல்வந்தர்கள் நன்கொடைகள் தந்தனர். ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க  ஒவ்வொரு கிராமத்திலும் நிலங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. 1835 வாக்கில் டபிள்யூ ஆடம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் வங்காளத்தில் ஒரு லட்சம் பள்ளிகள் இருந்ததாகத் தெரிவித்திருக்கிறார். அந்தப் பள்ளிகளை வளர்த்தெடுக்க பிரிட்டிஷ் அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று சாட்லர் கமிஷன் வெளியிட்ட அறிக்கை தெரிவித்திருக்கிறது.
பிரிட்டிஷ் அரசின் நோக்கம் வெகு தெளிவாக இருந்தது. மேல்தட்டு மக்கள் மத்தியில் மேற்கத்திய கலாசாரத்தையும் கல்வியையும் திணித்தால் அது அப்படியே கீழ்த்தட்டு மக்களுக்கு இறங்கிச் செல்லும் என்று தீர்மானித்திருந்தனர். எனவே, அதுவரை பாரம்பரியக் கல்விக்கூடங்களுக்கு தரப்பட்டுவந்த அனைத்து நிதி ஆதாரங்களும் அரசால் கையகப்படுத்தப்பட்டு புதிய மேல் நிலைக் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டது.

பிரிட்டிஷ் ஆட்சியில் கல்வித்துறையின் முக்கியப் பொறுப்பில் இருந்த சங்கரன் நாயர் தனது புகழ் பெற்ற அறிக்கையில் பிரிட்டிஷ் அரசின் சீர்திருத்தங்கள் இந்தியப் பாரம்பரியக் கல்வியை எப்படியெல்லாம் பாதித்தன என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். சர் பட்டம் பெற்ற அவர் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து தன் கருத்தைப் பதிவு செய்தது என்பது உண்மையில் மிகவும் அரிதாக நடந்த விஷயம். பெரும்பாலும் பிரிட்டிஷார் தமக்கு செல்லப் பிள்ளைகள் யார் என்று பார்த்துத்தான் தட்டிக்கொடுப்பார்கள். சங்கரன் நாயர் அவர்களில் முக்கியமான விதிவிலக்காக இருந்தார்.
பிரிட்டிஷ் அரசு மேல்நிலைக் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தியது. இரண்டாவதாக கல்வியின் கட்டணத்தை வெகுவாக அதிகரித்தது. இதனால், முன்பு அனைவருக்கும் இலவசமாகக் கிடைத்துவந்த கல்வியானது நின்றுபோனது என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதால் ஏழைகள் படிக்க முடியாமல் போனது குறித்து கேள்விகள் எழுப்பபட்டபோது அவ்வகையான (பிரிட்டிஷார் தரும்) கல்வியைப் பெற ஏழைகளுக்கு எந்த அவசியமும் இல்லை என்ற விட்டேத்தியான பதிலே கிடைத்தது. இப்படியாக கல்வியானது செல்வந்தர்களுக்கு மட்டுமேயானதாக பிரிட்டிஷாரால் ஆக்கப்பட்டது. உயர் சாதியினருக்கும் குமாஸ்தா பணிக்குத் தேவையான கல்வி மட்டுமே தரப்பட வேண்டும் என்பதில் பிரிட்டிஷார் தெளிவாகவே இருந்தனர்.
இந்த இடத்தில் நாம் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். பிரிட்டிஷாருக்கும் அவர்களுடைய வழிகாட்டிகளுமான கிறிஸ்தவ மத போதகர்களுக்கும் இந்து மதத்தின் மீது நல்ல அபிப்ராயம் கிடையாது. அவர்கள் தலித்துகளுக்கும் பிற்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் சாதியினருக்கும் பேருதவி புரிந்ததாக நம்பப்பட்டு வருகிறது. உண்மையில் இந்தியாவில் நவீன கல்வியை அறிமுகப்படுத்திய பிரிட்டிஷார் அந்தப் பிரிவினரே அதிக அளவில் கல்வி பெறும் வகையில் வழி செய்திருக்க வேண்டும். தங்களுடைய அரசியல் கோட்பாடுகளுக்கு இணங்க பிராமணரல்லாதாருக்குத்தான் முழுக்க முழுக்க கல்வியைத் தந்திருக்கவேண்டும். ஆனால், அப்படி அவர்கள் செய்யவில்லை. இங்குதான் அவர்களுடைய தந்திரம் உச்சத்தை எட்டுகிறது. அவர்கள் தலையையும் உடம்பையும் ஒன்றுக்கொன்று எதிராகத் திருப்ப நினைத்தார்கள். தாங்கள் இந்தியாவை விட்டுப் போன பிறகும் இந்தியர்கள் தமக்குள் சண்டையிட்டு வரவேண்டுமென்றால் இப்படியான திருகல் அவசியம் என்று நினைத்தனர். அதையே நடைமுறைப்படுத்தவும் செய்தனர்.
அப்படியாக அடிப்படைக் கல்வியானது அடித்தட்டு மக்களுக்குக் கிடைக்கக்கூடாது; அதி உயர் கல்வியானது மேல்தட்டு மக்களுக்குக் கிடைக்கக்கூடாது என்பதுதான் பிரிட்டிஷாரின் நோக்கமாக இருந்தது. உயர் கல்வி, ப்ரொஃபஷனல் கல்விகள், தொழிற்கல்விகள், தொழில்நுட்பக் கல்விகள் போன்றவை எல்லாம் பிரிட்டிஷாரின் தொழிற்சாலைகளுக்கு நன்மை பயக்கும் வகையிலும் உயர் பதவிகளில் பிரிட்டிஷ் அதிகாரிகளை நியமிக்கும் வகையிலுமே அமைக்கப்பட்டன.
இந்தியாவின் கல்வி பற்றிய வரலாறை எழுதுவது தொடர்பாக சங்கரன் நாயர் சொன்னதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்: வேட்டையாடியவர் வரைந்த சித்திரத்தை வைத்தே வேட்டை பற்றி நாம் இதுவரை புரிந்துகொண்டுவந்திருக்கிறோம். வேட்டையாடப்பட்ட மிருகம் ஓவியராக இருந்து வரைந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை நாம் பார்க்க வேண்டும். அதுதான் வேட்டை பற்றிய உண்மைநிலையை நாம் புரிந்துகொள்ள வழிவகுக்கும்.
(தொடரும்)
Share/Bookmark