சனி, 22 செப்டம்பர், 2012

வரலாற்று உண்மையும் உண்மை வரலாறும்

வரலாற்று உண்மையும் உண்மை வரலாறும்:
மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 1
இந்தியாவில் கல்வி என்பது பிரிட்டிஷாரால்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பாக கிறிஸ்தவ மிஷனரிகளால்.
இதுதான் இந்தியக் கல்வி பற்றிப் பெரும்பாலானோருடைய மனதில் கல்வெட்டுபோல் அழுத்தமாகப் பதிந்திருக்கும் வாசகங்கள். ஒரு பொய்யானது தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தால் காலப்போக்கில் அது உண்மையாகிவிடும் என்பதற்கான மிகச் சரியான உதாரணம் இது.
கொஞ்சம் தாராள மனம் கொண்டவர்கள் இந்தியாவில் கல்வி பழங்காலத்திலேயே இருந்திருக்கிறது. ஆனால், அது பிராமண, சத்ரிய, வைசிய சாதிகளுக்கு மட்டுமே தரப்பட்டது. அதிலும் பிராமணர்கள் மட்டுமே கல்வியின் முழுப் பயனையும் அனுபவித்து வந்திருந்தார்கள் என்று சொல்வார்கள். ஐரோப்பாவில் தொழிற்புரட்சி ஏற்பட்ட 18-ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை உலகின் எல்லாப் பகுதிகளிலும் நிலைமை அதுதான் என்றாலும் இந்தியாவைப் பற்றிச் சொல்லும்போது மட்டும் அதை கண்டனத்துக்குரியதாகச் சொல்வார்கள். (ஆனால், உண்மையில், இந்தியாவில் அதற்கு முன்பு கல்வி, அனைவருக்கும் தரப்பட்ட ஒன்றாக இருந்திருக்கிறது என்பது வேறு விஷயம்). அந்த 17-18-ம் நூற்றாண்டுவரை இந்தியா உலகப் பொருளாதார வல்லரசாக இருந்துவந்திருக்கிறது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று இருந்திருக்கிறது. தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கியிருந்திருக்கிறது. இலக்கியம், ஓவியம், இசை, கட்டடக்கலை போன்றவற்றில் உச்சத்தை எட்டியிருக்கிறது.
ஆனால், அந்த இந்தியாவானது கல்வி அறிவு இல்லாத தேசம். சாதி வெறிபிடித்த தேசம். பெண்ணடிமை நிறைந்த பகுதி. கணவன் இறந்ததும் மனைவியும் உடன் கட்டை ஏறிவிடுவார்கள். இந்தியா காட்டுமிராண்டிகள் வாழும் தேசம். யானை, பாம்பு, குரங்குகள் நிறைந்த நாடு. கிட்டத்தட்ட இந்தியாவை ஓர் விசித்திர பொருட்காட்சி சாலையாக, சீர்திருத்தப்பட வேண்டிய ஒன்றாகப் பார்க்கும் போக்குதான் மேற்கத்தியர்களுக்கு இருந்தது. அப்படியான ஓர் இந்தியாவைத்தான் அவர்கள் விரும்பினார்கள். எனவே, அதையே அவர்கள் கண்டடையவும் செய்தார்கள். ஆனால், உண்மையான இந்தியா என்பது முற்றிலும் வேறானதாக இருந்தது.
உடன்கட்டை ஏறுதல் தவறான நடைமுறை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், பிரிட்டிஷார் சொன்னதுபோல் அது அவ்வளவு அதிகமாகவோ நாடு முழுவதுமோ இருந்ததில்லை. அது இந்திய நாடு முழுவதும் இருப்பதாகவும், இந்து மதம் அதை நிர்பந்திப்பதாகவும் ஆயிரக்கணக்கான பெண்கள் உயிருடன் எரிக்கப்பட்டார்கள் என்றும் பிரிட்டிஷ் அரசு கூறியது. ‘சில விதிவிலக்குகளைத் தவிர, அனைத்து ஹிந்துக்களும் (எந்தப் படிநிலையில் இருப்பவராக இருந்தாலும்) உடன்கட்டை ஏறுவதைப் புனிதமானது என்றே எண்ணுகிறார்கள்’ என்பதுதான் உடன்கட்டை ஏறுதலைத் தடுக்க அரசாணை பிறப்பித்த வில்லியம் பென்டின்க் பிரபுவின் கண்டுபிடிப்பாக இருந்தது. அதற்கான எந்த ஆதாரங்களையும் அவர் தரவில்லை. அவருடைய இந்த வார்த்தைகளை எடுத்துக்கொண்டு பார்த்தால், உடன்கட்டை ஏறுவதை உயர்வாக எண்ணும் மனோபாவம் இருந்தது என்பதுதான் தெரியவருகிறதே தவிர அதையேதான் அனைவரும் பின்பற்றினார்கள் என்று அல்ல. நாம் உயர்வாக நினைக்கும் அனைத்தையும் செய்வதில்லையே! அப்போதைய ஆவணங்களிலும் உடன்கட்டை ஏறுதல் மிகக் குறைவாகவே நடைமுறையில் இருந்திருக்கிறது என்பதற்குப் போதுமான சான்றுகள் இருக்கின்றன.
உடன்கட்டை ஏறும் வழக்கம் சில வகுப்பினரிடையே, அதுவும் சில குடும்பங்களில் மட்டுமே இருந்திருக்கிறது. வட மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளைத் தவிர்த்து, இந்தியாவின் வேறு இடங்களில் இந்த வழக்கம் வெகு சொற்பமே. 1815-1828 இடையேயான பதின்மூன்று ஆண்டுகளில், பதிவு செய்யப்பட்ட உடன்கட்டை ஏறல்களில் 63 சதவிகிதம், கல்கத்தாவைச் சுற்றி நடந்திருக்கிறது. இதில் விநோதம் என்னவென்றால் அந்தப் பகுதி அப்போது ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்தது. 63% என்றதும் ஏதோ பெரிய அளவு என்றுதான் தோன்றும். ஆனால், 1824ல் பிரிட்டிஷார்களாலேயே தொகுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, வங்காள மாநிலத்தில் விதவைகளான 250,000 பெண்களில், சிதையில் ஏறியவர்களின் எண்ணிக்கை 600 தான். அதாவது 0.2 சதம் தான்.
வாரணாசி பற்றிய புள்ளிவிவரங்கள் நமக்கு இன்னும் ஆச்சரியத்தைத் தரும். 1820க்கும் 1828க்கும் இடையேயுள்ள ஒன்பது ஆண்டுகளில், 125 பேர்தான் உடன்கட்டை ஏறினார்கள். ‘உடன்கட்டை ஏறுவது மதரீதியான கட்டாய வழக்கமாக இருந்திருக்கவில்லை; இந்தியா முழுதிலும் அது நடைமுறையில் இருந்திருக்கவும் இல்லை’ என்று வாரணாசியின் நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார். இவைதான் பதிவு செய்யப்பட்டிருக்கும் உண்மைகள். ஆனால், ஹிந்துக்களின் வாழ்க்கை நெறியைப் பழிக்கவும் தங்களுடைய ஆதிக்கத்தை நியாயப்படுத்துவதற்கும் ஆங்கிலேயர்கள் இந்த வழக்கத்தைப் பெரிதுபடுத்திவிட்டார்கள். உடன்கட்டை ஒழிப்பு சட்டம் அமலுக்கு வந்ததும், மத போதகர் வில்லியம் கேரி, ‘…கடந்த இருபது நூற்றாண்டுகளில் முதன்முறையாக, இரத்தம் கலக்காமல் கங்கை கடலைச் சென்றடைந்தது’ என்று எழுதியிருக்கிறார்.
இந்த சொற்ப எண்ணிக்கை என்பது மட்டுமல்லாமல் உடன்கட்டை ஏறுதல் என்பது பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட விஷயம். அதை ஆணாதிக்கம் என்று மட்டுமே பார்ப்பது மிகவும் பிழையான பார்வை.
எதிரி மன்னனின் கைகளில் சிக்கி சின்னாபின்னமாவதைவிட போரில் கொல்லப்பட்டுவிட்ட கணவனுடன் சேர்ந்து தீயில் இறங்குவது மேல் என்று நினைத்த ராணிகள் உண்டு. சுமங்கலிகளுக்குக் கிடைக்காத பாக்கியமாகப் பெண்கள் பெருமிதமாக நினைத்ததுண்டு என்று கி.ராஜநாராயணன் தன் கோபல்ல கிராமத்தில் பதிவு செய்திருக்கிறார்.
அனுமரணம் என்ற பெயரில் பழங்காலத்தில் ஒருவர் இறந்ததும் அவருடைய மனைவி மட்டுமல்லாமல், அவர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த உறவினர்கள், நண்பர்கள், பணியாட்கள் என பலரும் உடன்கட்டை ஏறியிருக்கிறர்கள். இன்றும்கூட கொள்கைக்காகவும் தலைவருக்காகவும் தீக்குளிப்பது நடக்கத்தான் செய்கிறது. அரசியல்வாதிகளின் சுயரூபங்களும் பச்சோந்தித்தனங்களும் வெகுவாக அம்பலமாகிவிட்ட நிலையிலும் விசுவாசமான அப்பாவித் தொண்டர்கள் தீக்குளிப்பது நடக்கத்தான் செய்கிறது. இதற்குப் பின்னால் உள்ள உளவியல் நிதானமாக ஆராய வேண்டிய ஒன்று. ஆனால், கலகம் செய்பவர்களையும் அடங்க மறுப்பவர்களையும் விட்ச் ஹண்டிங் என்ற பெயரில் தீயில் தள்ளி எரித்த பின்னணியில் இருந்து வந்த பிரிட்டிஷாருக்கு உடன்கட்டை ஏறுதல் ஒரு ஆணாதிக்கச் செயலாக மட்டுமே பட்டதில் வியப்பில்லை. ‘காட்டுமிராண்டிகளை ரட்சிக்க’ அவர்களுக்குக் கிடைத்த நல்வாய்ப்பாக அதை பூதாகரப்படுத்தினார்கள். அதுவே இன்று உண்மையாக நம்பப்பட்டுவருகிறது.
இதேபோலத்தான் கொள்ளைக்காரர்களைப் பற்றி (Thug) காலனி ஆட்சியால் பெரிதுபடுத்தியும் திரித்தும் கூறப்பட்டது. இந்தக் கொள்ளைக்காரர்கள் சாதாரணமான திருடர்கள்தான். ஆங்கிலேயர்களால் வர்ணிக்கப்பட்டதில் பத்து சதவிகிதம்கூட அவர்கள் கொடூரமானவர்கள் அல்ல. வட இந்தியாவில் ஒரு குறுகிய நிலப்பரப்பில்தான் அவர்கள் இருந்தனர் (சம்பல் கொள்ளைக்காரர்களைப் போல). அவர்கள் பெரிய சமூக விரோதிகள் எனப் பெரிதுபடுத்திக் காட்டப்பட்டதால், வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு, முழு இந்திய மக்களுமே அந்தக் கொடிய கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்று எண்ணத் தோன்றும். அவர்களது ரகசியமான, கொலைகார நடவடிக்கைகளைப் பற்றி நாடகங்களும் நாவல்களும் உருவாக்கப்பட்டன. ‘தக்’ என்னும் வார்த்தையையும் ஆங்கில அகராதியில் சேர்த்துக்கொண்டனர்.
விவேகானந்தர் அமெரிக்காவுக்குச் சென்றபோது, இந்தியத் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைப் பிறந்ததும் ஆற்றில் தூக்கி எறிந்துவிடுவார்களாமே என்று அங்கிருந்தவர்கள் கேட்டிருக்கிறார்கள்.
இந்தியா குறித்த பிழையான சித்திரம் எப்படி இத்தனை காலம் நிலைபெற்று வந்திருக்கிறது என்பதற்கான விடை தெரியவேண்டுமானால், இந்தியாவின் வரலாறாக நாம் படித்துவருவது யார் எழுதிய வரலாறை என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டாலே போதும். கடந்த காலத்தைத் தெரிந்துகொள்வதன் நோக்கம் நிகழ்காலத்தை சீரமைத்து, வரும் காலத்தை வளமாக்குவதுதான். நேற்றைய இந்தியா மிகவும் சிறப்பாக இருந்தது என்பது இன்றைய இந்தியாவை மேம்படுத்த உதவுமென்றால் அந்தவகை புரிதலையே ஏற்றுக்கொள்ளவேண்டும். நேற்றைய இந்தியா மிகவும் தவறானது என்ற பார்வை ஒருவேளை நாளைய இந்தியாவை மேம்படுத்த உதவும் என்றால் அதையும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இரண்டின் நோக்கமும் நாளைய இந்தியாவை வளப்படுத்துவது என்பதாகவே இருக்கவேண்டும்.
ஆக்குதல் அதுவே நோக்கம். அழித்தல் அல்ல; சீரமைத்தல் அதுவே இலக்கு. சீர் குலைத்தல் அல்ல. இதுதான் வரலாறு எழுதப்படுவதன் நோக்கமாக இருக்கவேண்டும். ஆனால், துரதிஷ்டவசமாக இந்தியாவின் விஷயத்தில் அப்படி நடக்கவில்லை.
0
வரலாறு என்பதை, நடந்ததை நடந்த விதத்திலேயே பதிவு செய்யும் ஆவணம் என்று ஒரு வசதிக்காக வரையறுக்கலாம். அதன் அடிப்படையில் பார்க்கும்போது திருநெல்வேலியின் வரலாறு என்ற நூலை எழுதிய பிஷப் கால்ட்வெல் சொன்னதுபோல் இந்தியர்களுக்கு சரித்திர பிரக்ஞை மிகவும் குறைவுதான். பழங்கால மன்னர்களைப் பற்றி புலவர்கள் புகழ்ந்து பாடிய பாடல்களை வரலாற்று ஆதாரமாகக் கொண்டால் தொலைந்தோம்! கிட்டத்தட்ட அந்தப் பெயரில் ஒருவர் வாழ்ந்தார் என்பதை மட்டும்தான் ஏற்றுக்கொள்ளமுடியும். மற்றவை கலை அழகு, கற்பனை.
உலகில் பழங்காலத்தில் எழுதப்பட்ட எல்லா சமூக வரலாறுகளிலும் இப்படியான கற்பனை கலந்துதான் இருந்திருக்கிறது. எனவே, நமது வரலாற்று அணுகுமுறையைப் பற்றி விமரரிசிக்கும்போது அதே காலகட்டத்தில் உலகில் பிற பகுதிகளில் நிலைமை எப்படி இருந்தது என்பதையும் கணக்கில் கொள்ளத்தான் வேண்டும். மேலும் நம்மைப் பற்றி நாம் எழுதியதில் சுய பெருமிதம் கலந்து இருக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே, நமது வரலாறு அந்தவகையில் அந்நியர்களின் வார்த்தைகளில் இருந்து உருவாக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
ஆனால், அந்நியர்கள் எழுதும் விஞ்ஞானபூர்வ வரலாறும் அப்படியே ஏற்றுக்கொள்ளத் தகுந்ததல்ல.  ஏனென்றால், அவற்றில் பெரும்பாலானவற்றுக்குப் பின்னால் அவர்களுடைய அரசியல் நலனே வெளிப்படையாகவோ மறைவாகவோ பொதிந்து காணப்படும். ஆனால், நாம் அந்தத் தவறைத்தான் செய்கிறோம்.
வரலாற்று நதி மீது நாம் பிரிட்டிஷாரின் படகைக் கொண்டு பயணம் செய்கிறோம். அது, நதியின் கரையில் இருக்கும் சொற்ப பாழ் நிலங்களையும் முள்ளும் புதரும் நிறைந்த சதுப்பு நிலங்களையும் மட்டுமே வெகு அருகில் கொண்டு சென்று காட்டும். நதிக்கரையோர நந்தவனங்களையும் தோப்புகளையும் வயல்வெளிகளையும் வெகு தூரக்காட்சிகளாக இருண்ட பின்னணியில் காட்டிவிட்டுச் சென்றுவிடும். அவர்கள் நம் கையில் தரும் தொலைநோக்குக் கருவியும் விசித்திரமான ஒன்று. நாயை ஓநாயாகக் காட்டும் தன்மைகொண்டது.
நம் முன்னே இரண்டு வரலாறுகள் உள்ளன. ஒன்று சுய பெருமிதமும் கற்பனையும் கலந்தது. இன்னொன்று அரசியல் உள்நோக்கம் மிகுந்தது. உண்மை என்பது இந்த இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது. அந்நியர்களில் அரசியல் நோக்கம் இல்லாமல் எழுதியவர்கள் யார் என்பதையும் நம்மவர்களில் மிகைப்படுத்தாமல் எழுதியவர்கள் யார் என்பதையும் பார்த்து இரண்டையும் ஒருங்கிணைப்பதன் மூலம் உண்மைக்கு நெருக்கமாகப் போக வாய்ப்புக் கிடைக்கும்.
0
இது பற்றி நாம் சிந்திக்க ஆரம்பிக்கும்போது நம் மனதில் தோன்றவேண்டியவர்களில் முக்கியமானவர் தரம்பால். காந்தியவாதியான தரம்பால், ஒரு வித்தியாசமான கலவையிலானவர். இந்தியா மீது பெருமிதம் கொண்ட நபர். அதே நேரம் ஆங்கிலேயரைப் போல் விஞ்ஞானபூர்வ ஆதாரங்களை முன்வைத்துப் பேசக்கூடியவர்.
இந்தியாவில் பழங்காலத்தில் கல்வி எப்படி இருந்தது என்பதை மிக அழுத்தமாக, மிக விரிவாக பிரிட்டிஷாரின் ஆரம்பகால ஆவணங்களைக் கொண்டு இவர் விவரித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக, அவர் முன்வைத்திருக்கும் தரவுகளில் பெரும்பான்மை மதராஸ் பிரஸிடென்ஸியைச் சார்ந்தவை. இருந்தும் அந்த ஆவணங்கள் போதிய கவனத்தை இந்தியாவில், ஏன் தமிழகத்தில் கூடப் பெறவில்லை. அதற்கான காரணம் மிகவும் எளிமையானது.
முதலாவதாக அந்த ஆவணங்கள் பிரிட்டிஷார் இந்தியாவுக்கு வந்தபோது பிரிட்டனில் கல்வி எப்படி இருந்ததோ அதைவிடச் சிறப்பானதாக இந்தியாவில் இருந்திருக்கிறது என்று சொல்கிறது.
இரண்டாவதாக, அந்தக் கல்வி பெற்றவர்களில் பிற்படுத்தப்பட்ட சாதி, தாழ்த்தப்பட்ட சாதி என்று இன்று அடையாளப்படுத்தப்படுபவர்களே அதிக எண்ணிக்கையில் இருந்திருக்கிறார்கள் என்று சொல்கிறது.
பொய்களால் மறைக்கப்பட்டிருக்கும் அந்த உண்மையை தரிசிக்க நீங்கள் தயாரா? தரம்பாலின் வழிகாட்டலில் இந்தியாவின் உண்மையான கடந்த காலத்தை அலசுவோம்.
(தொடரும்)
Share/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக