மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 9
மேற்குலகம்தான் தொழில்நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் உயர்ந்தது என்பது ஏற்றுக்கொள்ளவைக்கப்பட்ட சித்தாந்தமாக இன்று இருக்கிறது. இந்திய தாகத்துக்கு இளநீரையும் மோரையும்விட சாக்கடைத் தண்ணீர் நிறத்திலான பெப்ஸியும் கொக்ககோலாவும்தான் உகந்தது என்று ஆக்கப்பட்டிருக்கிறது. ஆண்டில் 300 நாட்கள் சூரியன் சுட்டெரிக்கும் தேசத்துக்கு மேற்குலகம் ஒதுக்கித் தள்ளிய அபாயகரமான அணு மின்சாரம்தான் சிறந்தது என்று பெரும்பாலான இந்திய அறிவுஜீவி மற்றும் விஞ்ஞானி வர்க்கம் கிளிப்பிள்ளைபோல் கத்திக்கொண்டுவருகிறது. முன்னோர்களைப் பழிக்கும் சமூகம் வாரிசுகளைக் காவு கொடுப்பதில்தான் போய்முடியும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக நம் தேசம் ஆகிக் கொண்டிருக்கிறது.
கடந்த காலத்தில் நாம் யாராக இருந்தோம் என்பது நமக்குத் தெரியாமல் போனதால் வந்த விளைவுதான் இது. காலனிய ஆதிக்கம் என்பது வெறும் பவுதிக தளத்தில் மட்டுமே நடந்த ஒன்றல்ல. அது மக்களின் மனங்களையும் சேர்த்தேதான் அடிமைப்படுத்துகிறது. ஆதிக்கவாதிகள் போன பிறகும் அவர்களுடைய ஆட்சி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இறகுகள் வெட்டப்பட்ட கிளியானது கூண்டைத் திறந்துவிட்டாலும் பறந்து செல்லாமல், சீட்டை எடுத்துக்கொடுத்துவிட்டு தன் பழைய இடத்துக்குத் திரும்புவதுபோல் நாமும் சுதந்தரம் கிடைத்த பிறகும் எஜமான விசுவாசத்துடனே இன்றும் சிந்தித்து செயலாற்றி வருகிறோம். நேற்று காலனிய சக்திகள் நம்மை அடிமைப்படுத்தின. இன்று உலகமயமாக்கல் சக்திகள் நம்மை ஆட்சி செய்துவருகின்றன. இத்தகைய ஆட்சிகளின் வலிமை என்பது நம் கைகளைக் கொண்டே நம் கண்களைக் குத்த வைப்பதிலும் அப்படி கண்களை இழந்து அவர்கள் தரும் கண்ணாடிகளை அணிந்து கொள்வதுதான் உலகைப் பார்ப்பதற்கான சிறந்த வழி என நம்பவைப்பதிலும்தான் இருக்கிறது.
கடந்த காலத்தைப் பழிப்பது என்பது கடந்த காலத்தை முழுமையாகப் புரிந்துகொண்டு செய்யப்படும் ஒன்றாக இல்லாமல், அதுதான் முற்போக்கு என்ற பேதைமையில் முன்னெடுக்கப்படுகிறது. இன்று இந்தியாவின் மிக உயர்ந்த கல்வியைப் பெறும் வர்க்கமானது ஒன்று மேற்குலகைத் தேடி ஓடும் ஒன்றாக இருக்கிறது. அல்லது மேற்குலகின் நலனை இங்கிருந்தபடியே நிறைவேற்றித் தரும் ஒன்றாக இருந்துவருகிறது. படைப்பூக்கம் என்பதோ நமது தேவைகள் சார்ந்து சிந்திக்க வேண்டும் என்பதோ அறவே இல்லாமல், மேற்கின் மதிப்பீடுகளை அப்படியே ஏற்றுக்கொண்டு நடப்பதில் பெரு மகிழ்ச்சி அடைவதாக இருந்துவருகிறது. மேற்கின் ஆராதகர்களாக இருக்கும் அந்த இந்தியக் குழுவானது, அவர்களிடமிருந்து தேச பக்தியைக் கற்றுக்கொண்டு சொந்த தேசத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக இந்திய முகத்தை மறைத்து, மேற்கத்திய முகமூடியை அணிந்துகொண்டு பரிதாபத்துக்குரிய கோமாளியாக உலக அரங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது.
உலகமயமாக்கல் என்பது ஒவ்வொரு தேசமும் பரஸ்பர நலன் பெறும் வகையிலான பரிமாற்றத்தில் ஈடுபடுவதற்குப் பதிலாக ‘வளர்ந்த’ நாடுகள் வளரும் நாடுகளைக் கபளீகரம் செய்யும் ஒன்றாக ஆகிவருகிறது. அனைவருக்கும் நல்ல கல்வி, மருத்துவம், நீர் தேங்காத சாலைகள், பேரிடர் மேலாண்மை, கழிவுப் பொருள் மேலாண்மை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு என இன்று இந்தியாவுக்கு அந்நிய முதலீடும் தலையீடும் தேவைப்படும் எத்தனையோ துறைகள் இருக்க நமக்கு சற்றும் தேவைப்படாத துறைகளில் அந்நிய நிதி அபரிமிதமாகக் கொட்டப்படுகிறது.
எங்கோ கடலில் பெட்ரோல் ஆலை வெடித்து நூற்றுக்கணக்கில் பறவைகளும் மீன்களும் இறந்து போனதற்கு கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு கேட்கும் சாமர்த்தியசாலிகள், ஆயிரக்கணக்கில் மனித உயிர்கள் மடிந்து போன சம்பவத்தில் நிறுவனத்தை வேறு பெயரில் மாற்றிக் கொண்டு சட்டத்தின் இடுக்குகளினூடாக உடலைக் குறுக்கிக்கொண்டு செல்வதை வர்த்தக நிபுணத்துவமாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதைவிடக் கொடுமை, விபத்து ஏற்பட்டால் எங்களுக்கு பொறுப்பு இல்லை என்று எடுத்த எடுப்பிலேயே எழுதி வாங்கிக் கொள்ளும் ஒரு நிறுவனத்துக்கு வக்காலத்து வாங்கத்தான் எவ்வளவு பெரிய அறிவிஜீவிக் குழு. மரபணுவிலேயே வைரஸ் புகுந்துவிட்டதென்றால் நோயை எப்படி ஒழிக்க முடியும்?
சுயமாகச் சிந்தித்து வந்த காலத்தில் தொழில் நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் இந்தியா சிறந்து விளங்கியிருக்கிறது என்ற உண்மையானது இன்று யாரும் கேட்க விரும்பாத ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது. இந்திய தொழில்மயநீக்கமும் பிரிட்டனின் தொழில்மயமாக்கமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த ஒன்றுதான் என்று பண்டிட் மதன்மோகன் மாளவியா சொன்ன வார்த்தைகள் மிகவும் துல்லியமாக அந்த சரித்திர சோகத்தை சொல்லிவிட்டிருக்கிறது.
மேற்கத்திய விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியவற்றை இந்தியாவில் முடுக்கிவிடுவதற்காக 1916-18-ல் அமைக்கப்பட்ட இந்திய தொழில்துறை கமிஷனில் இந்திய தரப்பு அங்கத்தினராக இருந்த மாளவியா, கப்பல் கட்டுதல், இரும்பு உருக்குதல், நெசவு, விவசாயம் என பல்வேறு துறைகளில் கணிசமான சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் இந்தியாவின் தொழில் பாரம்பரியத்தை ஒரேயடியாக நிராகரிப்பதை எதிர்த்து தன் கண்டனத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். பி.என். பாஸு இந்தியாவின் தொழில்துறை பின்னடைவு பற்றிக் கருத்துக் கூறுகையில், இந்தியாவுக்கு நடைமுறை சார்ந்து சிந்திக்கும் மனிதர்கள் தேவைப்பட்ட போது ஆங்கிலோ சாக்ஸன் இலக்கணத்தை மனனம் செய்து ஒப்பிக்கும் பண்டிதர்களை பிரிட்டிஷார் இந்தியாவில் அறிமுகப்படுத்திய கல்வி உருவாக்கியது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
விஷ்வகர்மா மஹாஜன் குழுவின் செயலாளர் மேற்கத்திய பாணி தொழில்நுட்பத்தையும் விஞ்ஞானத்தையும் இந்தியாவில் கண்மூடித்தனமாகத் திணிப்பது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் கைவினைக் கலைஞர்களின் சமூகமானது இந்தக் கல்வியால் எந்தப் பயனும் பெறப்போவதில்லை. இந்திய பாரம்பரியத் தொழில் துறையில் இருந்து முற்றாக துண்டிக்கப்பட்டிருக்கும் இந்த அறிவிஜீவி வர்க்கமானது நம் சமூகத்துக்குப் பெரும் கேட்டையே விளைவித்து வருகிறது என்று வேதனையுடன் தெரிவித்திருக்கிறார். அந்த கமிஷனுக்கு முன்பாக சாட்சியம் அளித்த ஒரு ஆங்கிலேயர், இந்திய சாதி அமைப்பானது தொழில் மயமாக்கத்தில் ஆக்கபூர்வமான பங்களிப்பை ஆற்றியிருக்க முடியும். ஒவ்வொரு சாதியும் ஒரு தொழிற்சங்கம் போலச் செயல்பட்டிருந்தால் நல்ல பலன் கிடைத்திருக்கும். ஆனால், அந்த வாய்ப்பு நழுவிப்போய்விட்டது. ஒவ்வொரு சாதியும் கல்வி அமைப்பின் ஒரு அலகாகக் கருதப்பட்டிருந்தால் நடந்திருப்பதே வேறாக இருந்திருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் தொழில்நுட்ப மேன்மையானது இன்று ஏதோ இட்டுக் கட்டிச் சொல்லும் ஒன்றாக நம்மாலேயே பார்க்கப்படும் நிலை உருவாகிவிட்டிருக்கிறது. ஆனால், 16-18 நூற்றாண்டுகளில் இந்தியாவில் இருந்த ஐரோப்பிய விஞ்ஞான ஆய்வாளர்களுக்கு இந்தியா வேறொன்றாகத் தெரிந்திருக்கிறது. அவர்கள் இந்தியாவில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளும், காட்டிய அக்கறையும், கடனாகப் பெற்றுச் சென்றவையும் ஏராளம். நன்றியோடு அவர்கள் அப்போது பதிந்து வைத்திருக்கும் ஆவணங்கள், காதுள்ளவர்கள் கேட்கவும் கண்ணுள்ளவர்கள் பார்க்கவும் ஏற்ற வகையில் மூடப்பட்ட அறைகளில் இன்றும் காத்துக்கொண்டுதான் இருக்கின்றன.
இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட கலப்பை, ஐஸ் தயாரிக்கும் முறை, எஃகு தயாரிப்பு முறை, கட்டடங்கள் கட்டும் முறை, அதற்குப் பயன்படுத்திய பொருட்கள், தொழில்துறைகளில் பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருட்கள் இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவில் செய்யப்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரி என இந்தியா தொழில்நுட்பத்தின் முன்னோடியாக இருந்திருக்கிறது. பிரிட்டிஷாரின் ஆவணங்களில் உள்ள வார்த்தைகளின் வழியாக வரையப்படும் இந்தியாவின் சித்திரமானது பேரழகுடன் திகழ்கிறது. அதைப் படிக்கும்போது, சூரியனே ஆனாலும் அதைப் பார்த்தபடி நிற்பவருக்குத்தான் வெளிச்சம் கிடைக்கும். எதிர் திசையைப் பார்ப்பவருக்கு இருண்ட நிழல்தான் தெரியும் என்பது உறுதிப்படுகிறது.
0
Share/Bookmark
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக