சனி, 22 செப்டம்பர், 2012

தங்கத்தைப் பார்த்து இளிக்கும் பித்தளை

தங்கத்தைப் பார்த்து இளிக்கும் பித்தளை:
மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 7
இந்தியாவில் கல்வி இப்படி அனைத்து சாதியினரையும் உள்ளடக்கியதாக இருந்த காலகட்டத்தில் பிரிட்டனில் கல்வி எப்படி இருந்தது என்பதையும் பார்ப்பது அவசியம்.
ஃபிரான்சிஸ் பேகன், ஷேக்ஸ்பியர், மில்டன், நியூட்டன் என பல மேதைகள் உருவாகியிருந்தார்கள் என்றாலும் 18-ம் நூற்றாண்டு வரை கல்வியானது மேட்டுக்குடியினருக்கு மட்டுமானதாகவே இருந்தது (விதிவிலக்குகள் நீங்கலாக). இந்த நிலைமையானது புராட்டஸ்டண்ட் இயக்கம் வலுப்பெற ஆரம்பித்ததும் மேலும் இறுக்கமடைந்தது. 16-ம் நூற்றாண்டு நடுவில் இதற்காக ஒரு சட்டமே இயற்றப்பட்டது. ஆங்கில பைபிளானது தேவாலயங்களில் படிக்கப்படக்கூடாது. தனிப்பட்ட முறையிலான படிப்பு என்பது அரச பரம்பரை, பிரபுக் குடும்பங்கள், வர்த்தகர்கள் ஆகியோருக்கு மட்டுமே தரப்படவேண்டும். கைவினைக் கலைஞர்கள், விவசாயிகள் போன்ற சேவைப் பணியாளர்களுக்கு அது முற்றாகத் தவிர்க்கப்படவேண்டும் என்று சொல்லப்பட்டது. விவசாயியின் மகன் விவசாயத்தில் ஈடுபடவேண்டும். கைவினைக் கலைஞர்களின் மகன் அந்தத் தொழிலில் ஈடுபடவேண்டும். மேட்டுக்குடியினரின் மகன் நிர்வாகம், சட்டம் போன்றவற்றைக் கற்றுக் கொள்ளவேண்டும். ஏனென்றால் பிற எல்லா தேசங்களையும் போலவே நமக்கும் விவசாயிகளின் தேவை இருக்கவே செய்கிறது. எனவே, சமூகத்தின் எல்லா பிரிவினரும் பள்ளிக்குச் செல்லத் தேவையில்லை என்று எட்டாம் ஹென்றி 1542-43-ல் வெளியிட்ட அரசாணை தெரிவிப்பதாக, ஏ.ஈ.டோப்ஸ் எழுதிய எஜுகேஷன் அண்ட் சோஷியல் மூவ்மெண்ட்ஸ் 1700-1850 எனும் நூல் தெரிவிக்கிறது.
17-ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இருந்து சாதாரண மக்களுக்கான சாரிட்டி பள்ளிகள் (Charity School) மெதுவாக வர ஆரம்பித்தன. இந்தப் பள்ளிகளின் முக்கிய நோக்கம், உடலுழைப்புப் பணியாளர்களின் மதம் சம்பந்தமான அறிவைக் கொஞ்சம்போல மேம்படுத்த வேண்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் தேவாலயத்தில் நடக்கும் வேதாகம வாசிப்புக்கு உகந்தவர்களாக ஆக்கவேண்டும் என்பதுதான்.
ஆனால், இந்த சாரிட்டி பள்ளி இயக்கமானது ஆரம்பகட்ட உற்சாகத்துக்குப் பிறகு மெள்ள தேக்கமடைந்துவிட்டது. 1780 வாக்கில் சண்டே ஸ்கூல் மூவ்மெண்ட் (Sunday School movement) என்பது ஆரம்பித்தது. அனைவருக்கும் கல்வி என்பது இதன் நோக்கமாக இருந்தது. ஆனால், இந்தக் காலகட்டத்திலும் மிஷனரி நோக்கிலான கல்வியை மட்டுமே பிரதானமாகக் கொண்டிருந்தது. ஒவ்வொரு குழந்தையும் பைபிள் வாசிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதுதான் அதன் முத்திரை வாக்கியமே. ஞாயிற்றுக் கிழமைகளில் தேவாலயம் நிரம்பிவழிய வேண்டும் என்ற முக்கியமான லட்சியமானது இந்தவகைப் பள்ளிகளை நாடு முழுவதும் ஆரம்பிக்க வைத்தது. சில காலம் கழித்து, தினசரி (பகல் நேரப்) பள்ளிகள் (Day School) மீது கவனம் விழ ஆரம்பித்தது. அதன் பிறகு கல்வி முன்பைவிட வெகு வேகமாகப் பரவ ஆரம்பித்தது. இருந்தும் 1834-ல் நகரப் பள்ளிகளில் மத போதனை, எழுதப் படிக்க கற்றுக்கொள்ளுதல், அடிப்படை கணிதம் ஆகியவை மட்டுமே கற்றுத் தரப்பட்டிருந்தது. ஒரு சில கிராமப்புறப் பள்ளிகளில் தீய விளைவுகள் ஏற்பட்டுவிடும் என்ற பயத்தால் எழுதக் கற்றுக் கொடுக்கப்படவில்லை.
தினசரி பள்ளி இயக்கமானது 1802-ல் இயற்றப்பட்ட பீல் சட்டத்தின் மூலம் முடுக்கிவிடப்பட்டது. இதன்படி, சிறுவர்களை வேலைக்கு நியமிக்கும் எஜமானர்கள், அந்தச் சிறுவர்களுக்கு ஏழுவருட பணிக் காலத்தில் முதல் நான்கு வருடங்களுக்கு எழுத, படிக்கவும் கணிதமும் கற்றுத் தர ஏற்பாடு செய்ய வேண்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் தேவாலயத்தில் மத வகுப்பு நடக்கும்போது அந்தச் சிறுவர்கள் அதில் பங்குபெறவைக்கவேண்டும் என்று சட்டம் சொன்னது. ஆனால், இந்த சட்டம் அவ்வளவாக அமலாகவில்லை.
இந்தக் காலகட்டத்தில்தான் ஆசிரியர் ஒருவரின் முறையான கண்காணிப்பு மூலமான கல்வியானது (ஜோசஃப் லன்காஸ்டர், ஆண்ட்ரூ பெல் ஆகியோரால் முன்மொழியப்பட்டது. இது இந்திய கல்வி முறையில் இருந்து கடன் வாங்கப்பட்டிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது) நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. 1792-ல் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை 40,000 ஆக இருந்தது. 1818-ல் அது 6,74,883 ஆக அதிகரித்தது. 1851-ல் 21,44,377 ஆனது. 1801 இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை தனியார் மற்றும் பொது பள்ளிகள் 3363. படிப்படியாக அதிகரித்து 1851-ல் 46,114 ஆக உயர்ந்தது.
ஆரம்பத்தில் கல்வி போதனையானது மிகவும் சுமாராகவே இருந்திருக்கிறது. ஜோசஃப் லன்காஸ்டர் இது பற்றிச் சொல்லும்போது, ஆசிரியர்கள் அறியாமை நிறைந்தவர்களாக இருந்ததோடு பள்ளிக்கு குடித்துவிட்டு வருபவர்களாகவும் இருந்தனர் என்கிறார். எத்தனை வருடம் கல்வி கற்றனர் என்பது பற்றியும் டேப்ஸ் தன் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். மாணவர்கள் ஒழுங்காக பள்ளிக்கு வருவதில்லை என்பதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தாராள மனதுடன் பார்த்தால் மாணவர்கள் படிக்கும் வருடங்களின் எண்ணிக்கை 1835-ல் ஒரு வருடமாக இருந்தது 1851-ல் இரண்டு வருடமாக அதிகரித்திருக்கிறது!
18-ம் நூற்றாண்டில் பொதுப் பள்ளிகளின் நிலைமை மேலும் மோசமடைந்திருக்கிறது. உதாரணமாக 1797 ஜனவரியில் ஸ்க்ரூஸ்பரி (Shrewsbury) பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா? சுமார் 3 அல்லது நான்கு! சில பல கடுமையான முயற்சிகள் எடுக்கப்பட்ட பிறகு அந்த எண்ணிக்கை 20 ஆக பின்னர் உயர்ந்ததாம். ஈடன் பள்ளி (Eton) போன்ற இடங்களில் எழுத்துப் பயிற்சியும் கணிதமும் கற்றுத் தரப்பட்டிருக்கிறது. ஆங்கில, லத்தீன் புத்தகங்கள் கற்றுத் தரப்பட்டுள்ளன. ஐந்தாம் வகுப்பில் புராதன புவியியல், அல்ஜீப்ரா போன்றவை கற்றுத் தரப்பட்டிருக்கின்றன. அந்தப் பள்ளியில் தொடர்ந்து படித்தவர்கள் யூக்ளிட் ஜ்யோமிதி பற்றி ஓரளவுக்குப் படித்தனர். ஆனால், 1851 வரை கணிதம் பள்ளிப் பாடத்திட்டத்தின் முக்கிய அங்கமாக ஆகியிருக்கவில்லை. அப்போதும் கூட கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் அந்தப் பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் என்று சொல்ல முடியாத நிலையே இருந்திருக்கிறது.
ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்கள் எல்லாம் நாலந்தா, தட்சசீலத்தில் இருந்தவற்றைப்போல் முக்கியமானதாகவே இருந்திருக்கின்றன. இந்தியாவுக்கு குறிப்பாக 1773க்குப் பிறகு வந்த மேற்கத்திய பயணிகள், அறிஞர்கள், நீதிபதிகள் எல்லாம் இந்தப் பல்கலைக்கழகங்களில் படித்தவர்களாகவே இருந்தனர். ஆனால், 1800 வரையில் அடிப்படைக் கல்வி என்பதே பொது மக்கள் அளவில் வெகு குறைவாகவே இருந்திருக்கிறது. இந்தியாவில் அந்த நேரத்தில் தரப்பட்ட கல்வியும், அந்தக் கல்வியைப் பெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருந்திருக்கிறது. அனைத்து பிரிவினரும் கல்வி பெற முடிந்திருக்கிறது. கற்றுத் தரப்பட்ட பாடங்களும், கல்வி பெற்ற வருடங்களும் அதிகமாகவே இருந்திருக்கின்றன. கலை இலக்கியங்களில் படைக்கப்பட்ட மாபெரும் சாதனைகள் மட்டுமல்லாமல் அடிப்படைப் பொதுக் கல்வியிலும் சிறந்து விளங்கிய இந்தக் கல்வி முறையைத்தான் மிகவும் பின்தங்கியதாக பின்னால் வந்த பிரிட்டிஷார் சொன்னார்கள்.
தங்கத்தைப் பார்த்து பித்தளை கேலி செய்ததைப் போல். ஆனால், இந்த உண்மைகள் எல்லாம் மறைக்கப்பட்டுவிட்டதால், நம் மனங்களில் தங்கத்தின் மதிப்பு தெரியாமலேயே போய்விட்டிருக்கிறது. பித்தளையின் பின்னால் பித்துப் பிடித்தபடி இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறோம்.
(தொடரும்)
Share/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக